ஒரு பொன் மாலைப்பொழுது

பசுமை நடை  இன்னீர் மன்றலில் தான் முதன்முறையாக பவாவின்  பேச்சினை கேட்டேன்..  திருவண்ணாமலை போகும்போது  பவாவின் பெரிய புகைப்படங்களை  தாங்கிய கதை கேட்கலாம்  வாங்க  போஸ்டர்களை நின்று  வாசித்து கடந்து இருக்கிறேன்.  அவ்வளவுதான்  பவாவின் சில கட்டுரைகளை , விகடனில் வெளிவந்த சில கதைகளை வாசித்து இருக்கிறேன்,  ஆனால் பவா வின் வாழ்வியல் முறைகளை பலர் சொல்ல கேட்டு பரவசபட்டு இருக்கேன்.  வளர் பேச்சுக்கலைஞன் பிரிட்டோ  பவாவின் கதைகளை கேட்டு விட்டு  ஒரு பதிவு எழுதி இருந்தான், எனக்கு பிரிட்டோ  ரொம்பவும் பிடித்துப்போனான்.அதே நேரம்   வினோத் , தியாகராஜன் நடத்திய புகைப்படபயிற்சிக்கு  போன விக்கியும், ஆனந்தும் , அருணும் குவாடிஸில்  பவாவின் ஒரு கதையாடலை கேட்டுவிட்டு  ரொம்பவே  சீடு பிள்ளைகளிடம் பிரஸ்தாபித்து கொண்டிருந்தனர். பத்தாயத்தில் கடந்த ஆண்டு வசந்த முகாம் நடத்த  ஷைலஜா அம்மாவிடம் பேசி விட்டு மானஸிடம் அலை பேசியில் பேசி கடைசியில்இன்னொரு முறை போயிக்கலாம். என்ற திட்டம் கைவிட்டாயிற்று,

ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்  பெருங்கதையாடலை  கேட்க பெரும் ஆவலாதிகளுடன் தயாரான போது கடைசியில் கிளம்ப முடியாமல் போனது.

பசுமை நடை 100 இல் கீழகுயில்குடி சமணர் படுகை நோக்கி நடந்து கொண்டிருக்கும் போது ஷைலஜா அம்மாவிடம்  என்னை பற்றி சொல்லிகொண்டு. மீண்டும் ஒரு வீடு ஒரு உலகம் ஒரு மனிதன்  பெருங்கதையாடல் மதுரையில் வாய்ப்பு இருக்குமா? ஜே. கே வோட ஹென்றி ரசிகர்கள் 10 பேர் இருக்கோம். நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என்றேன். இல்லை  கார்த்திக்  இப்பவே 50,0000 பேர் அதை பார்த்துவிட்டார்கள். மீண்டும் கடினம் , அடுத்த கதையாடல்  மதுரையில்தான். பசுமைநடை  ஏற்பாடு செய்கிறது.  ஆகா மக்ழ்ச்சி , ஆர்வகோளாராக என்ன நாவல் என்றேன். முகுந்தன் நாவலாக இருக்கலாம். தெரியவில்லை என்று புன்னகைத்தவாறே  முன்னகர்ந்தார். .

அன்று மாலை  தமிழ் சங்கத்தில் உரைகள் பெருகியிருந்த  கூட்டத்தில்  பால் ச்க்காரியாவின் மலையாள சிறுகதையை (தேன்) கரடியை மணந்த  பெண் கதை  ஒன்றை சொல்லி  அரங்கத்தை  ஷைலஜா அம்மா .உயிர்ப்பாக்கி இருந்தார். முன்னமே பிரிட்டோ அந்த கதையினை எங்கள்  மதுரை சீடு விழுதுகள் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தான்.எனக்கு இப்போது பவா , ஷைலஜா  , பிரிட்டோ  என  பிடித்தமானவர்களாக இருந்தனர். பவாவின் ஆளுமை ஒரு தன் பின்தொடர்தலை செய்கிறது. என நினைக்க நினைக்க சந்தோசம் .

இதோ  இடக்கை  பெருங்கதையாடல்

ஏன் இடக்கை  பெயரிட வேண்டும். இடக்கைக்கு தான் முக்கியத்துவம் இல்லை. இடது என்பதுதான் இடர்பாடாய் இருக்கிறதே.இடதுதான்  நல்அரசியல் பேச வைக்கிறது. இடதுதான் நல்ல கலை இலக்கியம் குறித்து கவலைப்படுகிறது. வலக்கை தான் ரத்தம் படிந்ததாகி இருக்கிறது. வலக்கை தான் அதீத பாவங்களை செய்கிறது. இடக்கை பற்றி பேச வேண்டுமே.

பவாவின் பெருங்கதையாடல்  வாசிப்பினை தூண்டுகிறது. வாசிப்பவனை  உற்சாகப்படுத்துகிறது. ஊக்கப்படுத்துகிறது. செயல்பட வைக்கிறது. முக்கியமாக .புதிய வாசகனை உருவாக்குகிறது. .வாசிப்பின் அடுத்த கணம் அதை கொண்டாடுவது, கதையின் கருவை பேசு பொருளாக்குவது. . படைப்பாளியின் மனநிலையை  அருகிலிருந்து தரிசிப்பதற்கு , ஒரு சூழலை உருவாக்குவது. .

கதையினை படித்து விட்டு எப்படி அடுத்த சூழலுக்குள் தகவமைத்து கொள்வது. ஒரு பேச்சு வேண்டிருக்கிறது. ரசித்த வாக்கியங்களை  மீள் ஒருமுறை சொல்லி கொள்ள வேண்டியிருக்கிறது. வாழ்வியல் அனுபவங்களை  பொருத்தி கொள்ள , பகிர்ந்து கொள்ள  வேண்டுமல்லவா?

ஒரு  எழுத்தை வாசிக்கும் முன் ஒரு அறிமுகமும், வாசித்த பின் கொண்டாட்டமும் பகிர்தலும் எத்தனை அவசியம் என் காத்திரமாக பவா  மதுரையில் நிகழ்த்திவிட்டு சென்றுள்ளார்,

IMG_3999

 

என் வீட்டில் எல்லோரும், மதுரை சீடு இல் குழந்தைகள் , இளைஞர்கள் என 60 பேர்  பெருங்கதையாடலை ரசித்து மகிழ்ந்தோம். சில புத்தகங்கள் வாங்கினோம். அரங்கு நிறைந்த கூட்டம்.. மங்கிய வெளிச்சம், ஒரு காலத்தில் எல்லாமுமாக இருந்த அமெரிக்கன் கல்லூரி திறந்த வெளி அரங்கில் மரக்கிளைகள் எங்கள் முன் நெற்றியை மறைக்கும் வித மான அழகான இடத்தில் அமர்ந்து இருந்தேன்.

இன்னொன்றை சொல்ல வேண்டும் , ஒரு  பெருங்கதையாடல்  போஸ்டருக்கு  பல  நாவல்கள், எழுத்தாளர்கள் அடங்கிய பட்டியலுடன் ,ஒரு கேள்வி குறியுடன்  ஒரு போஸ்டர். என்னை ரொம்பவே  வசீகரித்தது. ஒரு போஸ்டர்  எத்தனை விதமான கதை சொல்லல் தனமான நாவல்கள் இருக்கின்றன , தெரியுமா? எங்கே சொல்லுங்கள், எங்கே  முன் தீர்மானத்துக்கு வாங்க பார்ப்போம், படிச்சிட்டு வந்துடுங்க பார்ப்போம்.

என் கல்லூரியில் சுதானந்தா, சுவாமிநாதன்,போத்திரெட்டி, பிரபாகர் , சுந்தர்காளி என்ற தேர்ந்த கதை சொல்லிகள் இருந்தனர். கல்லூரி கட்டிடங்களின் கதையினை, மரங்களின் கதையினை, கலை,சினிமா, அரசியல் இலக்கிய வரலாறை  சொல்ல சொல்ல கேட்டு கொண்டே இருக்கலாம்.

உன்னை போல் ஒருவன்  நாவலை மட்டும்  ஒரு பருவம் முழுக்க  வாசித்தும், உருகியும், மருகியும், ஒராயிரம் கதைகளை , வரலாறை, ஜே. கே வை  கொண்டாடிய சுதானந்தா,  சுஜாதாவின் நகரம். கி.ராவின் நகரம், மின்னல். தி.ஜாவின் அம்மா வந்தாள், , வண்ணதாசனின்  கலைக்க முடியாத ஒப்பனைகள்.என்று கணீர் என் தன் கந்த குரல்களால் ரசனையை ஊட்டி வளர்த்த பிரபாகர்

மணிமாறன் சொன்ன  சு,ரா வோட ஸ்டாம்பு ஆல்பம், ஜன்னல்  கதைகள், புளிய மரத்தின் கதை( ஒரு  பருவம் முழுக்க  குறிப்பிட்ட படைப்பாளர்  என்ர தலைப்பில் சலிக்க சலிக்க சு .ராவை  படிக்க வைத்தார் மணிமாறன்) என எல்லாவற்றையும் கிளர்த்த வைத்தன, வம்சியின் போஸ்டர், பவாவின் பெருங்கதையாடல்.

என்னோட சிறந்த வாத்தியார்கள்  பருவம் துவங்கிய முதல் இரு நாடகளிலே  பாடம் தொடர்புடைய பட்டியலை தருவதை நான் இன்னும் மெச்சி கொண்டிருக்கிறேன். அதிலும் பிரபாகர், .படிக்க வேண்டிய கவிதை நூல்கள், சிறுகதை தொகுப்புகள். நாவல்கள் , சினிமாக்கள் பட்டியலை தந்து அழகான ஓவிய எழுத்துகளால் கருப்பு மையால் எழுதி கொடுப்பார். நாங்கள் அதை ஜெராக்ஸ் எடுத்து கொள்ளலாம்.அதை நினைவு படுத்தியது வம்சியின் போஸ்டர் ஒன்று, பாராட்டும் அன்பும் வம்சி.   கதையாடலின் நோக்கத்தை பிரதிபலிக்கும் போஸ்டர். இப்படி ஒரு பொது நிகழ்வுக்கு ஒத்துசைந்த ஸ்டாலின், பாலகிருஷ்ணன், .சரோஜினி மேடம் போன்றோர் பாராட்டுக்குரியவர்கள். கல்வியாளர்களின் வேலை  வகுப்பறைகளுக்கும் வெளியேயும் உள்ளதல்லவா?  நிகழ்வு நடத்த  ஒரு இடமும், அதற்கான அனுமதியும்தான் எத்தனை முக்கியமானது, பாராட்டுக்கள்.

இன்னிக்கு பிரிட்டோ  பக்கத்தில் உட்கார்ந்து கதை கேட்கலாமுனு ஆசை. அவனுக்கு போன் போட்டு வருவியா?  அண்ணே  ஊருக்கு போறேன். சொல்ல வர முடியாதுனு தெரியும் , மணிக்கு போன் போட்டுட்டு  சும்மா பேசிட்டு  அய்யாகிட்ட பேசினேன்.

நிகழ்ச்சி  போனவுடன் ஒரு பதைப்பாவே இருந்துச்சு. பசுமை நடையின் தேனீரும்,சமோசவும் எவ்வளவு வேகமாக  உள்ளே போக முடியுமோ அவ்வளவு வேகமாக போய் சேர்ந்தது. . அந்த கேலரியில் ஓரிடம் தேடி மொத்த மதுரை சீடு குடும்பத்துடன் உடகார முனைந்தேன்.   பக்கத்தில சுந்தர் அய்யா மோன நிலையில் இருந்தாரு, அவர தொந்தரவ செய்ய மனசில்ல. முத்துகிருஸ்னன், புவனா மேம் , தென்னவன். பாலகிருஷ்ணன், மெய்யம்மை  ஸ்டாலின்,பூர்ணிமா என வெண்முகில் என எல்லாரையும் பார்த்தாச்சு. பேசியாச்சு. ஆதவனும், அரவிந்தனும்  மேடையில் விளையாடிகிட்டு இருந்தாங்க, ஆதவன்  பொறுப்பா   நிகழ்வுக்கு தயாராகி கொண்டிருந்த பாவாவை போட்டோ எடுத்து கொண்டிருந்தான்.

வம்சியிலிருந்த புத்தக்கங்களில் மூன்றை வாங்கி கொண்டேன். .இரண்டு பவாவுடையது. ஒன்று ஷைலஜா அம்மாவுடையது. காலேஜ் கேம்பஸ் என்றைக்கோ மனதுக்கு அன்னியமாகி விட்டு இருந்தது.2007க்கு பிறகு நான்கைந்து முறை போயிருந்தாலும் பதைபதைப்பு எப்போதும் உள்ளிருக்கும். இன்றைக்கும் அது ஏனோ  உள்ளிருந்தது.  எந்நாளும் கார்த்திகை புத்தகத்துள் மூழ்கி  பாலுமகேந்திராவையும் , ஜெ.கேவையும்  படித்து முடித்து இருந்தேன். இதோ அரங்கம் நிறைய ஆரம்பித்தது. ப்ரபா அய்யா என்யாவுடன்  மொத்த கேலரியின்  மறு முனையில் செட்டிலாகி இருந்தார்.

மொத்த குடும்பத்தின் அருகாமையை விட பிரபா அய்யா-வின் அருகாமை தேவையாக இருந்தார். ஓடோடி  போய்  வேர்க்க , வியர்க்க அவர் அருகில் உட்கார்ந்து கொண்டேன். நிகழ்ச்சி துவங்கியது.

நாள், வாரம் என சைக்கிளிலிருந்து இரங்காது மணிகணக்கில் சாகசம் செய்யும் ஒரு  கூத்தாடி , ஒரு பொழுதில் சிறுநீர் கழிக்க ஒதுங்கியவன் ஒரு சிறு பிராயத்துகாரனிடம் மாட்டி சாகச ரகசியம் உடைபட்ட மன நிலையில் கதைசொல்லியான தனக்கும் இருக்கிறது. என தன் நிலை அடக்கத்துடன் கலகலப்பாக நன்றாக கதை சொல்லிடவேண்டு என்ற அவாவுடன் கதைக்கு போனார்.   பேசி வாய் வலிக்கலாம். நடந்து கால் வலிக்கலாம். காது  எவ்வளவு வேண்டுமானாலும்  ரசனையானவற்றை கேட்கும். நமக்கு காதுகள் வேண்டும். பவா  சிறு இடை வெளியில் ஒரே ஒரு மடக்கு தண்ணீர் தேவையுடன் கதையாடினார். அவருக்கு வாய் வலித்து இருக்கும். பல காதுகளுக்கு ஒரு வாயின் பேச்சு. வலிமை மிகுந்த சொற்கள் மட்டுமே தன் பூரண பலமாக கொண்ட எ.ஸ்.ராவையும் நினைவில் கொண்டு வந்தார்.. நாவலின் இறுதியில் பேசி கொண்ட இரு  கவிகளின் வழியே  அரசு  வலிமை மிகு வார்த்தைகளை , கவிதைகளை ,கண்டு அஞ்சும் என நாவலின் 300 மேற்பட்ட  கதாபாத்திரங்களில்  இரண்டு  கவிஞர்களை கொண்டு  தன் கதை சொல்லலிருந்து விழுந்த சொற்கள் கொண்டு தன் எழுத்தாளர் என்ற நிலைக்கு  நியாயம் செய்தார்.

IMG_4006

அவுரங்கசீப் , அஜ்வா., தூமகேது, சூபி ஞானி  . ஆகிய நால்வர் வாழ்வின் வழியே மனித வாழ்வின் அத்தனை கசடுகளுக்கும் அமைதியின்மைக்கும்,  பேரானந்தங்களுக்கும் தீர்க்கதர்சனமான  தேடல்களுக்கு வழிகாட்டினார்.   வயது மூப்பால் இறந்து போக இருக்கிறவனுக்கு நினைவுகள் மட்டுமே மிஞ்சும். வேறு என்ன மிஞ்சும். நல்லனவற்றை மட்டுமே செய்பவனுக்கு என்ன மாதிரியான நினைவுகள் இருக்கும்.. துரோகங்களை ,துயரங்களை, மரணங்களை, ரத்த வாடைகளை , வஞ்சகங்களை வழங்கியவனுக்கு  என்ன மாதிரியான ஆசுவாசம் மிஞ்சும்.  பள்ளி பாடங்கள், மதனுடைய வந்தார்கள் வென்றார்கள், இந்திராபாரத்தசாரதியுடைய  அவுரங்கசீப் சுகுமாறனோட அவுரங்கசீப்.  எஸ்.ராவோட   இடக்கை அவுரங்கசீப்  என பார்க்கிறபொழுது. அவுரங்கசீப் வரலாறை  இப்போதும் எல்லா அரசியல் தலைமைக்கும் பொருத்தி பார்க்க முடிகிறது.

ஹிட்லரையும். அவுரங்கசீப்பையும்  அவர்களையும் ஆய்ந்து படிக்க வேண்டி இருக்கிறது. அவர்களைப் போல்  நாம் இருந்து விடக்கூடாது. என்பதற்காக. பவா-வின் கதை சொல்லலில் அவுரங்கசீப்பின் மேல் கழிவிரக்கம் மேலிடுகிறது. தன் இறுதி தருணத்தில் தன் கையால் செய்த தொப்பியை  ச்கோதரா என்ற அழைத்தவனிடம் சேர்த்திடு.. என்  தொப்பி செய்து விற்ற பணத்தில்தான் என் அடக்கம் செய்திருக என அஜ்வா விடம் சொல்லி கொண்டிருக்கும் போது.  எஸ்.ரா. பவா அவுரங்கசீப் என மனித மாந்தர்கள் மேல் நாம் சுரக்கும் பேரன்பின் ஊற்றொன்று பொங்கி வழிவதை  அரங்கிலிருந்தவர்கள் உணர்ந்து இருப்பார்கள். இரண்டு மணி நேர கதை சொல்லலில் மொத்த கூட்டத்தையும்  வசீகரிக்கவேண்டும். படைத்தவனின் செய் நேர்த்தியையும் குலைக்காது கதை மாந்தனின் ஜீவனையும்  சொல்ல நியாயம் செய்ய வேண்டும் . பவாவுக்கு அந்த நேர்த்தியை .எழுத்தாளர்களின்  அந்தியந்த வாசக மன நிலைதான் கொடுத்து இருக்க வேண்டும்.. எழுத்தாளரை, வாசகரை கொண்டாடும்  உள்ளம்  அவரை இன்று பெரும் உயிர்ப்போடு  இயங்க வைக்கிறது.

உங்களுக்கும்  ஒரு அனுபவம் இருக்கும் இருக்கும். பால்ய வகுப்பறை தோழர்கள். தோரனையோடு, விவரணையோடு  சினிமா பார்த்து வந்த கதையை, வீட்டுக்கு புதியதாய் வந்த பொருள்., விருந்தினர். ஊர் போய் வந்த கதையை வாயில் வரும் இசையோடு, பெருஞ்சத்ததோடு. சிரிப்போடு, கேலியொடு, தற்பெருமையொடு சொல்ல கேட்டிருப்போம். சொல்பவனின் ரசனை கேட்பவனுக்கு பொசு பொசுனு இருக்கும். பொறாமையா இருக்கும்.,ஆதங்கமா இருக்குமுல.

இங்கு பவாவோட மன நிலை நமக்கும் தொத்திக்குது, நான் படிச்சேன். அனுபவிச்சேன். நீங்களும் என் ஜாய் பண்ணுங்க, என்ற அவரின் மன நிலை போற்றத்தக்கது.

படித்தவனுக்கும் மீண்டும்  புதிய புதிய திறப்புகளை உ ருவாக்கி விடுகிறது. பவாவின் சொற்கள்.

முக்கியமாக  தன்னை அழுது கரைத்து கண்ணீர்  போதையேற்றும் பெண்ணின் கதை  பெரும் பாரமாக இருந்தது. அழும் பெண்ணின் கண்ணீர் இன்னும் போதையாக இருக்கிறது..யம்மாடி  ஓர் நாவலில் தான் எவ்வளவு கதைகள். தூமகேதுவின் கதையை சீக்கிரமாக சொல்லி முடிக்கட்டும் என மன அவஸ்தையை உருவாக்கிவிட்டு இருந்தார்.  சாமானியனின் வாழ்வு அரை மணிநேரத்தில் எப்படி சொல்வது. எவ்வித குற்றமும் செய்யாத ஒருவனின் வாழ்வு நீதியையும் அமைதியையும் தேடி அலைந்து கொண்டிருப்பவனின் வாழ்வை எப்படி சொல்லி முடிப்பது, அவிரங்கசீப் கையால் செய்த தொப்பி , பவள மல்லி மாலை ஒன்று தூமகேதுவை வந்தடைகிறது. நம்பிக்கை இருக்கிறது..மனிதம் மிச்சம் இருக்கிறது  சொற்கள் கொண்டு எளிய வாழ்வு வாழ்ந்து முடித்தவளுக்கு இன்னும் ஆயிரமாயிரம் சிவப்பு ரோஜா மலர்கள் அவளுடைய சமாதிக்கு காலம் வைத்து நினைவில் கொண்டிருக்கிறது. என்ற எ.ஸ்.ராவின்  எழுத்தின் ஆன்மாவை  கதை கேட்டவர்களுக்கு கடத்தி தன் கதையாடல் முடித்தார். பவா..

நிகழ்வின் துவக்கத்தில் பவா அரங்கில் எல்லோருக்கும் முதுகு காட்டி உட்கார்ந்து ரிலாக்சாக ஒரு முன் தயாரிப்பில் இருந்த போது.சிலர் அவரை தூரத்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்தனர். ஆதவனும் வெகுதூரத்தில் ஓடோடி போய் ஒரு புகைபடம் எடுத்து வந்தான். ஒரு சிலர் வாங்கிய புத்தகத்தில்  கையெழுத்து  வாங்கி கொண்டிருந்தனர்..பெரும்பான்மையோர்  அவரை தொந்தரவு செய்யாதவர்களாய். கதை கேட்க தயாராகி கொண்டிருந்தனர்..

இப்ப கதை முடிஞ்சதும் சிலர் அனுபவங்களை பகிர தொடாங்கினர், முத்துகிருஷ்ணன் மனம் நெகிழ்ந்து பேசி முடித்து. ஷைலஜா அம்மா நன்றி சொல்லி முடித்ததும் நான்கில் மூன்று பங்கு  2 மணி நேரம் கதை சொன்ன ஆளை இன்னும் என்ன  பேசி தொந்தரவு  செய்வது என மிக வேகமாக கதை கேட்ட துயரம் , பரவசம், பெருமூச்சு. நம்பிக்கை, மகிழ்ச்சி, ஆனந்தம் என பலவகையான கலவையில் கலைய துவங்கியது. மீதி ஒரு பங்கு கூட்டம் இருக்கே  பவாவை போய் அப்பி கொண்டது. கட்டி கொள்வது, வாஞ்சையுடன் பேசுவது,சிலாகிப்பது, விம்முவது , புகைப்படம் எடுப்பது என கலந்து கட்டி உற்சாகம் கரை புரண்டியது. அதை மட்டும் சொல்லி கொண்டே போகலாம்.னானும் அந்த கூட்டத்தில் நானும் ஒருவன். அதிலிருந்து ஒருத்தன் காகித அட்டை பை ஒன்றை பவாவிடம் நீட்ட அவர் அதை வாங்கி உள்ளே என்ன என்று பார்க்க அதில் பவாவுக்கு ஒரு சட்டையும், வேட்டியும் இருந்தது. கொடுத்தவனுக்கும், பவாவுக்கும் பெரிய உரையாடல் இல்லை . இருவரும் உணர்ச்சிகரமான  மனோநிலையில் இருந்தனர். நான் கொடுத்தவனின் முதுகில் செல்லமாக தட்டி கொண்டிருந்தேன். அது சிவா, மாதவன் டீம் இருந்து மதுரை கலைததிருவிழாவுக்கு வேலை பார்த்தவன்.தியாகராஜா காலேஜில் ஆங்கில இலக்கியம் படிச்சுட்.டு இருக்கான். எனக்கு பரவசம். எனக்கு பிரிட்டோ, மாதவன்,  இந்த சிவா  மாதிரி பசங்கள பார்க்க பார்க்க , நினைக்க நினைக்க பரவசம், எழுத்தை, வாசிப்பை, எழுத்தாளர்களை கொண்டாடுகிற ஆட்கள். குறிப்பாக இளைஞர்கள்

எழுத்தாளனை கொண்டாடும் எழுத்தாளன், எழுத்தாளனை கொண்டாடும் எழுத்தாளனை ,கதை சொல்லியை , கதாநாயகனாக, நண்பனாக , தகப்பனாக, சகோதரனாக என எல்லாமுமாக இந்த இளைஞர்கள் பவாவை கொண்டாடுகிறார்கள். பவா தன் முன்னோடிகளை கொண்டாடுகிறார். என்ன செய்கிறமோ அது கிடைக்கும் திரும்ப. பவாவுக்கு கிடைக்கிறது. நான்  பவாவோடு சேர்ந்து  சிவாவுடனும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டேன்.

IMG_4026

இந்த கூட்டம் போக இன்னொரு கூட்டம்இருந்தது பவா பயணப்படும்போது சேர்ந்து பறப்பவை போல. இவர்கள் பவா, ஷைலஜா, வம்சி, மானஸி, டீமோட அதீத பிரியர்கள். சில பர்தா அணிந்த பெண்கள் அப்பா,என்று பவாவை பார்த்து கரைகிறார்கள். பல ஊர்காரர்கள் பழைய கதைகளையும், ஊர் திரும்புதலையும் பேசி மாய்கிறார்கள். இந்த குழு  பவாவை இரவு நான் போய் தூங்குறேன்பா என்று சொல்லும் வரை கலையாது. .

மனதில் நான் சொல்லி கொண்டது போல இங்கும் சொல்லி  கொண்டு  முடிக்கிறேன். இலக்கிய வட்டம், வாசகர் வட்டம்,  அறிவு ஜீவி கூட்டம்  என குறுகி கிடக்கும் இலக்கியத்தை, மறந்து போன இலக்கிய ஆளுமைகளை  பரந்துப்பட்ட அளவில் சொல்ல அற்புதமான முறையாக கதையாடலை  வாயில் எடுத்து இருக்கிறார் பவா, ஜே,கே, குமரி ஆனந்தன், குன்றகுடி அடிகளார்,  தா. பாண்டியன். தமிழருவிமணியன். நெல்லை கண்ணன். பாரதி கிருஷ்ணகுமார்  போன்றோரின் மணிகணக்கான  பேச்சில் மயங்கி கிடந்து இருக்கிறேன். மேடைகலைவாணர், நன்மாறன், அறிவொளி, பாரதி பாஸ்கர், தென்கச்சி சுவாமிநாதன்  என் மருகி கிடந்து இருக்கிறேன்.. நேரடியாக ஒரு முறை கி,ராவின் கதை சொல்லலை கேட்டு இருக்கிறேன். நூற்றுகணக்கான குழந்தைகளுக்கான கதை சொல்லிகளின் கதைகளை கேட்டு இருக்கிறேன். உண்மையில் பெரியவர்களுக்கான கதை சொல்லியான பவாவின் கதைசொல்லலால் மீண்டும் பல ஆண்டுகளுக்குப்பிறகு உயிர்க்கிறேன். ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம் நாவலை இன்னுமொரு முறை  வாழ்வில் முயன்று பவாவை மதுரையில் சொல்ல வைத்து. என்னை அர்த்தபடுத்திகொள்ளுவேன் .நன்றியும் அன்பும் பவா

 

Advertisements

மதுரை சீடு குழந்தைகள் திருவிழா

49499996_2033757476706498_648753457146101760_o

அண்மையில் முகப்புத்தகத்தில் மார்கழி உற்சவம் குழந்தைகள் திருவிழாவிற்கான அழைப்பிதழை பார்த்தபோது தமிழ் நாடகங்கள் என்ற உடனே மனதுக்குள் ஒரு விதமான பூரிப்பு. காரணம் ஹைதராபாத்தில்; தமிழ் நாடகங்கள் பார்ப்பதென்பது மிகவும் அரிதான விடயம் அது மட்டுமில்லாமல் குழந்தைகள் நாடகத்திருவிழா என்றதும் பல வகையான எண்ணங்கள் எனக்குள் அசைபோட்டன. இதனை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என்ற ஆசையில் இருந்த போது அதனை செயற்படுத்தி தந்தவர்கள் தினேஷ் மற்றும் யாழ்கலை மையம் புதுச்சேரி கோபி அண்ணா அவர்கள். இவ்வாறு மார்கழி உற்சவத்தினை ஒருவழியாக சென்றடைந்தபோது ஆரம்பமே நான் கற்பனை செய்ததிலிருந்து சற்று மாறாகவே   உற்சவம். பார்வையாளர்களை வரவேற்பதிலிருந்து அங்கு ஓடியாடி வேலை செய்பவர்கள் எல்லோருமே சிறியவர்கள் மற்றும் இளையவர்கள்;;. அவர்களுடைய சுறுசுறுப்பும், அயராத உழைப்பும் இவர்களையெல்லாம் சரியான வழியில் நெறிப்படுத்திக் கொண்டு இருக்கும் மதுரை சீடு அமைப்பினுடைய இயக்குனர்கள் கார்த்திக் அண்ணா மற்றும் இளவரசி அக்கா இவர்கள் எல்லோருடைய சங்கமமே இந்த மார்கழி உற்சவத்தின் வெற்றியென அங்கு போன ஓரிரு நாட்களிலேயே என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

முதல் இருநாட்கள் புதிய இடம், புதிய மனிதர்கள் என அவர்களோடு இணைவதில் சற்று தயக்கங்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் என்னோடு பழகிய விதமும்,உபசரித்த விதமும் என்னை அவர்களிலிருந்து பிரித்துப்பார்க்க இயலவில்லை, நாழிகைகள் நகர நகர அது என்னுடைய நிகழ்வு என்ற மனநிலை என்னை தொற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட ஆறு நாட்கள் அவர்களுடனேயே சேர்ந்து தங்கி அவர்களின் பயணத்தின் ஒரு சிறு துரும்பாக இருந்ததன் விளைவாக என்னால் பல விடயங்களில் நல்லதொரு அனுபவத்தினை பெறக்கூடியதாக இருந்தது.

ஒரு குழந்தைகள் திருவிழா எடுத்து நடத்துவதன் பொறுப்புக்களையும், அதன் சிரமங்களையும், அவற்றை அவர்கள் செவ்வனே கையாண்ட முறையினையும் என்னால் கண்ணூடாக பார்க்கக் கூடியதாக இருந்தது. மதுரை சீடு குழந்தைகளையும், இளைஞர்களையும் வைத்துக் கொண்டு ஐந்து நாள் குழந்தைகள் திருவிழாவினை அவர்கள் பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு நாட்களும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடாத வகையில் வடிவமைத்திருந்தார்கள்.

ஒவ்வொரு நாட்களும் மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகும் குழந்தைகள் திருவிழா இரவு 7.30 மணிவரை நடைபெற்றது. சில இடங்களில் குழந்தைகள் திருவிழா என்பார்கள் அங்கு குழந்தைகள் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள். ஆனால் இங்கு குழந்தைகள் பார்வையாளர்களாக மட்டுமல்லாமல் ஆற்றுகையாளர்களாகவும், செயற்பாட்டாளர்களாகவும் சில நேரங்களில் ஆசிரியர்களாகவும் கூட செயற்பட்டார்கள். குழந்தைகளிடம் இருந்து கற்றுக்  கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கிறது  என்ற உண்மையினை மதுரை சீடு குழந்தைகள் மூலம் நான் அடிக்கடி உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.

நேரமுகாமைத்துவம், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல், உதவிசெய்தல், சுறுசுறுப்பு, நல்ல விடயங்களை மற்றவருக்கு சொல்லிக் கொடுத்தல், வெளிப்படையான பேச்சு என இன்னும் பல விடயங்களை சொல்லிக் கொண்டே செல்லலாம் ஆரம்பத்தில் மதுரை சீடு என்பது ஆதரவற்ற குழந்தைகள் பராமரிப்பு அமைப்பென எண்ணிய போது அங்கு சென்றதன் பிற்பாடுதான் அது ஒரு அறிவோடு கூடிய ஆக்கத்திறன் செயற்பாட்டு மையம் என விளங்கியது. அமைப்பை சுற்றியுள்ள பிரதேசங்களில் வாழ்கின்ற பாடசாலை மற்றும் கல்லூரியில் கல்வி பயில்கின்ற மாணவர்களை கல்லூரி மற்றும் பாடசாலை முடிந்ததன் பிற்பாடு மாலை முதல் இரவுவரை தினசரி அவர்களது வீட்டுப்பாடங்களைக்கவனித்தல், பாடங்களைச்சொல்லிக்கொடுத்தல், ஆக்கத்திறன் சார்ந்த இணை பாடவிதானங்களில் ஈடுபடவைத்தல் என அவர்களை நாளைய பொறுப்புமிக்க சமூகமாக நல்வழிப்படுத்துகின்ற நற்பணிமையம் என என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது.

இதில் அங்கு கல்வி கற்று நன்நிலை அடைந்த மாணவர்கள் அங்கேயே தொண்டராசிரியர்களாக இருப்பது சிறப்பிற்குரிய விடயமாகும். மாணவர்களுக்கென நூலகம், தரங்களுக்கு ஏற்ப வகுப்பறைகள் என அவர்களுக்கு பலவகையான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். மதுரை சீடு அமைப்பினரின் இந்த தொடர் பயணம் கார்த்திக் அண்ணாவின் அயராத உழைப்பிலும் முழுமூச்சிலும் இருபது ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கின்றது. அதன் விளைவே இந்த மார்கழி உற்சவம் 2018 குழந்தைகள் திருவிழா. இதற்கு முன்பாக பல நிகழ்வுகள், நாடகங்கள், பயிற்சிப்பட்டறைகள் எனப் பலவற்றை செய்து இருந்தாலும் ஐந்து நாட்கள் கொண்ட நாடக விழா செய்வது இதுவே முதல்முறை.

குழந்தைகள் திருவிழாவிற்கு ஏற்றாற்போல காந்தி மியூசியத்தில் உள்ள குமரப்பா குடிலினை ஒவ்வொரு நாட்களும் வித்தியாசமான முறையில் கிடைப்பவற்றைக் கொண்டு மாற்றியமைத்த விதம் அவர்களுக்குள் இருக்கும் கற்பனை வளத்தினை பறைசாற்றிய ஓர் அம்சமாகும். இவை மட்டுமல்லாது புத்தகக்கடைகள், தீன்பண்டக்கடைகள் என குழந்தைகள் திருவிழா பார்வையாளர்கள் மனதில் வேறொரு தளத்திற்கு சென்றிருக்கும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை. வழமையான நிகழ்வுகள் போல் தலைமை உரை,சிறப்புரை போன்ற ஆரவாரங்கள் எதுவும் இல்லாமல் விளையாட்டு, இராதாகிருஷ்ணன் அவ்ர்களின் குழந்தைகள் பாடல் போன்றவற்றுடன் ஆரம்பமான திருவிழாவின் முதல் நாளில் சென்னை, கனவு வெளியினை சேர்ந்த ஆழிவெங்கடேசன் அவர்களுடைய சிந்துபாத் கடல்பயணம் என்ற ஓராள் நாடகம் ஆற்றுகை செய்யப்பட்டது.

இரண்டாவது நாளினை சிறப்பிக்கும் முகமாக மூன்று ஆற்றுகைகள் கண்களுக்கு விருந்தளிக்கக் காத்திருந்தன. மாலை 4.30 மணி தொடக்கம் 5.30 மணிவரை சிறார்களின் ஆக்கத்திறன் சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பின்பு கதையும் விளையாட்டும் எனும் தலைப்பினுள் ஆற்றுகை ஒன்றினை நிகழ்த்தியிருந்தார் பெங்களுர், மேஜிக் கார்பெட்டை சேர்ந்த திருமதி.அகிலா அவர்கள். அதனைத் தொடர்ந்து மதுரை சீடு குழந்தைகளின் அன்னை மொழி நிழல் பொம்மலாட்டம் இடம் பெற்றது. இதனைத் நெறிப்படுத்தியிருந்தார் திரு.திலகராஜன் (ஆசிரியர்: மதுரை) அவர்கள். அடுத்த நிகழ்வாக அரங்கேறியது மதுரை சீடு குழந்தைகளுடைய மானுடம் வென்றது என்ற நாடகம் இதனை இயக்கியிருந்தார் திரு.ராஜ்குமார் (ஆசிரியர் : மதுரை)

இதில் மதுரை சீடு குழந்தைகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆற்றுகைகள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. ஒவ்வொரு நாளின் இறுதியிலும் அடுத்த நாள் நிகழ்வுகளுக்கு யார்? யார்? பொறுப்பெடுத்துக் கொள்வது என்பதில் கார்த்திக் அண்ணா மிகவும் அதிக கவனம் செலுத்துவார். அந்தவகையில் மூன்றாவது நாள் கை வண்ணங்கள், தூரிகை வண்ணங்கள், காகிதத்தொப்பிகள் என குழந்தைகளுக்கு வண்ணமயமான நாளாக அமைந்திருந்தது. இதில் எனக்கு சில விளையாட்டுக்களை சொல்லிக்கொடுத்து அவர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கான வாய்ப்பினை வழங்கியிருந்தார் கார்த்திக் அண்ணா. அதுமட்டுமல்லாமல் மதுரை சீடு குழந்தைகள் தங்களுக்குத் தாங்களே வழிகாட்டியாக மாறி பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடில்லாமல் காகிதங்களில் பலவகையான தொப்பிகளை தாங்களே செய்து மற்றவர்களுக்கு வழங்கியது என்பது அவர்களது தலைமைத்துவ, ஆளுமையினை உணர்த்துகின்ற ஓர் விடயமாக அமைந்திருந்தது.

மூன்றாவது நாளின் முதல் ஆற்றுகையாக அமைந்தது மதுரை சீடு குழந்தைகளின் ஒயிலாட்டம். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆற்றுகையாக தஞ்சை உதிரி நாடக நிலத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் அவர்களது கோமாளியின் குதிரை என்கின்ற ஓராள் நாடகமானது அரங்கினை அலங்கரித்திருந்தது. பின்பு கலைஞர் கௌரவிப்பு, இரவு போசணம் என இனிதே நிறைவு பெற்றது மூன்றாவது நாள் குழந்தைகள் திருவிழா.

நான்காவது நாள் திருவிழாவானது இன்னும் மெருகூட்டப்பட்ட முறையில் மாறுபட்ட பல நிகழ்வுகளுடன் களைகட்டியது. தென்னோலை மற்றும் பனையோலைகளுடன் கூடிய கை வேலைப்பாட்டினால் ஆன தலைக்கவசம், கிளி, காற்றாடி என இன்னும் பலவகையான வடிவங்களினை நான்கு மணித்தியாலங்களிற்கு மேலாக தொடர்;ச்சியாக இருந்த இடம் விட்டு அகலாது அதனை சிறப்பாக செய்து பிள்ளைகளுக்கு வழங்கியிருந்தார் திரு.திலகராஜன் அவர்கள். அதுமட்டுமல்லாமல் காகிதங்களைக் கொண்டு உடைகளை உருவாக்கும் பொறுப்பானது எனக்கு வழங்கப்பட்டது. நான் சிறுவர்களுக்கு உதாரணமாக ஒரு உடையினை மட்டும் செய்து காட்டத் தொடங்கிய போது அவர்கள் தாங்களாகவே தங்களுக்கென பிடித்த உடைகளை தெரிவு செய்து கொண்டு என்னுடைய எந்த உதவியும் இல்லாமல், தன்னிச்சையாக என்னைவிட சிறப்பாக செய்திருந்தார்கள்.

இந்த செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருந்த அதே தருணத்தில் வேறொரு இடத்தில் வண்ணம் தீட்டல், ஒட்டுச்சித்திரம், களிமண் கைவண்ணம் என்பன சிறார்களுக்காக ஒழுங்கமைக்கப்பட்டு வெகுசிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. இவ்வாறான கோலாகலங்களின் மத்தியில் ஆற்றுகைகள் ஆரம்பமாகக் காத்திருந்தன. முதல் ஆற்றுகையான மதுரை சீடு இன் இரண்டு குட்டி ஜாம்பவான்களின்( கமலேஷ், ஜெய்கணேஷ்) சிலம்பாட்டம் நடைபெற்றது. இது பார்த்தவர்கள் அனைவரையும் பிரமிப்பில் தள்ளிய ஆற்றுகையாக அமைந்தது.

அடுத்ததாக கல்வியின் திணிப்பால் பிள்ளைகள் படும் அவஸ்தைகளை அருமையான மெட்டில் பாடி அசத்தியிருந்தார் தங்கை வானவில் அவர்கள். இதனைத் தொடர்ந்து அரங்கு கண்டது நெல்லை தாமிரபரணி கலைக்குழுவினை சேர்ந்த திரு.மதியழகன் அவர்களின் கதை சொல்லும் கலை. மனம் கசியும் பாடல்களும்.அர்த்தமுள்ள கதைகருவும் கொண்டது, மதியழகன் ஐயாவின் ஓராள் நாடகம்.

இவரது ஆற்றுகையினைத் தொடர்ந்து அரங்கேறியது சென்னை, திணைநிலவாசிகள், திரு.பக்ரூதின் அவருடைய நெறியாள்கையில் மதுரை சீடு ஆசிரியத்தொண்டர் ஸ்ரீமான் வாசிம்கான்அவர்களின் நடிப்பில் உருவான வாருங்கள் வண்டவாளங்களை சாப்பிடுவோம் என்னும் ஓராள் நாடகம். இவ்வாறான சிறப்பான ஆற்றுகைகளுடன் இனிதே கழிந்தது நான்காம் நாள்.

அன்றைய நாளின் இரவுப் பொழுதில் அடுத்த நாளிற்கான நிகழ்ச்சிநிரல் பற்றி கலந்துரையாடப்பட்ட போது கார்த்திக் அண்ணா என்னிடம் கேட்டுக் கொண்டார். பத்து நிமிட நாடகம் ஒன்றை மதுரை சீடு பிள்ளைகளை வைத்து உருவாக்கித் தரமுடியுமா? என்று. இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் அவரது அன்பான வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவிக்க முடியாதவனாய் சந்தோசமாக சம்மதித்துக் கொண்டேன். இது எனக்கு கிடைத்த வாய்ப்பாகக் கருதிக்கொண்டு அதற்கான வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கினேன். மறுநாள் ஐந்தாவதும் இறுதியுமான மார்கழி உற்சவ குழந்தைகள் திருவிழா சூடுபிடிக்க ஆரம்பித்தது.

மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வுகளில் மட்பாண்டத்தின் கைவினை வேலைப்பாடுகள் சிறுவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களுடன் சிறுவர்களும் கைவினையாளர்களாக மாறிப் பல கைவினை வேலைப்பாடுகளை உருவாக்கியிருந்தார்கள் என்பது ஒரு தனித்துவமான செயற்பாடாக இருந்தது. பறையிசை முழங்க ஆடல், பாடல் என சிறார்களுடைய மனங்கள் வானத்தில் இறக்கை கட்டி பறந்துகொண்டிருக்க ,மதுரை சீடு பிள்ளைகளின் பூரண ஒத்துழைப்பிலும், அர்ப்பணிப்பிலும் உருவான வண்ணங்களற்ற ஓவியம் என்ற குறுநாடகம் என்னால் நெறியாள்கை செய்யப்பட்டு மேடையேறியது.

நாடகத்தினைத் தொடர்ந்து அடுத்த நிகழ்வாக பரதநாட்டிய ஆற்றுகை இடம்பெற்றது.பிரக்ஞாஅவர்களின்நடனஆற்றுகை அரங்கேறியது. இதன் பின்பு மார்கழி உற்சவத்தின் இறுதி நிகழ்வாக புதுச்சேரி, யாழ்கலை மையத்தினை சேர்ந்த திரு.கோபி அவர்களின் நெறியாள்கையில் திருமதி.ஆரோக்கிய மேரி ஸ்டெல்லா அவர்களின் நடிப்பில் மீன் வாங்கலையோ மீன் என்ற ஓராள் நாடகமானது கண்களுக்கு விருந்தளித்திருந்தது. ஐந்தாம் நாள் நாடக விழா பேராசிரியர் மு.ராமசாமி, பேராசிரியர் சுந்தர்காளி, யதார்த்தராஜன், ராஜ்குமார், திலகராஜன் ,அரிஅரவேலன், பிரபாகர் என பல்வேறுபட்ட ஆளுமைகளின் சங்கமமாக அமைந்திருந்தது. இதில் மு.ராமசாமி ஐயா அவர்கள் மதுரையில் தான் இருக்கின்றார்கள் என்பது எனக்கு முதலில் தெரியாது. தெரிந்தவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் என்னைத் தூண்டியது. அப்பொழுது அதனை நிறைவேற்றித் தந்தவர்கள் கார்த்திக் அண்ணா, எழுத்தாளர் பத்திநாதன் மற்றும் வாசிம்கான் போன்றோர். ராமசாமி ஐயாவிடம் நிறைய விடயங்களை கேட்டறியும் ஆவலுடன் பேசிக்கொண்டு இருக்கின்ற போதே அவர் எல்லோரிடமும் பாகுபாடில்லாமல் பழகக்கூடிய எளிமையான மனிதர் என்பதனை என்னால் உணரக்கூடியதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் என் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அவர் எழுதிய நூலை அவரது கையெழுத்துடன் எனக்காக அளித்திருந்தார்.

குழந்தைகள் திருவிழாவில் இருந்த ஆறுநாட்கள் ஆழி வெங்கடேசன், அகிலா, திலகராஜன், ராஜ்குமார்,விஜயகுமார், மதியழகன், கோபி, மு.ராமசாமி, பிரபாகர், பத்திநாதன், ஆரோக்கிய மேரி ஸ்டெல்லா, யதார்த்தராஜன், வடிவேல், மனோகரன், பூபதிராஜ்,அரிஅரவேலன் என விரல்விட்டு எண்ணமுடியாத பல்வேறு ஆளுமைகளுடன் ஊடாடுவதற்கான களத்தினை ஏற்படுத்தித்தந்திருந்தார் கார்த்திக் அண்ணா அவர்கள். அவருக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் ஈடாகாது.

அங்கு இருக்கின்ற நேரங்களில் கார்த்திக் அண்ணா என்னிடம் அதிகமாகக் கேட்கின்ற கேள்வி சாப்பிட்டீர்களா? இவரை சந்தித்து பேசினீர்களா? என இவை இரண்டுமாகத்தான் இருந்தன. இந்த அன்பிற்கும் அக்கறைக்கும் என்றும் நான் கடமைப்பட்டவனாகவே இருக்கின்றேன்.

மார்கழி உற்சவத்தில்; பத்திற்கு மேற்பட்ட ஆற்றுகைகளைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஓராள் நாடகம், நாடகம், கூத்து, நிழல் பொம்மலாட்டம், கதை சொல்லும் கலை, பறையிசை, ஒயிலாட்டம், சிலம்பாட்டம், பரதம், பாடல் என ஒவ்வொரு ஆற்றுகைகளும் எனக்குள் வித்தியாசமான அனுபவத்தினை ஏற்படுத்தின. எவ்வாறு குழந்தைகளைக் கவரும்படி கதை சொல்வது, எப்படி நாடகத்திற்குள் அவர்களையும் ஓர் ஆற்றுகையாளராக மாற்றுவது, குழந்தைகளை மையப்படுத்தி ஆற்றுகைகளை செய்கின்ற போது எவ்வாறான விடயங்களை தவிர்ப்பது போன்ற பன்முகத்தன்மையான கேள்விகளையும், அதற்கான வழிவகைகளையும் இந்த ஆற்றுகைகளும் இந்த குழந்தைகள் திருவிழாவும் எனக்கு வழங்கியிருந்தன.

இவற்றோடு ஒரு குழந்தைகள் திருவிழாவினை கையிலெடுத்து நடத்துகின்ற போது எவ்வளவு பொறுப்புக்களை சுமக்க வேண்டியுள்ளது, எவ்வளவு விடயங்களை கவனிக்கவேண்டியுள்ளது, எப்படி தன்னோடு சேர்ந்து வேலை செய்பவர்களை வழிப்படுத்தல் வேண்டும் என பல அம்சங்களை இந்த மார்கழி உற்சவம் எனக்கு கற்றுக் கொடுத்தது. இதற்கு முன்னுதாரணமாக நின்று செயற்பட்டவர் கார்த்திக் அண்ணா அவர்கள்.

வந்த கலைஞர்கள், பார்வையாளர்கள், நலன் விரும்பிகள் என அனைவரையும் கவனிப்பது கலைஞர்களைக் கௌரவிப்பது, அவர்களுக்கு தேநீர், உணவு உபசரிப்பு, ஒவ்;வொரு நாள் ஆற்றுகைக்குப் பின்னான புறச்சூழல் சுத்தம்,மறுநாள் ஆற்றுகை பற்றிய திட்டமிடல், மார்கழி உற்சவத்தில் பயன்படுத்திய பொருட்களைப் பக்குவப்படுத்தல், இருக்கின்ற மனித வலுவினையும் வசதியினையும் பயன்படுத்தி எவ்வாறு வேலைகளை துரித கதியில் சிறப்பாக செய்து முடித்தல் போன்ற பல்வேறு விடயங்களை வேலைப்பளுக்கு மத்தியிலும் கனகச்சிதமாக மதுரை சீடு அமைப்பினர் செய்திருந்தமை எனக்குள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த குழந்தைகள் திருவிழாவில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் ஒரிரு நாட்களில்தான் பார்வையாளர்களின் வருகையும், வரவேற்பும் கூடுதலாக இருந்தன. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கின்ற போது மதுரை சீடு குழந்தைகள் அந்த விழாவில் இட்ட உழைப்பினைப் பார்க்கவோ, ரசிக்கவோ, உற்சாகப்படுத்தவோ நல்ல மனங்களின் போதாமையினை உணரக்கூடியதாக இருந்தது.

இதில் சில நிகழ்வுகளில் மட்டும் அவர்களின் பிள்ளைகளை முன்வரிசையில் அமர்த்தி அதில்; அந்த பிள்ளை பயனை அடையும் வரை காத்திருந்துபின் வந்த வேலை முடிந்தவுடன் மற்ற நிகழ்வுகளைப் பார்க்காமல் குழந்தைகளை அழைத்துச் சென்றவர்களும் உண்டு.

இலவசமாக நடைபெற்ற இந்த குழந்தைகள் திருவிழாவினை பிள்ளைகளுடன் உள்ளே அமர்ந்து பாராமல் வீதியில் நின்று வேடிக்கை பார்த்தவர்களும் உண்டு. இவ்வாறானவர்களை எவ்வாறான பார்வையாளர்கள் என்றே பிரித்துப்பார்க்கத் தெரியவில்லை. இயந்திரம் போல ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் சில மக்களின் இது போன்ற செயற்பாடுகள், கலைகள் மீதான அவர்களது மதிப்பீட்டினை கேள்விக்குள்ளாக்குகின்றது. இவ்வாறு திரும்பும் பக்கங்களில் எல்லாம் பல அனுபவங்களை அள்ளிக் கொட்டியது இந்த மார்கழி உற்சவம் 2018 குழந்தைகள் திருவிழா.

இங்கு இருந்த குறுகிய காலப்பகுதியில் எனக்கான அனைத்து வசதிகளையும் எந்தக் குறையும் இல்லாமல் முகம் சுழிக்காமல் செய்து தந்திருந்தார் கார்த்திக் அண்ணா, அவரோடு அருண் அண்ணா, விக்கி, ஆனந்த், பிரேம், தீபக் என இன்னும்பல தோழமைகளுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

நல்ல விதைகள் எப்போதும் தானாக உருவாகுவதில்லை நல்ல உரங்கள் இடுகின்ற போதுதான் அவை விருட்சங்களாய் உருமாறுகின்றன. அந்தவகையில் அவ்வாறான ஒரு வேலையினை செய்து கொண்டிருக்கின்ற மதுரை சீடு அமைப்பிற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இது போன்ற செயற்பாடுகள் தொடர்ந்து நடக்க வேண்டும். இவ்வமைப்பு இன்னும் பல ஆண்டுகளில்; வெற்றியோடு காலடி எடுத்து வைக்க வேண்டும். அதற்கு மக்கள், நலன்விரும்பிகள் என எல்லோருடைய பூரண ஒத்துழைப்பு மேலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் உங்களோடு தொடர்ந்தும் சேர்ந்து பயணிக்க காத்திருக்கும்.

நன்றிகளுடன்

பிரசாந்த்

ஹைதராபாத பல்கலைகழகம்.

குக்கூ காட்டு நிலத்தில்

1-IMG_3733

குக்கூ குழந்தைகள் வெளி , குக்கூ காட்டுப்பள்ளி என்று செய்திகளின் வழியே மட்டுமே தான் அறிந்திருந்தோம்.  இது தவிர அருண்குமார் செல்லமே Parent Circle – இதழ்கள் சார்ந்த கம்பெனியில் பணியிலிருந்த போது புகைப்படக்கலைஞர் தியாகராஜன் வழியே குக்கூவை பற்றி அறிந்திருக்கிறார்.

அருண்குமார் வழியே மதுரை சீடு பற்றி குக்கூ சிவராஜ் அறிந்திருந்தது எமக்கு பெருமையளிக்கக்கூடியதாக இருந்தது.

மதுரை பூபாளன் மதுரை சீடு குறித்து குக்கூ நண்பர்களிடையே முன்னரே பகிர்ந்திருந்ததும் பெரும் மகிழ்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. குக்கூ நண்பர்கள் பூபாளன் பற்றி என்னிடம் கேட்டபோது எமக்கு ஒன்றும் தெரியவில்லை. அதற்காக வெட்கப்படுவதாக சொன்னோம். கண்டிப்பாக பூபாளனை நேரில் சந்திப்பதாகவும், நட்பை துவங்குவதாகவும் ஸ்டாலினிடம் சொன்னோம்.

2017 செசி கோடை முகாம்களில் ஆக்கம் சங்கர் அண்ணா தலைவர் தன்ராஜ் மூலமாக அறிமுகமானார். அநேகமாக ஆறு கிராமங்களை முழுமையாக சுற்றியவர். நமது திட்டமிடலை செயலாக்கம் செய்து எம்மை ஊக்கமூட்டியவர்.

ஆக்கம் சங்கர் அண்ணா பற்றி நான் குறிப்பிட்டு தனிபதிவு எழுத வேண்டும். கோடைமுகாம் முடிந்த பிறகு ஒருமுறை மதுரை சீடு அலுவலகத்திற்கு இளையபாரி, யோகேஷ் கார்த்திக் உடன் வந்தவர். பற்பல விஷயங்களை பேசினார். அந்த மாலை முழுவதும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்தார்.

மற்றொரு நாள் குக்கூ ஸ்டாலினுடன் வருகை தந்தார். அன்றைய நாள் மாலை ஆக்கம் சங்கர் அண்ணனை விடுத்து ஸ்டாலினுடனான கலந்துரையாடலாக மாறியிருந்தது. ஸ்டாலின் “அண்ணா காட்டுப்பள்ளிக்கு வாங்க” என்று அழைப்பு விடுத்திருந்தார்.

தற்போதைய குக்கூ காட்டுப்பள்ளி பயண ஆசைக்கு உதவியது ஆக்கம் சங்கர் அண்ணா தான். அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அதற்கு பிறகும் மற்றொரு நாள் ஆக்கம் சங்கர் அண்ணா உள்ளாட்சி கிராமசபை கூட்டங்கள் என்று விடுத்த அழைப்பை ஏற்று மதுரை சீடு இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் சென்று வந்தனர். ஆக்கம் சங்கர் அண்ணா எம் சமூகப்பணி வாழ்வில் சந்தித்த சிறந்ததோர் ஆத்மா.

மதுரை சீடு நூலகத்துக்கு பகல் கனவு நூலை அறிமுகம் செய்தவர் அரிஅரவேலன் அண்ணா. (ஆண்டு 2000).

மீண்டும் 5 பகல் கனவு நூல்களை கலகல வகுப்பறை சிவா வழியாக ஆக்கம் சங்கர் அண்ணா, இளைஞர்கள் வாசிப்புக்கு பின் நின்று சில வாரங்கள் ரசித்துக்கொண்டிருந்தார். செசி நண்பர்கள் சந்திப்புக்கும் அழைப்பை ஏற்று வருகை தந்து பேச வேண்டிய விசயங்களை அழகாக முன்னர் திட்டமிட்டு ஒரு சிறு உரையாக வழங்கி உயர்ந்து நின்றார்.

தலைவர் தன்ராஜ் சில பள்ளிகளை பார்வையிட திட்டமிட்டுக்கொண்டிருந்தார். லோபா முருகன் அண்ணா மற்றும் மதுரை சீடு நண்பர்களும் சேர்ந்து செல்லலாமா எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். நாம் குக்கூ ஸ்டாலின், சிவகுருநாதன் போன்றோரிடம் பேசி தேதியை உறுதி செய்துவிட்டு தன்ராஜ் அண்ணா வர்றீங்களா என கேட்டோம்.

எனக்கு வேறு சில வேலைகள் இருக்கிறது. இன்னொருமுறை பார்க்கலாம் என்று சொன்னவுடன் 20 பேர் கொண்ட குழு செல்வதாக திட்டமிட துவங்கினோம். முன்னரே நூற்பு முகாம் திட்டமிடப்பட்டிருந்ததால் 10 பேர் வரலாம் என குக்கூவிடமிருந்து செய்தி கிடைத்தது.

விழுதுகளிலிருந்து பெத்துராஜ், ஓ.மணிகண்டன், Friends Of Madurai Seed-லிருந்து வினிதா என 10 பேர் முடிவானது.

ஓ.மணிகண்டன் – வினிதா மழைக்கு பயந்து கொண்டு சென்னையிலேயே இருந்ததாலும், பெத்துராஜ் மதுரை சத்திரப்பட்டி கால்வாயில் குளித்து விளையாட ஆசை கொண்டிருந்ததாலும் 7 பேர் என முடிவாக குக்கூ காட்டுப்பள்ளிக்கு கிளம்பி விட்டோம்.

குக்கூ பார்வையிட சென்ற குழு : கார்த்திக்பாரதி, மன்சூர் அலி, இளவரசி, அருண்குமார், முத்துப்பாண்டி, விந்தியா, சுந்தரி

நாட்கள் : 4.11.2017, 5.11.2017

திருவண்ணாமலை பேருந்தை தவற விட்டதால்

மதுரை To விழுப்புரம்(பேருந்து),

விழுப்புரம் To திருவண்ணாமலை(பேருந்து),

திருவண்ணாமலை To சிங்காரபேட்டை(பேருந்து),

சிங்காரபேட்டை To புளியனூர் (ஆட்டோ). இதோ நாம் இப்போது இருப்பது குக்கூ காட்டுப்பள்ளியில்

புளியனூரில் குக்கூ காட்டுப்பள்ளி அமைந்துள்ளது. குக்கூ காட்டுப்பள்ளி பல நண்பர்களின் கூட்டு முயற்சியால் நடத்தப்படுகிறது.

குக்கூ நிலத்தில் வாழ ஆசைப்படுபவர்கள், பணி செய்ய விரும்புபவர்கள், சேவை செய்ய முனைபவர்கள், நன்கொடை வழங்க ஆர்வமுள்ளவர்கள் சிவராஜ், ஸ்டாலின், சிவகுருநாதன், இன்னும் பல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

குக்கூ நிலம் சிற்றுலா தலம் அல்ல. தன்னுணர்வு பெற விழைபவர்கள், தேடல் மனம் கொண்டவர்கள், இயற்கையோடு இயைந்தவர்கள், காடு, மலை, நிலம், நீர், ஆறு, பறவைகள், விலங்குகள் மேல் காதல் கொண்டவர்கள். காந்தியை, நம்மாழ்வாரை விளங்கிக்கொண்டவர்கள். இயற்கையின் பேராற்றலை உள்வாங்கி கொண்டு தாம் எளிய உயிர் என தன்னடக்கமாக வாழ்பவர்கள். குக்கூ நிலம் நோக்கி பயணிக்கலாம். வாழ முற்படலாம். உணவு, உறைவிடம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதவர்கள் குக்கூ-வின் சொந்தகாரர்கள் ஆகலாம்.

உடல் உழைப்பைத் தரலாம். உங்கள் சிந்தனையை பகிரலாம். நண்பர்களை அறிமுகப்படுத்தலாம். குக்கூ நிலத்திலிருந்து வளமான சிந்தனைகளை உங்கள் பகுதிக்கு கொண்டு சென்று புதிய பணிகளை, நிர்மாணிக்க துவங்கலாம்.

குக்கூவின் தங்குமிடங்கள் எளிமையானவை, நிர்மாண பொருட்கள் ஒவ்வொன்றும் கலையை பேசும் .பழமையைப் போற்றும் .வாழ்வு சிக்கலற்றது. வாழ்வதில் ஏன் ?இத்தனை சிரமம் என பாடம் கற்பிக்கும்.

1-IMG_3373

குக்கூவை நாம் இன்னும் விரித்துச் சொல்ல. பல முறை சென்றால் தான். அதன் ஆன்மா எனக்கு வசப்படும். வார்த்தைகள் வரும்.

குக்கூ நிலத்தில் நுழையும்போது ஒரு நிகழ்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது. ஸ்டாலின் வரவேற்றார். நாம் கொண்டு சென்றிருந்த பழங்களையும், இனிப்புகளையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்தோம்.

எல்லோரும் பயங்கர களைப்பா இருப்பீங்க. குளித்துவிட்டும் சாப்பிடலாம், சாப்பிட்டும் குளிக்கலாம் என்றும், பாத்திரம் கழுவும் இடத்தை காட்டி பாத்திரம் கழுவும் முறைமைகளை சொல்லிவிட்டு நகர முயன்றவரை குளிப்பது எங்கே ? என்ற இளாவிடம் குளியலறை இங்கே உள்ளது இங்கும் குளிக்கலாம். காட்டு ஓடை உள்ளது. அங்கும் குளிக்கலாம் என்றார்.

எம்முடன் இருந்தவர்கள் ஓடை என்றவுடன் ஓ….. என ஓலமிட்டனர். நாம் கவலையடைந்தோம். காட்டுப்பள்ளி பார்வையிடல் சுற்றுலாவாக மடைமாற்றம் ஆகிவிடுமோ என்று.

காட்டுப்பள்ளியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை. அதன் ஆன்மா, அதை உருவாக்கியவர்கள், நோக்கங்கள், பணிகள், உதவுபவர்கள் யார், அதன் செயல்பாட்டு முறைகள் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என வரிசை வரிசையாக யோசித்து கொண்டிருந்தோம்.

காலை கடன் முடித்து விட்டு புளியனூர் வடிவழகி பாட்டியின் சீரக கஞ்சி, முள்ளங்கி சட்னியை முழு மூச்சாக சாப்பிட்டவுடன், என் உடனிருந்தவர்கள் போலாமா ஓடைக்கு என்றனர். நாம் முள்ளங்கியிலும் சட்னி செய்யலாமா எப்படி என வடிவழகி பாட்டியிடம் கேட்க முனைப்புக் காட்டினோம்.

அதெப்படி அடுப்படியில் பாட்டிக்கு நாம் உதவ வேண்டும். ”எல்லோரும் அமைதியாக வெங்காயம், வெள்ளபூண்டு உரிக்க உட்கார்ந்தார்கள். இங்கேயும் பிரியாணியா “ என்று Mind Voiceகளை கேட்டப்படி பாட்டியிடம் பேச ஆரம்பித்தோம். பாட்டியுடனான பரஸ்பர பேச்சு தொடர்ந்தது.

புளியனூர் பாட்டி நீ சமைப்பியா என கேட்டுச்சு. கொஞ்சம் தெரியும் பாட்டி என்றோம். தாளிச்சு விட்டுட்டு போயேன் என்றது.

அடுப்பு மூட்டி பெரிய சட்டியை வைத்த பாட்டி தம்பி நானே பண்ணிக்கிறேன் சாப்பாடு கெட்டுருச்சுனா எல்லா புள்ளைகளுக்கும் கஷ்டம் என்றது. சரி பாட்டி கரண்டி வைச்சு நாங்க கிண்டுறோம் என்று சொல்லிவிட்டு வெஜிடேபிள் பிரியாணி மிக்ஸிங் வேலையில் பாட்டிக்கு உதவினோம்.

1-20171104_112329

75% வேலை முடிந்ததும்

பாட்டி ஓடைக்கு போறோமுனு சொல்லிவிட்டு

அப்படியே ஆமையிடமும் சொல்லிவிட்டு

உடன் வந்த கருப்பு நாயிடம் நீ இங்கேயே இரு நாங்க போறோமுன்னு Bye னு சொல்லிட்டு

குறுக்கே ஓடிய பூனையை தூக்கி கொஞ்சிக்கிட்டு

திரு உருமாற்றம் அடைய தவம் கிடக்கும் கற்தூண்களையும், பட்டியற் கற்களையும் தொந்தரவு செய்யாமல் நடந்துகிட்டு

குவிந்துகிடந்த பழைய மரசாமான்களையும் நின்று வேடிக்கை பார்த்துக்கிட்டு

ஏண்டா ஈமு நீ மட்டும் கூண்டுக்குள்ள இருக்குற என்ற கேள்விகளையும் கேட்டுக்கிட்டு,

சோளக்கொல்லைத் தாண்டி

பெய்த மழைக்கு விதைத்த விதைகள் வெளிதள்ளியிருக்கும். பச்சையங்களையும் பார்த்துக்கிட்டு

கால்வாய் ஓரமாக நடந்து காட்டுப்பள்ளி முழு அழகை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பார்த்து நின்றோம். குக்கூ நிலங்களின் இரு எல்லைப் பகுதிகளில் மழைநீர் வடிகாலா அல்லது மழைநீர் தேக்கமா என்று தெரியவில்லை. பெரிய கால்வாய்கள் கட்டப்பட்டிருந்தன. அதற்கு நாங்கள் வைத்த பெயர் யானைக்குழி. கண்டிப்பாக அதற்கு யானைக்குழி என்ற பெயர் பொருத்தமே இல்லை. குக்கூ காரர்கள் உயிர்களோடு குதூகலமாக வாழ்பவர்கள். யானை டாக்டர், புக்கா  யானைக்குட்டி என்று உறவாடுபவர்கள் அல்லவா என்ற உரையாடல் எங்களுக்குள்ளே நிகழ்ந்து கொண்டிருந்தது.

Stone Pench-கள் கொஞ்சம் உட்கார்ந்து போங்களேன் என்றது. குக்கூ நிலம் பின்னணியாக கொண்ட புகைப்படங்களை அருண் எடுத்துத் தள்ளினார். அருணிடம் குக்கூ நிலமும், அதன் உயிரினங்களும் தாமாக முன்வந்து MODEL-ஆக நின்று போஸ் கொடுத்தன.

கால்வாயைத் தாண்ட ஏழு மூங்கில்கள் பாலமாக படுத்திருந்தன.

மூங்கில்களே நாங்கள் நடக்கிறோம். உடைஞ்சுறாதீங்க என வேண்டுகோளுடன் நடந்து பத்திரமாக கடந்தோம்.

மலையின் கால்களை கடந்து மலையேற துவங்கினால் அடடா அவ்வளவு தூரமில்லை. ஓடை தெளிந்து உறவாட வந்துட்டாய்ங்கடா என்று ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் பெயரைக் கேட்டோம். அதற்கு சொல்ல விருப்பம் இல்லை.

1-IMG_3439

முழங்கால் அளவு தண்ணீர் முந்தையநாள் பெய்த மழை தந்த குளிர் முற்பகல் 12 மணிக்கும் இருந்தது. ஆடை களைந்து விரல், கால், முழங்கால், இடுப்பு, உடம்பு, தலை என படிப்படியாக குளிரை சமன் செய்து குளிர்நீர் குதூகலமாக போதே. தூரத்தில் அங்கே ஏதோ ஒன்று நடந்து விட்டிருந்தது.

நம்மாளு முத்துப்பாண்டி தூரத்தில் கைகளை வீசிக் கொண்டும், தடுமாறிக் கொண்டும் மன்சூர் அருகே வரும் போது, அவன் முகம் அதி முதுமையாக மாறியிருந்தது. சிவப்பு முகம் அத்தனை சிவப்பு.
கிலி பிடித்து விட்டது. உள்ளே பயம், பயம், பயம், பயங்கரம் அவன் முகம். முகநூலில் நீங்கள் 50 வயதில் எப்படியிருப்பீர்கள். 70 வயதில் எப்படியிருப்பீர்கள், 90 வயதில் எப்படியிருப்பீர்கள் என்ற App வருமே .

முகம் சிவந்து சுருங்கி முதுமையின் கோடுகளாக முகத்தில் வரிவரியாக ..

பயத்தின் உச்சியில் இருந்தும், முத்துப்பாண்டி பயப்படாதே என்ன ஆச்சு, ஏதாவது கடிச்சுடுச்சா.

ஆமாண்ணா பாதத்துல ஏதோ ஒரு பூச்சி ஓடை கரையில கடிச்சிருச்சு

அடப்பாவிகளா ஒரு சின்ன பூச்சியா முத்துப்பாண்டியை இப்படி கொடூரமாக்கி விட்டது. அவங்க காட்டுக்குள்ள போயி அவங்கள DISTURB பண்ணா அப்படித்தான்.

காட்டு ஓடை குளியல், கொண்டாட்டம் துவங்கிய உடனே முடிவுற்றது.

முத்துப்பாண்டி முகத்தை திரும்ப திரும்ப தண்ணியில முக்கு. கண்டிப்பா அது சிகிச்சைமுறையா-னு தெரியாது. ஆனாலும் அங்கு நாம் இயற்கையை நம்பித் தான் ஆக வேண்டும்.

முத்துப்பாண்டி மெதுவாக அலட்டாமல் பலமுறை தண்ணீரில் மூழ்கி  மூழ்கி எழுந்தான். பரவாயில்லை. கொஞ்சம் பரவாயில்லை. சிவப்பு மறைந்துவிட்டது. வாங்க திரும்பலாம். சின்ன விசயத்துக்கு பதட்டமடைவேன். ஆனால் வெளிக்காட்டினால் அது துயரம். எப்படியோ சூழலை சமாளித்தாயிற்று. மிகவேகமாக உறைவிடம் சேர்ந்தோம்.

முத்துப்பாண்டி பாட்டியிடம் வெங்காயத்தையும், மிளகையும் வாங்கி சாப்பிடு.

வெங்காயமும், மிளகும் சிகிச்சைமுறையா? தெரியாது. மருத்துவரை அணுக முடியுமா. முடியாது. முத்துப்பாண்டி ரெண்டு பெரிய வெங்காயத்தையும், 15 மிளகையும் சாப்பிட ஆரம்பித்தான்.

நல்லவேளை முத்துப்பாண்டி பழைய முகம் வந்து விட்டது. ஒரு போட்டோ எடுத்துருக்கலாமே என்று அருண்குமாரிடம் கோபித்துக் கொண்டவனிடம் சரி மன்சூர் 10 பூச்சிய கடிக்க விடு. திரும்ப முத்துப்பாண்டிய போட்டோ எடுப்போம். ஓட்டமெடுத்தான் முத்துப்பாண்டி.

படவா ராஸ்கல் ஓடை குளியலை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டானே? இதுமாதிரி முன்னமே நடந்திருக்கும் போல. அது சரியாயிடுமாம். நம்மகிட்ட சொல்லியிருக்கலாம்ல.

மதிய உணவாக வெஜ் பிரியாணி சாப்பிட்டாச்சு தூங்கலாம் போலிருந்தது. மதுரையில் இரவு 10 மணிக்கு துவங்கிய பேருந்து பயணம் மறுநாள் காலை 10.30 மணிக்குத் தான் முடிந்தது. அசதி. தூங்கலாமா? சரியாக இருக்காது காலை தூக்கம்.

குக்கூவின் பிரதான கட்டிடம் கலை பொருட்கள், செடி, கொடி, பூ, உயிரினங்கள் என உறவாடினோம்.

கோழிக்குஞ்சுகள், கோழி, நாய், பூனை, ஆமை, மாடு, கன்று, மரம், செடி, கொடி எல்லாம் லாவகமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

புகைப்படக்காரன் எதிரே புகைப்படம் எடுத்தால் உயிரினங்கள் ஓடிவிடும் தானே. இங்கே கலை நேர்த்தியாக நின்று உறவாடுகின்றன.

சிவகுருவும், ஸ்டாலின் புன்முறுவலுடன் இடையிடையே கடந்து சென்றனர். சிவராஜ் சாப்பிட்டீர்களா? சாப்புடுங்க என அன்பு காட்டினார்.

இன்னும் சிலர் ஜென் மனோநிலையில் இருந்தனர். இன்னும் சிலர் ஏதோ ஒரு வேலையில் ஈடுபாட்டோடு இருந்தனர்.

பெங்களூரு பள்ளி குழந்தைகளும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் அதிகபட்ச ஆச்சரியத்தை கொடுத்து கொண்டிருந்தனர். அவர்கள் நூற்பு முகாம்க்கு வந்தவர்கள். நாம் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. நமக்கு குக்கூ குறித்து உரையாடலை துவங்கி விட ஆசை. அங்கே அது போல ஒரு பார்மலிட்டி இல்லை. குக்கூவை நீங்களே படியுங்கள்,  உணருங்கள், சிந்தியுங்கள், தேடுங்கள், கொண்டு செல்லுங்கள் என்பதை நாம் உணர்ந்து கொண்டாயிற்று.

1-IMG_3614

ஒரு வழியாக பின்மதியப் பொழுதில் சூடான கருப்பட்டி காபிக்கு பிறகு பெங்களூரு பள்ளி மாணவர்களின் நூற்பு முகாம் நிறைவு நிகழ்வுக்கு சிவராஜ் அழைத்தார். பொன்மணி தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். சிவகுருவின் கைநூற்பு முகாம் குழந்தைகளின் கைநெசவுதுணிகள், களிமண் அச்சு ஓவியங்கள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. குழந்தைகள் மழலைக்குரலில் குக்கூ மீது கொண்டிருந்த பிரியத்தை ஆங்கிலத்தில் சொல்லிக்கொண்டிருந்தனர்.

என் கூட வந்ததுல மன்சூர் தவிர மிச்ச ஐந்து பேரும் குக்கூவின் வேறு வேறு பகுதிகளில் கலந்து போயிருந்தார்கள். சிவராஜ்-இன் ஆழமான நிறைவுரை பேச்சுக்கு பிறகு புகைப்படம் எடுக்கப்பட்டது.

கற்பாறைகளின் நடுவே அமர்ந்திருந்து மலைகள் மீதான மந்தகாச சூழலில் நாம் கரைந்து கொண்டிருந்த போது பெங்களூரு குழந்தைகள் குக்கூவிலிருந்து கிளம்பியிருந்தனர்.

வாங்கண்ணா நாம் பேசலாம் என்ற சிவராஜ் குரல் அழைத்தது. நாம் பேசுவதற்கு வார்தைகள் அற்ற மொழியோடு இருந்தோம். இருப்பினும் கூட்டம் துவங்கியது.

குக்கூவிலிருந்து நேசன், பொன்மணி, சிவராஜ், சிவகுருநாதன், இரமேஷ் கலந்து கொண்டனர்.

குக்கூவை பற்றி துவக்கத்திலிருந்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற  ஆசை மறைந்திருந்தது.

மிக எளிமையாக குக்கூ, மதுரை சீடு பற்றி பகிர்ந்து கொண்டோம். சிவராஜும், நாமும் தான் பேசிக் கொண்டோம். எல்லோரும் கேட்டுக்கொண்டிருந்தனர். அங்கே அது மட்டும் போதுமானதாக இருந்தது.

மதுரை சீடு இளைஞர்களுக்கு வாழ்வின் வெவ்வேறு இருப்பு, உன்னத நிலைகள், எளிய வாழ்வியல் முறைகள், சமூகத்தோடு நெருங்கிய பிணைப்பு, சமூக மதிப்பீடுகள், காந்தியின் கல்வி, நம்மாழ்வாரின் சிந்தனைகள், இயற்கையோடு உறவாடல் குறித்து கற்பித்தல் நிலையில் பயிற்சிகளை குக்கூவுடன் இணைந்து நடத்திட விருப்பம் என்று தெரிவித்துக்கொண்டோம்.

கண்டிப்பாக சேர்ந்து வேலை செய்யலாம் என சிவராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

எம்மைக் குறித்தும், மதுரை சீடு குறித்தும் என்ன மாதிரி கருத்துக்களைக் கொண்டிருந்தனர் என்பது குறித்து நாம் சிந்திக்கவில்லை. திறந்த மனதுடனும், குக்கூ இளைஞர்களைக் கண்டும் வியந்த மன நிலையில் தாம் இருந்தோம்.

மதுரை சீடு குறித்து பெரிதாக பிரஸ்தாபிக்கவும் நாம் தயாராக இல்லாததால் உரையாடல் எமக்கு முற்று பெறாது, தொடக்கமாகவே அமைந்தது.

மதுரை சீடு-லிருந்து காட்டுப்பள்ளி குழந்தைகளுக்கு கதைப் புத்தகங்கள், புதுயுகம் இதழ்கள் என குக்கூவிடம் தரப்பட்டன. பொன்மணி தும்பி இதழ்கள் இரண்டை பரிசளித்தார். சீடு மக்கள் புத்தகங்களை அங்கே விட்டுட்டு வந்தது மிக முக்கியமான துயரம்.

பொன்மணி மதுரையிலிருந்து காட்டுப்பள்ளியின் முக்கிய முகமாயிருக்கிறார். மதுரைக்காரர்கள் என்ற வகையில் கூடுதல் மகிழ்ச்சி. தையல்,மற்றும் கைவினைப் பொருட்கள் குறித்துப் பயிற்சியளிக்கிறார். எமக்கு இப்போது பொன்மணியைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசை. தன்னுடைய தன் முனைப்பை, தேடலை, சுருக்கமாக சொன்னார். குக்கூவை பற்றியும் சொல்ல ஆரம்பித்தார்.

குக்கூ காட்டு நிலtத்தில் உள்ள ஒவ்வொரு கல்லும், மண்ணும், கலைப்பொருட்களும், கட்டிடங்களும், செடிகளும், செழுமையான பசுமை பலருடைய பங்களிப்பில் உருவானவை. குக்கூ எல்லோருக்கும் சொந்தமானது. சட்டரீதியாக அறக்கட்டளை இயங்கினாலும் இதை எல்லோருக்குமானதாக உலகத்துக்கு விட்டு செல்லவே நடத்துகிறோம்.

1-IMG_3483

பீட்டர் அண்ணனின் கைகளை பிடித்து நடக்கிறோம். (அடுத்த சந்திப்பு பீட்டர் அண்ணனுடனானதாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டோம்) இங்குள்ள ஒவ்வொருவரும் எளிமையானவர்கள், அன்பையும், உண்மையையும் சுமந்து திரிபவர்கள். நாங்கள் காந்திய வழியில், நம்மாழ்வாரின் வழியில் செல்கிறோம் என சுருக்கமாக விவரித்தார்.

யாரிடம் நன்கொடையளிப்பது போன்ற விவரங்களை பொன்மணியிடம் கேட்ட போது நீங்கள் ஸ்டாலின் அண்ணனிடமே கொடுங்கள் என்றார்.

பொன்மணியிடம் விடைபெற்ற போது, ஸ்டாலின் “நீங்கள் நூலகத்தில் தங்கிக் கொள்ளுங்கள். நான் மதுரை கிளம்புகிறேன்” என்றார். ஐவனம் துவக்கவிழா, பூபாளன் பற்றியும் சொன்னார். குக்கூ நண்பர்கள் குழாம் கூடியிருந்த கூட்டத்திடையே புகுந்து மதுரை சீடு சார்பாக சிறிய தொகை ஒன்றை நன்கொடையாக அளித்தோம். பலத்த வற்புறுத்தல்களுக்கு பிறகுதான் நண்பர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஒரு முன்னிரவு நடைக்கு பிறகு நேசனும், ரமேஷ்-ம் நம் அருகே வந்தனர். நேசன் தேனிக்காரர். பொறியியல் முடித்து பணி செய்து பின் குக்கூவின் நித்ய வாழ்வுடன் தங்களை இணைத்துக் கொண்டவர்.

ரமேஷ் கவின் கலை கல்லூரியில் படித்தவர். நிறைய பேசவில்லை. பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்து விட்டு போய்விட்டார்.

நேசனுடைய பேச்சு ஜெயமோகன், காந்தி, நம்மாழ்வார் என்று இலக்கிய பேச்சாக இருந்தது. குக்கூ ஆளுமைகள் நிறைய பேசுகிறார்கள், கலந்துரையாடுகிறார்கள், கருத்துகளை பகிர்கிறார்கள், சிரிக்கிறார்கள், செயல்படுகிறார்கள். ரூமி, ஜென் என்று அவர்களிடம் பேசிக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.

எல்லோருக்குள்ளும் ஒரு ஆன்மீக தேடல் இருக்கிறது போல, பேச்சு, புன்னகை, உரத்த சிரிப்பு, ஆழ்ந்த அமைதி என அமர்க்களப்படுத்துகிறார்கள். சாப்பாட்டு நேரத்தால் நேசனுடனான பேச்சு இடையே தடைபட்டு விட்டது. நேசனே தாய் போல அருகே அமர்ந்து எல்லோருக்கும் பரிமாறி கொண்டிருந்தார்.

இரவு உணவுக்கு சாதம், ரசம், புடலங்காய் பருப்பு கூட்டு.

அந்த உணவருந்தும் குடில் எனக்கு அம்மாவை நினைவூட்டியது. என் பால்ய காலம் சாணி மெழுகிய தரையில் தான் உருண்டோடியது. ஓலைக்கூரை வேய்ந்த வீட்டில் அரிக்கேன் விளக்கை சுற்றி வட்டமாய் எட்டு பேர் அமர்ந்திருக்க அம்மா சோறு போடுவார். கோணி சாக்கு விரித்து அதன் மேல் பாய் விரித்து கனவில்லாமல் தூங்கிய இரவுகள் ஞாபகம் வந்து போயின.

இரவு உணவுக்கு பின் தூங்குவதற்கு புத்தகங்கள் சூழ்ந்த அறை. தரையில் பாய் விரித்து தூக்கம். நமக்கு பழகிய ஒன்றாக இருந்ததால் படுத்தவுடன் கொர் கொர். மன்சூருக்கும் எனக்கும் குறட்டை போர் நடந்ததாக தகவல்.

அதிகாலை அதி அற்புதம். பனி மூடிய மலை. ஈரக்காற்று. இதமான குளிர். எல்லோருக்கும் ஒரு அதிகாலை நடை தேவையாக இருந்தது. கிழக்கு நோக்கியிருந்த மலை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

விதவிதமான பட்டாம் பூச்சிகள், பெயர் தெரியாத பலவித செடிகள், மரங்கள், பூச்சிகளின் ரீங்காரம், ஒற்றையடிப்பாதை, பனி சொட்டும் இலைகள். கால்கள் வலிக்கும் வரை நடப்போம். யாராவது திரும்ப வேண்டும் என்று சொன்னால் திரும்பி விடலாம் என்று திட்டம். போனில் மெல்லிய இசையை வழிய விட்டோம். பூச்சிகளின் ரீங்காரம், பறவை சத்தம், அமைதி, ஓடையின் சலசலப்பு இதற்கு மேலும் இசை வேண்டுமா என்று ஒரு கேள்வி.

அப்படி பார்த்தால் மனிதன் கால்பட்டாலே புல் பூண்டு மறைந்து பாதை உருவாகி விடுகிறது. காட்டில் மனிதன் நுழையவே கூடாது போன்ற சிந்தனைகள் காட்டுப்பள்ளியை நோக்கி திரும்ப வைத்தன. ஓடைக்குளியலுக்கு எல்லோரும் முன் நின்றனர். நாம் அப்புறம் குளித்துக் கொள்வோம். முதலில் உணவு பிறகு குளியல் என்ற திட்டம் எல்லோரும் குளிக்க போய்விட்டனர்.

தனித்திருந்த எம்மிடம், சிவராஜ் முத்துவின் பாத வர்ம சிகிச்சை குறித்து சொல்லி எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இப்போது முத்துவிடம் என்னை ஒப்புக்கொடுத்து விட்டேன். முத்து முறையாக Foot Reflexology படித்து இருக்கிறார். தஞ்சைகாரர். சிகிச்சைக்கு முன் உங்களுக்கு என்ன பிரச்சனை என்றார். கண்ணாடி போடாமல் கண் தெரியாது, ஒரு காது சரியாக கேட்காது, தூக்கப்பிரச்சனை, குறட்டை, உடல் பருமன் என்று வரிசையாக சொன்னேன். உங்களுக்கு மனஅழுத்தம் அதிகம் அதனால் தான் இவ்வளவு பிரச்சனை என்றார். அவரது அறிவுரைகளை கேட்டுக்கொண்டேன். மனநல ஆலோசனைகளையும் வழங்கினார்.

வர்மம் கடினமான பயிற்சி. சிகிச்சை வழங்குபவர் கடினமான உடல் உழைப்பை தருகிறார். பெறுபவர் கொஞ்சம் வலியை பெறுகிறார். நாம் முத்துவின் கைகளை பார்த்துக்கொண்டிருந்தோம். முத்துவின் கைகள் வேகமாக, மெதுவாக, இலாவகமாக, அழுத்தமாக, இயங்கிக்கொண்டிருந்தன. சிகிச்சை உபகரணங்கள் கொண்டு அழுத்தமாக குத்தும் போது கடும் வலி வருகிறது, வலிக்கு பிறகு குழந்தையின் கேசத்தை கலைத்து விட்டு மென்மையாக தடவிக்கொடுப்பது போல பாதத்தை விரல் கொண்டு கொஞ்சுகிறார். நிறைய பழங்கள் சாப்பிடுங்க. Stress- ஆக இருக்காதீங்க. அவரவர் அவரவர் போக்கில் இருக்கட்டும். நடப்பது நடக்கட்டும். ரிலாக்ஸா இருங்க என்றார். போதும் போதும் என்றளவிற்கு சிகிச்சை அளித்தார். இளாவிடம் உங்கள் கணவரை நல்லா பாத்துக்கங்க என்றதும் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தாள். பின் மன்சூரும், முத்துப்பாண்டியும் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். முத்துவின் கை வலியது. முத்து குக்கூவின் சொத்து. அந்த கைக்கு என் முத்தங்கள். கைகள் கண்டிப்பாக வலித்து இருக்கும். வாழ்த்துக்கள் முத்து, வாழ்க வளமுடன்.

அரை மணி நேரத்துக்கு பிறகு, பழைய சாதமும், நேற்றைய ரசமும் சாப்பிட்டோம். வரமாட்டேன் என்று சொன்ன சமையல் பாட்டி வந்து விட்டார். நான் சமையல் செய்கிறேன் என்று சொல்லியும், குக்கூ நண்பர்கள் வாய்ப்பு தரவில்லை. பயமா, மரியாதையா, விருந்தினரை கஷ்டப்படுத்துவதா எதுவென தெரியவில்லை.

குக்கூ குளியலறையில் சிறுத்து வழியும் குழாய் வழியே நீர் பிடித்து நிதானமாக குளித்து விட்டு உடைமாற்றி விட்டு  எதிரே வந்த சிவராஜ் இடம் வடகிழக்கு பகுதியில் என்ன மாதிரியான தோட்டம் என்று கேட்டவுடன் சிவராஜின் குரலுக்கு மீண்டும் ஓடோடி வந்தார் முத்து.

ஓர் பறவையின் பார்வையில் விவசாயம் நடப்பது போல ஜென் சிந்தனையில் உருவாக்கப்பட்டிருந்த மூலிகை தோட்டத்தின கதையை சொன்னார். பறவையால் தான் ஒரு காடு உருவாகிறது. முத்துவின் விவரணை சுவாரஸ்யமாக நேர்ந்தது. சில மூலிகையின் பெயர்களை சொன்னார். ஆயிரக்கணக்கான மூலிகைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வந்திருக்கிறோம். விளைவிக்க முடியாத மண் என்று ஒன்றில்லைய. ஒரு விதை வளர்வதை மண் முடிவு செய்யட்டும். மனிதன் எப்படி முடிவெடுக்க முடியும். பயிரிடப்படாத பயன்படுத்தப்படாத நிலப்பகுதி ஒன்று குக்கூ நண்பர்கள் முயற்சியால் மண் மீது குக்கூ கொண்ட காதலால், குக்கூ நண்பர்கள் மீது மண் கொண்ட காதலால் பசுமையை போர்த்தியுள்ளது. மேலும் நர்சரி பற்றியும் விவரித்தார்.

1-20171105_110820

சிவாவுடன் விடைபெற்று அடுப்படிக்குபோய் பாட்டியின் உப்புமா புதினா சட்னியை ஒரு கை பார்த்தேன். கை கழுவியவுடன் சுப்ரமணி எதிர்பட்டார். (சாப்பிடும் போது பாட்டி சுப்ரமணியை நன்றாக கலாய்த்திருந்தார்)

மதுரை சீடு கார்த்திக் நீங்க தானே என்றவாறு வந்தவர் உங்களிடம் என்ன வகையான விதைகள் கிடைக்கும் என்று கேட்டார். நான் மெர்சலானேன். தினசரி தொலைபேசியில் விதை கேட்கும் அழைப்புகளுக்கு போல பதில் சொல்வது போலில்லாமல், பொறுமையாக மதுரை சீடு பற்றி விவரித்தேன். இப்ப உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.

நான் X முடிச்சிட்டு ITI படிச்சேன். இந்தியாவில் பல இடங்களில் செடிகளோடும், மரங்களோடும் வாழ்பவன் என்றார்.

திருமணம் குழந்தைகள்.

அய்ய கல்யாணமெல்லாம் செய்துக்கலை. கல்யாணம் பண்ணுனா மரம், செடி, இந்த மலை, காடு இதெல்லாம் யார் பார்த்துக்குவாங்க. இவுங்கதான் என் குழந்தைகள். என்னால என் குழந்தைகள விட்டுட்டு இருக்க முடியாது.

தினசரி 300 மரக்கன்றுகளையாவது நடணும். அல்லது 300 செடி, கொடிகளையாவது சீர் செய்யணும். இல்லைன்னா அன்னைக்கு இரவு தூக்கம் வராது என்று அசாதாரணமாக சொன்னவரை, அங்க என்ன அண்ணே பேசிக்கிட்டிருக்கே. வேலை நடக்குதுல்ல என்ற குரல் கேட்டு காட்டு வேலி பணிக்கு திரும்பினார்.

விடைபெறும் தருணத்தில் வெண்டை, தக்காளி, கத்தரி விதைகளை பேரன்போடு கொடுத்து அனுப்பி வைத்தார். மன்சூருக்கு மகிழ்ச்சி.

1-20171105_110052

புகைப்படம் நேரம் வந்த போது கௌதம் (புகைப்படக்கலைஞர்) அவர்களோடு சிறு சம்பாஷனை நடந்தது. கௌதமின் புகைப்படங்கள் அழகியல், நிலைத்த வாழ்வு, நிறைய கதைகள், பெருத்த இரசனைகள் கொண்டதாகும். கௌதமுக்கு வாழ்த்துகளை சொன்னோம். ஒரு குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் நன்றிகளையும், ஆழ்ந்த அன்பினையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், வருங்காலத்தில் சேர்ந்து பணி செய்வதற்கான வாய்ப்புகளையும் சொல்லி விட்டு விடை பெற்றோம். குக்கூவிலிருந்து புளியனூர் கிராம பகுதிக்கு நடந்தே சென்று ஆட்டோவில் ஏறி பின் சிங்காரபேட்டையிலிருந்து திருவண்ணாமலை பயணமானோம்.

எல்லோருக்கும் குக்கூ காட்டுப்பள்ளி மீண்டும் மீண்டும் வந்து செல்லக்கூடிய விருப்பமான இடமாக மாறியிருந்தது.

குக்கூவை பற்றி எழுத இன்னும் சில பயணங்கள் தேவை. குக்கூவில் ஒவ்வொரு விசயத்தையும், ஒவ்வொரு சிறு பகுதியையும் இன்னும் ஆழமாக தெரிந்துக் கொள்ள வேண்டும். இன்னும் சொல்லவேண்டுமானால் குக்கூவின் ஆளுமைகள் பற்றி தனியாக சொல்ல வேண்டும்.

குக்கூவின் நோக்கங்கள் செயல்பாடுகளை பற்றி இன்னும் அறிந்துகொண்டு எழுத வேண்டும்.

இப்பதிவு குக்கூவிலிருந்த 1 ½ நாட்கள் கவனிப்புகள், அனுமானங்கள், உள்வாங்கி கொண்டவைகளை தான் எழுதியிருக்கிறோம்.

நாம் குக்கூவை பற்றி திறந்த உரையாடலை நிகழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற அவாவை அடுத்த பயணத்துக்காக தக்க வைத்துக்கொண்டோம்.

ஸ்டாலின் மொழியில் சொல்வதானால் நிறைய பேச வேண்டும், கேள்விகள் வேண்டும், விவாதிக்க வேண்டும். ஒருவரை ஒருவர் பொது வெளிக்கு களங்கமற்று தயாராக்கி கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் பார்க்கலாம்.

நாம் மீண்டும் மீண்டும் பயணிக்க விரும்பும்

என் தாய்கிராமம் : புலியூரான்

என் தந்தை கிராமம் : திருச்சுழி

பால்ய கால துவக்கப்பள்ளி : செங்குந்தர் உயர்நிலைப்பள்ளி

அமெரிக்கன் கல்லூரி

செசி மையம்

அன்னை ஆசிரமம்

ஆரோவில்

திருவண்ணாமலை கோயில்

சிங்கம்புணரி

கேரளா படகு வழி பயணம்

என்ற பட்டியலில் குக்கூ காட்டுநிலமும் சேர்ந்திருக்கின்றது.

புதிய தொடர்புகளையும், புதிய உறவுகளையும் பெற்று வாழ உயிர்ப்புடன் வாழவே ஆசைப்படுகிறோம்.

தென்னிந்திய அளவில் ஒரு முகாம் பங்கேற்புக்கான நேர்காணலில் பேராசிரியர். இராஜூ (NSS) கேட்ட கேள்விக்கு (ஆண்டு 1999)

வெவ்வேறு மனித முகங்களை பார்க்க பிடிக்கும். மனித உள்ளங்களை வாசிக்கவும், நெருங்கவும் பிடிக்கும் என்று பதில் சொல்லியிருந்தோம்.

ஆம் ஏப்ரல் 2017 லிருந்து நவம்பர் 2017 இன்று வரை நூற்றுக்கணக்கான ஆளுமைகளையும், இளைஞர்களையும், ஆயிரக்கணக்கான மக்களையும், குழந்தைகளையும் பார்க்க, பேச, உறவாட முடிந்திருக்கிறது.

வாய்ப்பு தந்த காலத்திற்கு நாம் நன்றிகள் சொல்கிறோம். மனித மாண்புகளை இணைத்திட பணி செய்யும், மதுரை சீடு ஆதரவாளர்கள், FMS நண்பர்கள், ஆஷா நண்பர்கள், பேராசிரியர். பிரபாகர், அரிஅரவேலன், பிஜூ அண்ணா, தன்ராஜ் அண்ணா, ஆக்கம் சங்கர் அண்ணா, சகோதரர் சிவராஜ், ஆசிரியை மாரியம்மாள் போன்றோரை இப்பதிவுகளின் வழியே நினைத்துக் கொள்கிறோம்.

தொடர்புகளே எம் பலம். தொடர்புகளில் விளைந்த உறவுகளே எம்மை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

எம் முன்னோடிகளும், சகாக்களும், நாமும் மாறாதிருப்போமாக.

குக்கூவின் ஆளுமைகள்

சிவராஜ் – 9965689020

ஸ்டாலின் – 9994846491

சிவகுருநாதன் – 9952259619

 

முத்து – 9750192229

இரமேஷ் – 7094306603

நேசன் – 9943955487

பொன்மணி – 9677987812

பாட்டி

சுப்ரமணி

நவீன் கௌதம் – 9940960335

தும்பி (முத்து) : 9643870059

ஆக்கம் சங்கர்: 9442405363

போன்றோருக்கு எம் வாழ்த்துக்களும் பேரன்பும் உரியதாகுக.

குக்கூ முகவரி : குக்கூ குழந்தைகள் வெளி, புளியனூர் கிராமம், சிங்காரப்பேட்டை. கிருஷ்ணகிரி – 635307

”தீ” – உண்மைகள் சுடுமா?…

பாலிவுட்டே காத்துக்கொண்டிருக்கிறது ”பத்மாவதி” யை பார்க்க காரணம் கதை அப்படி?

large_warm-yourself-at-the-fires-of-meditation

ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கரில் அமைந்துள்ளது சித்தூர்கோட்டை. .மேவார் மன்னன் ராணா ரத்தன் சிங்தான் சித்தூரை ஆண்டு கொண்டிருந்தான். ரத்தன் சிங்கின் மனைவி ராணி பத்மினி என்கிற பத்மாவதியின் அழகை கேள்விப்பட்ட டெல்லி மன்னன் அலாவுதீன் கில்ஜி, அவளை அடைவதற்காக சித்தூருக்கு படையெடுக்கிறான். கிட்டத்தட்ட ஆறுமாதப் போருக்குப் பின், ராணா ரத்தன்சிங் சிறைப்பிடிக்கப்படுகிறான். பத்மினி, தன்னைக் காணத்தானே இந்தப்போர் என்று அலாவுதீன் கில்ஜியை அரண்மனை வாசலுக்கு அழைக்கிறாள். பத்மினியும், அவளுடன் வரும் 700-க்கும் மேற்பட்ட பணிப்பெண்களும் “ இதுதான் உனக்கான பரிசு “ என்று சொல்லி தீயில் தங்களை மாய்த்துக்கொள்கிறார்கள். .

பத்மாவதியின் க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக பனிரெண்டு கோடி செலவழிக்கப்பட்டுள்ளனவாம்.

மெர்சல் படத்தில் வரும் தீ விபத்து குழந்தைகள் கருகி சாகும் காட்சி. வருகிறது

பத்மாவதிக்கு முன்னோடியாக இராஜமாதா அரசகுல வழக்கமாக வைத்த அடி தப்பாமல் தலையில் சுருமாடு சுருட்டி தீச்சட்டி ஏந்தி நடந்து வருகிறாள்.

கும்பகோண பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் கருகி சாம்பலாகிறார்கள்.

இரமணா படத்தில் ஒரு நாட்டிய குழந்தை தீயில் கருகி சாம்பல் ஆகி நிற்கிறது

ஜெண்டில் மேன் படத்தில் கூட மகன் படிப்புக்காக தாய் தீயில் எரிகிறாள் [சங்கர் தீயை பயன்படுத்டும் உள் நோக்கம் அதி பயங்கரம்)

கும்பகோண பள்ளி தீ விபத்தில் குழந்தைகள் கருகி சாம்பலாகிறார்கள்

கூலி உயர்வு கேட்டதற்காக வெண்மணியில் தீக்கொலைகள் நடத்தப்பட்டதே.

கணவன்மார் இறந்தவுடன் எரியும் கட்டையில் உடன்கட்டையானார்களே பெண்கள்.

எதிரி மன்னர்களிடம் தப்பிக்க உயிரை மாய்த்து கொண்ட இராஜபுத்திர ராணிகள்.

வெயில் உகந்த அம்மனுக்கும், ஊர்களில்  உள்ள எல்லா மாரியம்மனுக்கும் தீச்சட்டி எடுக்கிறார்களே பெண்கள்.

தீமிதி திருவிழாவை பெண்களுக்காக தான் நடத்துக்கிறார்கள். பெண்களே அதிகம் தீ மிதிக்கிறார்கள்

தீயில் பாய்ந்து தீப்பாய்ந்த அம்மனாக மாறிய நாட்டுப்புற பெண்கள்.தான் எத்தனை எத்தனை

கண்ணகி மதுரையை எரித்தாள்.

சீதை தீக்குளித்தாள் ராமனுக்காக.

அக்னியில் பிறந்தாள் திரௌபதி.

எங்கள் ஊர் அக்கினி வீரபத்திரனுக்கு திருவிழா

தீ வளர்த்து முதலில் தரையில் பரப்பி விடுவார்கள். பின் அதன் மேலே 10 அடி உயரத்தில் தென்னவோலை பந்தலை உயரதூக்கி கட்டி அதையும் தீப்பற்ற வைத்து விடுவார்கள். இப்போது தீ மிதிக்க வேண்டும். தலைமேலே தீ காலின் கீழே கணறும் கங்கு.

எப்பூடி அம்மாடி பலருக்கு  பலவிதமாக காயம். அதன் பிறகு அத்திருவிழா சாமியாடிகளின் அருளால் ஆண்டுதோறும் 32 ஆண்டுகளாக தள்ளிக்கொண்டே போகிறது. என் 8 வயதில் கடைசியாக பார்த்தது.

அரக்கு மாளிகையில் பாண்டவர்களுக்கு பதிலாக ஐந்து ஆண்களும், ஒரு பெண்ணும் தீ வைக்கப்படுகிறார்கள்..யார் அந்த ஆண்களும்,பெண்ணும்?

சிவன் அழகு ஆனந்தம் என்ற நந்தன் தீக்கிரையாக்கப்படுகிறான்.

அனுமன் தன் வால் நெருப்பு கொண்டு இலங்கையை அழிக்கின்றான்.

அனல்வாதம்லாம் ஒன்று உண்டுஅல்லவா

அதி அறிவுக்களஞ்சியமான யாழ் நூலகம் கூட எரிக்கப்படுகிறது.

நெருப்புக்கென்று ஒரு ஸ்தலம் திருவண்ணாமலை.

பெரிய சொக்கப்பனைகளைக் கொளுத்தி மகிழ்கிறார்கள்.

போகியிலும் தீயைக் கொளுத்தி மகிழ்கிறார்கள்.

ரதி, மன்மதனை சிவன் எரிக்கின்றார்.

முப்புறம் எரித்த கதைகளெல்லாம் உண்டு.

சிவபெருமானுக்கு நெற்றிக்கண் இருப்பதெல்லாம் எரிக்கத்தான் என்று நமக்கு தெரியும்தானே.

இன்றும் ராமன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு ராவணனை தீயிட்டு கொளுத்துகின்றது.

தீப்பந்தம், தீச்சுடர்

தீயா வேலை செய்யணும் குமாரு..

தீப்பொறி ஆறுமுகம், தீச்சட்டி கோவிந்தன், கனல் கண்ணன், தீப்பொறி திருமுகம், கங்கு கந்தசாமி, நெருப்புடா நெருங்குடா …

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா,

அழகிய தீயே

வயிறு எரிகிறது

எரிதழல் கொண்டு வா தம்பி .எரித்திடுவோம் அண்ணனை

அக்னிகுஞ்சு ஒன்று கண்டேன்,அதை ஆங்கோர் காட்டிடைவைத்தேன் வெந்து தணிந்தது காடு

தீயின் மீது தமிழனுக்கும், மதங்களுக்கும், மொழிக்கும், மொழிப்புலமையாளர்களுக்கும், கடவுளர்களுக்கும், காவியங்களுக்கும், கவிதைகளுக்கும், சினிமாவுக்கும், சீரழிந்த தினசரி தமிழர் வாழ்வுக்கும் தான் எத்தனை எத்தனை தீராத காதல், ஆசை, இன்பம்.

தலைவனுக்காக தீக்குளிக்கிறான், தமிழுக்காக தீக்குளிக்கிறான், தன்மானத்திற்காக தீக்குளிக்கிறான், வட்டி கட்ட முடியவில்லையென்று தீக்குளிக்கிறான், வாங்கிய கடனுக்காக தீக்குளிக்கிறான்.

புனிதம், மனிதம், அவமானம், வெகுமானம், துரோகம், பழி, போராட்டம், எதிர்ப்பு, விரக்தி, ,புரட்சி என எல்லாவற்றுக்கும் எவ்வாறு தீ அடையாளமாக ஆனது.

ஐயோ இரண்டு பெண் குழந்தைகள் தீக்கிரையாகும் புகைப்படங்கள், வீடியோ காட்சிகள். நம்மால் முடியவில்லை. மனம் பேதலிக்கிறது,பேசி பேசி மனதை ஆற்றிக்கொள்கிறோம்.நான். தீக்கங்குகளால் காயம்பட்டவனம்மா. 59% கங்குகளால் ரோஸ் ஆனவனம்மா. ஒவ்வொரு நாளும் செத்து செத்து பிழைத்தனவம்மா.

எரியும் நெருப்பு. ஐயோ காலகாலமாய் நம்மை துரத்தும் நெருப்பு மகள்களே உங்களைக் கொன்றுவிட்டதம்மா. அந்நெருப்பு எங்களையும் கொல்கிறது. எங்கள் மனங்களையும் எரிக்கிறது. வெம்மை தாங்க முடியவில்லையம்மா..காலம் காலமாக பெண்ணுக்கும் குழந்தைக்கும் பெரு நெருப்புடன் தொடர்பு இருக்கிறதம்மா

காலகாலமாய் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதன் விளைவு தான்அம்மா.

நீங்கள் கருக நெருப்பு காரணம் என்றால் கருக காரணம் உன் அம்மா, அப்பாவும்மட்டுமல்ல இந்த சமூகமும்தானம்மா.

குழந்தைகளின் வாழ்வுரிமையை தங்களின் உடைமையாக்கிய பெரியோர்களே குற்றவாளிகள் அம்மா.

என் செல்லங்களே உங்களை சாகடிக்க பெற்றோர் முயன்று இருக்க கூடாது.

அம்மா

பெத்தவர்கள் காலங்காலமாக குழந்தைகளின் வாழ்வும், முடிவும் தங்கள் கைகளில் தான் என இறுமாந்து இருக்கிறார்கள் செல்லங்களே.

குடும்ப வன்முறைக்கு, தன்மான பிரச்சினைக்கு, பொருளாதார பிரச்சினைக்கு, வாழ்வியல் தேவைக்கு, நரப்பலிக்கு குழந்தைகளே முதலில் கொல்லப்படுகிறார்கள்.

பழிக்குப்பழி வாங்க குழந்தைகள்,

பணயம் வைக்கப்படும் குழந்தைகள்,

மிரட்டி கடத்தப்படும் குழந்தைகள்,

விபச்சாரம், பிச்சை எடுக்க காணாமாக்கப்படும் குழந்தைகள்.

சொத்துக்காக கொலை செய்யப்படும் குழந்தைகள்

வறுமையின் பொருட்டு கொத்தடிமைகளாக,

தாய் தந்தையரின் பசிக்காக, விற்பனை பொருளாக,

குடும்ப மேம்பாட்டுக்கு குழந்தை தொழிலாளர்களாக ஆக்கப்படுகிறார்கள்.

விவாகரத்து என்ற பெயரில் குழந்தைகளிடம் வன்முறை, பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் குழந்தைகள் என எத்தனை எத்தனை ஆயிரம் குழந்தைகளின் கனவுகளும், வாழ்வும் கருக்கப்படுகின்றன.

குப்புற விழுந்த 16 மாத செல்லம். எரிகின்ற நிலையிலும் தாயை காக்க ஓடும் 4 வயது குழந்தை. அந்த வண்டிய பிடிச்சுட்டு நிக்கிற கோலம் அம்மா மறக்க முடியாதும்மா.

நாங்க மானம், ரோஷம், கௌரவம், தன்மானம்,

வாழ வழியில்லைன்னா செத்துரணும்,

தோல்வியடைஞ்சுட்டா செத்துரணும்,

நான் அவமானப்பட்டுட்டேன் நானும் சாகுறேன், நீயும் சாகு.

நான் வாழமாட்டேன், நீ வாழாதே,

என் குழந்தை என்ன வேணாலும் செய்வேன், அடிப்பேன், கொல்வேன்.

பாரம்பரியம், குடும்ப பெருமை, சாதி பெருமை,

உதவி கேட்கமாட்டேன், போராட மாட்டேன்,

மயிறு, மட்டை, வெண்ணெய், வெங்காயம், புண்ணாக்கு பார்க்குறவீங்கம்மா.. பார்க்குறவீங்க எங்களை மன்னிக்காதம்மா.

சாமி, நேர்த்திக்கடன், குழந்தை பலி, இந்து மதம், தமிழர் பெருமை, சாதிப் பெருமை, பழம் பெருமை, நாட்டுப்பற்று பேசறவீங்களம்மா. வாழவழி இல்லைன்னா தீக்குளினு சொல்ற கேடுகெட்டவீங்க நாங்களம்மா?

வாங்கிய கடன் கட்ட முடியாம குடும்பத்தோட சாகுறத ஊக்கப்படுத்தறவீங்கம்மா நாங்க.

இங்க ரெண்டு பெண் பிள்ளைகள் தீயில் வெந்தது. இந்த ஊரில் பெண் கடவுள்களுக்கு பிடிச்சிருக்கும்மா பிடிச்சிருக்கு.

பெண் கடவுள்களே உங்களுக்கு மனசும் இல்லை, மனசாட்சியும் இல்லை. நீங்கள் இருந்தால் தானம்மா மனசும், மனசாட்சியும் இருக்கும்.

நம்பிக்கைகள், குடும்ப வாழ்க்கை முறை, கல்வி நிலை, சாதி, மதம், சடங்குகள், சமூகம், அரசு, சட்டங்கள் எல்லாமே உங்களை சாகடிக்கத்தானம்ம இருக்கு.

தீக்கும் குழந்தைக்கும், தீக்கும் பெண்ணுக்கும் எப்படியெல்லாம் தொடர்புபடுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்.

கந்துவட்டி கொடுமையால் பெண் குழந்தைகளுக்கும், தன் மனைவிக்கும் தீ வைத்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம். வாழும் காலத்தில் கண்முன் கண்ட கோர காட்சி. மனித குல அவமானம்

கரும்பாலையில் எண்ணற்ற தீக்குளிப்பு சம்பவங்களை கண்ணாலும், காதாலும் பார்த்திருக்கிறேன், கேட்டிருகிறேன்.

நான் அறிந்தவரை ஒரு ஆண் தவிர மற்ற கதைகளில் எல்லாம் பெண்களே இருக்கிறார்கள்.

சித்திக் கொடுமை, மனைவியின் துரோகம், கணவனின் துரோகம், கணவனை இழந்து பிற ஆண்களிடம் வாழ்வை தொலைத்துக்கொண்ட பெண்கள், காதல் தோல்வி, குற்ற உணர்ச்சி, மாமியார் கொடுமை என விதவிதமாக தீக்குளிப்பு சம்பவங்கள்.

ஒரே ஒரு தீ விபத்து தவிர ஏனையவை ரணகளமானவை.

அய்யோ

சாவதற்கு கயிறு, ஏரி, குளம், ஆறு, கடல், இரயில், மலை உச்சி, அரளி விதை, தூக்க மாத்திரை, விஷம், பால்டாயில் இவற்றையெல்லாம் விட சாகத்துணிபவர்கள் தீயை தேட எத்தணிக்கிறார்கள் எனில், சாக துணிபவர்களின் தன்மானம், கௌரவம், வாழ்வு, நம்பிக்கை, பொருளாதாரம், சூழல் என நீங்கள் அத்தனைவற்றையும் ஆராய வேண்டும். விவாதிக்க வேண்டும். கேள்விக்குள்ளாக்க வேண்டும். உடன் வாழ்பவர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

பெரியோர்கள் எப்போதும் குழந்தைகளின் வாழ்வுரிமையை உடைமையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்வும், முடிவும்  தங்களின் கைகளில் தான் என பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

சாதாரணமாக குடும்ப சண்டைகளில் அம்மாவோ, அப்பாவோ உன்னையும், உன் பிள்ளைகளையும் கொன்னுட்டு, நானும் செத்துருவேன் என்பது தான்.

எங்கே கோளாறு?

நம் குடும்ப அமைப்பிலா? நம் சமூக அமைப்பிலா?

பாரம்பரியத்தில் உன்னதத்தை தேடுபவர்கள் எங்கே? எது பாரம்பரியம்? எது பழம் பெருமை? எது மரபு? எல்லாம்… புண்ணாக்கு, மயிறு, மட்டை.

எங்க ஏரியாவில் குடும்ப வன்முறை கதைகள் ஏராளம் உண்டு.

அதுவும் சமூக அடுக்குகளில் பிற்படுத்தப்பட்டவன் தான் எல்லாவற்றையும் குழப்பிக்கொள்கிறான். அவனிடம் மனிதமில்லை.  என் அண்ணனின் நண்பனின் உண்மை சம்பவம் இது.

அவர் பெயரை சொல்லிவிடலாமே. அவர்தான் உயிரோடு இல்லையே. பெயர் பழனிச்சாமி, ஒரு கணவனை இழந்த பெண்னை இரு கைக்குழந்தைகளோடு ஏற்றுக்கொண்டு கரும்பாலையில் நன்மதிப்பு பெற்று வாழ்ந்தார். குழந்தைகள் பெரியவர்களாகின. பெண்ணுக்கு திருமண ஏற்பாடு என்ன ஆச்சுனு தெரியல. ஒரு நாள் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, இரு பிள்ளைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு போலீசில் சரண் அடைந்தார். பின் போலிசில் தப்பி திரும்பி வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

என்ன எழவோ ஊருக்குள் நூறு விதமான பேச்சு. எது உண்மையென்று தெரியவில்லை. பழனிச்சாமி செய்தது தீக்கொலை.

தீக்கொலை போல நாட்டில் நடக்கும் மாபெரும் தீ விபத்துக்கள் தீக்கொலைத்தானே.

எல்லாத்துக்கும் அரசியல், சமூக, பொருளாதார காரணங்கள் தான் காரணம். எதுக்கும் தீர்வு இல்லை.

தாழ்த்தப்பட்டவன் தீ வைத்துக்கொல்லப்படுகிறான். வெண்மணி சம்பவத்திலிருந்து இன்னும் ஏராளம்.

வைக்கோல் படப்பு எரிப்பு, படலை எரிப்பு, சேரி குடிசைகள் எரிப்பு, காலனியில் தீ என்ற செய்திகள் தரும் பின்னணி வேறு.

கரும்பாலையை முன் மாதிரியாக கொண்டு சொல்கிறேன்.

தனக்குத்தானே தீ வைத்துக் கொள்ளுதல், குடும்பத்தையே கொளுத்துவது, குழந்தைகளை ரணகளமாக கொளுத்துவது. இதையெல்லாம் செய்பவர்களின் பிண்ணனி, வறுமை, உறவு சிக்கல், மானம், ரோஷம், கௌரவம், தன்மானம், பழம்பெருமை, பாரம்பரியம், மண்ணு, மட்டி, வெங்காயம் என பிதற்றுபவர்கள் தான்.

ரொம்ப கொடுமைங்க, அனுபவத்துல சொல்றேன். சிறு தீக்காயம் முதல் உடலெங்கும் தீக்காயம், தீ தரும் ரணமும், துன்பமும், அதன் வடுவும் விவரிக்க முடியாதவை.

அரசு மருத்துவமனையில் NSS நண்பனின் தங்கை எரிந்த நிலையில் காணச் சென்றிருந்த காட்சி. என் மாணவி ஒருத்தி தீக்குளித்து ஆட்டோவில் என்னை சிரித்தபடி கடந்து சென்ற காட்சியை என் பங்காளி இதுவரை மார்ச்சுவரியில் சென்று பார்த்த தருணங்கள். என் வாழ்வை வெறுத்த தருணங்கள்.

கரும்பாலையில் தீக்குளித்து எவரும் மீண்டதில்லை. தீ விபத்தில் சிக்கிய ஒருவரும் மீண்டதில்லை. திரௌபதிக்கு தீ மிதித்ததால் 59% வெந்து ரோஸ்ட் ஆனவனம்மா. 3 நாள் சுயநினைவின்றியும், 15 நாளுக்கும் மேலாக மனநிலை தவறியும், புதுவாழ்வுக்கு திரும்பியவன் நான் ஒருவனே. (நான் தீயில் விழுந்த காட்சி வீடியோ படமாக்கப்பட்டு என் பங்காளிகளாலும், திரௌபதி பக்தர்களாலும் பலமுறை பார்க்கப்பட்டது என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.)

தீ, விஷம் ஆகிய தற்கொலைகளுக்கு பின்னே ஆன சிகிச்சை முறைகள் சொல்லணும் துயரந்தருபவர்கள். அதை விவரித்தால் இன்னும் பக்கங்கள் தேவை.

தற்கொலைகளில் மிகவும் மோசமானது முற்றிலும் அடையாளம் அழிக்கும், தீக்குளிப்பை தான் சொல்வேன். விபத்துக்களில் படுமோசம்  தீ விபத்தே,

சமூகத்தை கண்டித்து தீக்குளித்த அம்மா, அப்பா செயல் தவறே ஆயினும், அவர்களை ஆற்றுப்படுத்தாத, வழிகாட்டாத, உதவாத, காப்பாற்றாத, வாழ நம்பிக்கையளிக்காத அரசும், நாமும் தானே பொறுப்பு. நாமும் குற்றவாளிகளே. தீ வைத்துக்கொண்ட அந்த குடும்பத்தலைவனின் மனநிலையும் உளவியலும் சமூகத்தோடு, அரசோடு தொடர்பு உடையது

சமீபத்தில் நம்ம ஊரு திருவிழா ஒண்ணு நடத்தினோம். கடந்த 5 மாதங்களாகவே மிக அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தேன். 2 செய்தி தாள்களில் கூட வந்துருச்சு. நான் கண்டுக்கல. எல்லாம் என் தலைவர் ஏற்பாடு. அவர மாதிரி ஊடகத்திடம் உறவாடுபவர்களை பார்க்க முடியாது. ஆள் கில்லாடி.

கிராமத்து இளைஞர்கள் சிலம்பாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அடுத்து தீயுடன் விளையாட ஆரம்பித்தனர். வாயில் மண்ணெண்ணெய்யை ஊற்றி பெரிய பெரிய ஜூவாலைகளை தீயின் வழியே உருவாக்கினர். (2008-ஆம் ஆண்டு காந்தி மியூசியத்தில் வான்முகில் கலைவிழா தீ ஜூவாலைகள் எல்லாம்  சும்மா ஜிஜுப்பி)

குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை

சிலம்பு கம்புத் தீ,

வட்ட கம்புத் தீ,

நட்சத்திர வடிவில் 5 முனை தீ,

பெரிய வட்டத்தில் தீ எழுப்பி தீ நடனம் என  தீயாக ஆடிக்கொண்டிருந்தனர்

ஒரே கரகோஷம், ஸ்பீக்கரின் பாட்டு சத்தம், ஆட்டம்உச்ச கட்டமாயிருக்க ஒரு தீப்பந்து முன் உள்ள விழா கூரையில் விழுந்து புகைய ஆரம்பித்தது. கூரையின் கீழே உள்ள பெண்கள் உட்கார்ந்திருந்தும் பதட்டப்படவில்லை. பெண்கள் தீயை பார்த்து பயப்படாதவர்கள்தானே, எண்ணெய் சட்டியில் கையை விட்டு அப்பம் சுடுபவர்கள்,தானே கங்கை கையில் எடுத்து அடுப்பு பற்ற வைப்பவர்கள்.தானே

காலமெல்லாம் விறகடுப்பின் வெந்தனலுடனும், தங்களுக்காக வெடிக்க காத்திருக்கும் மண்ணெண்ணெய் ஸ்டவ்வுகளுடன் உறவாடுபவர்களல்லவா. ஒரு கலாட்டாவும்  அங்கே நிகழவில்லை. நான் மைக்கை அப்போது தான் சின்னராஜுவுடன் கொடுத்திருந்தேன். (சின்னராஜ் பற்றி இன்னுமொரு முறை பின் எழுதுவோம் கிராமங்களில் சின்னராஜ் போன்ற இளைஞர்களை பார்ப்பது அரிது.) எனக்கு வயிறு கலக்கியது, வியர்த்து கொட்டியது. ஒன்னுக்கு போய் விடுவேன் என்பது போலிருந்தது. சட்டென கொல்லம் தீ விபத்து ஞாபகம் வந்தது.

கூட்டத்தில் இருந்த 20 வயது மதிக்கத்தக்கவன் சடாரென பந்தல்கால் மேல் ஏறிய போது மொத்த பந்தலும் ஆங்கிட்டும் இங்கிட்டுமாக ஆடியது. மொத்த ஜனத்திரளும் ரிலாக்ஸ் ஆகவும் நான் மட்டும் பெரும் பதட்டத்துடனும் இருந்தேன். இளைஞன் மிக சரியாக 4 தென்னங்கிடுகை லாவகமாக பொத்தல் இட்டு பிடுங்கி போட்டார். .பெரும் தீ விபத்து தடுக்கப்பட்டது இங்கே ஆட்டம் நின்னுச்சுனு நினைக்காதீங்க தீ விளையாட்டு முன்ன விட வேகமெடுத்தது. உண்மையில்   விபத்தில் இருந்த காபாற்றிய அந்த இளைஞனே  என் கதாநாயகன்

அங்கிட்டிருந்து வந்த  என் தலைவர் சொன்னார்.

அண்ணே உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்.

சொல்லுங்க தலைவரே.

சின்ன வயசுல எங்க ஊர் திருவிழாவுல இது மாதிரில்லா ஆட்டம், பாட்டம் நடக்கும் . நானெல்லாம் போனதுமில்லை. எட்டி பார்த்ததுமில்லை.

நான் சொன்னேன். நீங்க போயிருக்க மாட்டிங்க. ஏனென்றால் அப்போதே தலைவராக உருவாகிக் கொண்டிருந்தீர்கள். அந்த திருவிழாவெல்லாம் பார்த்தா ஆட்டகாரனாயிருப்பீர்கள். திருவிழாவுக்கு போகாததால தலைவராகி விட்டீர்கள். தலைவருக்கு மகிழ்ச்சி அவரை மகிழ்ச்சிப்படுத்துவதில் தீயாய் இருப்போம்ல. பெரிய திருவிழாவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் .எத்த்னை எத்தனை அவசியம், மிகச்சிறந்த பாடத்தை கொடுத்தது. .அது மிகப்பெரிய படிப்பினை . எனக்கு என் உயிர்தோழன் வேறு அநியாயத்துக்கு ,அனாவசியமாக ஞாபகத்துக்கு வந்த்து

உண்மையில் என் மேலே வெறுப்பாக இருக்கு. ஏதாவது சம்பவம் நடந்தா ஒரு பதிவு எழுத உட்கார்ந்து விடுகிறோம். இயலாமைகளை செரிக்கவும், கடக்கவும் பிரயத்தனபடுகிறோம்.

அனாதை என்ற சொல்  கேட்கவும் , அனுபவிக்கவும் கடினமா இருக்கு

கொய்யால தனியேதான் பொறந்த,.

தனியேதான்  சாகப்போற ,

தனியா வாழ முடியாதா

தனக்கு பின்னால்  தன் குழந்தை கஷ்டபடகூடாதுனு காசு சேர்க்குற.அல்லது விஷம் கொடுத்துற,  தீ வைக்கற

நாம் என்ன செய்ய போகிறோம்.?

வீடு வாங்க கடன் படுகிறோம் .வீடு கட்ட கடன்படுகிறோம்  .வீடு கட்டுவதை தமிழ் சமூகம் ஆதியிலிருந்தே நிலவுடமை சமூமாக இருந்த்தாலேதான் முன்னேறியது என் நீயா நானா கோபிநாத் தொடர்பு படுத்துவதை சொல்வதை  கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

எல்லோருக்கும் வீடு. ஒருவருக்கு ஒரு வீடு,   வசதிக்கு ஏற்றார் போல் எளிய வீடு., ஏன் சாத்தியமாகவில்லை

வீட்டிற்கும் கெளரவத்திற்கும், சமூக அந்தஸ்த்துக்கும் முடிச்சு போடுகிறமே .

பந்தாவுக்கு வீடு கட்டுகிறமே ஏன்/ ஒரு வீடு கட்டியப்பின் இன்னும்ப வீடு கட்டி வாடக்கைக்கு விடுகிறமே  ஏன் அது சரியா ?

சொந்தமாக வீடு கொடு என் அரசிடம் போராடினாலென்ன?

கல்விக்கு  கடன் படுகிறோம்

அரசுப்பள்ளியில் படிக்க வைத்தாலென்ன?.கடன் வாங்கி தனியார் ப்பள்ளியில் படிக்க வைக்கலாமா?

கல்வியில் இலவசம்கேட்டு ஏன் போராட மாட்டுகிறோம்?  .வட்டார சூழல்கேற்ப கல்வி, பொதுப்பள்ளிகள் தேவை,சமத்துவகல்வி தேவை வர்க்க பேதமற்ற போதனா முறைகள் தேவை,.அறிவியலை மையமாக பேசும் கல்வி தாய்மொழியில் அறிவையும் மனித்தையும் போதிக்கும் க்ல்வி, ,தனியார்ப்பள்ளிகள் ஒழிப்பு, தனியார் கல்லூரிகள் ஒழிப்பு   என்ற முழக்கங்கள் அல்லவா ஒலிக்க வேண்டும்.

கல்வி காசான போது பொதுவெளியில் போராட யார் வருவார்.?.காசால்வாங்கிய கல்வி மனிதம் வளர்க்காது.தன் நலம் மட்டுமே பார்க்கும். வெளிநாடு போய் காசு பார்க்க சொல்லும்

இலவச கல்வி வேண்டும் .தனியார் நிறுவனங்கள் ஒழிக்கப்படவேண்டும்

மருத்துவத்திற்கு  கடன் படுகிறோம்.

எவ்வளவு செலவு ஆனால் என்ன   உயிர் பிழைக்க வைங்க டாக்டர்.

.அரசு மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கை,, அரசு மருத்துவமனைகளில்  போதியவசதியின்மை,,மருத்துவமனைகள் பற்றாகுறை,,, மருத்துவர்களிடையே மனிதம் குறைந்து போனது, .தனியார் மருத்துவமனைகளின் அதிகரிப்பு இவற்றால்  மருத்துவத்த்ற்கு கடன்படுகிறோம்

இலவச மருத்துவம் தேவை. .மருத்துவம் அரசின் கைகளில் இருக்க வேண்டும்

அரசிடம்  இலவசமாக கேட்க வேண்டியது   வீடு,,கல்வி ,மருத்துவம்

ஒரு நல்ல அரசு உண்ண, உடுத்த சுய உழைப்பில் தினசரி வாழ்வை எதிர்கொள்ள அடிப்படை அறங்களுடன் வாழ பழக்கப்படுத்த வேண்டும். தூய்மை , சுகாதார வாழ்வு,   அரசுக்கான பராமரிப்பு கட்டணங்களை , வரி செலுத்துதல் ,பொது சொத்துக்களை பாரமரித்தல் போன்றவற்றில் பொதுமக்களும் , அரசும் கூட்டுப்பங்காளிகளே சிறு வயது முதல் அறிவு உணர்ச்சியில்  வளர்க்கப்பட்டால்மட்டுமே  பல பிரச்சனைகள் தீரும்

நிலங்களை கொடுத்து ,வேலைவாய்ப்புகளை கொடுத்து, உழைக்க வைப்பது அரசின் முக்கிய கடமை

விவசாயிகள் தற்கொலைகள், கைத்தறி நெசவாளிகள் தற்கொலைகள்,, கந்து வட்டியினால் தற்கொலைகள் , சிறுதொழில்முனைவர்களின் தற்கொலைகள் ,வங்கி கடன் வாங்கியவர்களின் தற்கொலைகள் ,என்பதில் அரசும் , சட்டங்களும், விதிகளும்,,கொள்கைகளும் காரணங்களாக உள்ளனவே. அரசு என்பது யாருக்காக உள்ளது என்பதே தெளிவாக தெரிந்தும் இங்கே உறங்கி கிடக்கிறோம்

என் பால்யகால நினைவுகளில் கருப்புவண்ண பெரிய சுவரெழுத்து வாசகங்களை நின்று பார்ப்பதும், வாசிப்பதும் நிழலாய் தெரிகிறது.

உணவு, கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவம், வீடு கொடு என்ற வாசகங்கள்  அவை. என்று நிஜமாகும் என்று தெரியவில்லை.

வேறு எதற்கு கடன்படுகிறோம்?

கல்யாணம் கட்ட , சடங்கு நடத்த,  காதணி விழாவுக்கு , வளைக்காப்புக்கு, நேர்த்திகடன்களுக்கு ,பண்டிகைகளுக்கு, எழவுக்கு, கருமாதிக்கு,,  வருட கோயில் கொடைக்கு, 5 வருடத்திற்கு ஒருமுறை 48 நாளுக்காக  கடன் வாங்கி அடுத்த 5 வருடம் கடனும் வட்டியும் கட்டி கொண்டாடும் குலத்தெய்வ கோயில் திருவிழாக்களுக்காக கடன்படுகிறோம்

ஆடம்பர கல்யாணம், எளிய கல்யாணம், பதிவு திருமணம், செலவுகளுக்கும்,மரபுக்கும், சடங்குகளுக்கும், முக்கியத்துவம் தரும் திருமணம்  , சுய மரியாதை திருமணம்  .எத்திருமணம் நம் தற்கால வாழ்வியல்முறைக்கு ஏற்றது

கடன் வாங்கி செலவு செய்து திருமணம் முடிப்பது ஒருநாள் மகிழ்ச்சி,பலநாள் துன்பம்

செலவுகள்செய்தும், ஆடம்பரத்தின் மூலமும்  இன்பத்தை, மகிழ்ச்சியை ஒருநாளும் வாங்கமுடியாது

நாம்  தற்போது வாழும் வாழ்க்கை முறையை  கேள்விக்குள்ளாக்காமல் ,தீர்வுகளை நோக்கி உழைக்காமல் வருங்காலத்தை நட்டப்படுத்திக்கொண்டிருக்கிறோம்

பொதுதுறை போக்குவரத்து பயன்பாட்டை ஊக்கப்படுத்தினால் வாகன கனவுகளும், கடன்களும் தொலையும்.

சேமிப்பு, சிக்கன வாழ்க்கைமுறைகள் குறித்து பாலவயதிலிருந்து பாடமாக போதிக்க வேண்டும்

அர்த்தமற்ற ,தேவைகளற்ற ஷாப்பிங் கலாச்சாரம் படிப்படியாக குறைய வேண்டும்.

இருப்பதை கொண்டு வாழ்வது,, எளிய வாழ்வின் மீதான பிடிப்பு , இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வாழ்வு என்பதை சாத்தியமாக்க வேண்டும்.

நிலத்தின் மீதான பேராசை, நகையின் மீதான பேராசை,  பணத்தின் மீதான பேராசை,  ஆடம்பரத்தின் மீதான பேராசை, என்பது நம் பாரம்பரியமாக இருந்தால், மரபாக இருந்தால், சடங்குகளாக இருந்தால், நம்பிக்கைகளாக இருந்தால், மதமாக இருந்தால், வாழ்வியல் முறைகளாக இருந்தால் , தொடர்ந்தால் வாருங்கள் , தீக்குளிப்போம். தூக்குபோட்டுக்கொள்வோம் ,விசமருந்துவோம்,  ஆமாம் நாம் மானமுள்ளவர்கள் , ரோஷமுள்ளவர்கள். ஒரு சொல் பொறுக்கமாட்டாதவர்கள், கெளரவமிக்கவர்கள்,  ஆம்கொலைகள் செய்துவிட்டு தற்கொலைகள் என்போம். அரசை நமக்கான அரசாக்க முடியவில்லை என்றாலும் சாகத் துணிவோம். ஊடகங்களுக்கு செய்திகளாக்குவோம்.

ஜே.பி

என்னோட பேரோட சுருக்கெழுத்து A.S.K.B. இப்படி கையெழுத்து போடுறதோட சரி, இந்த இனிசியல் வச்சு என்ன கூப்பிட்டால் நானே திரும்புவேனா என்பது சந்தேகம் தான். ஆனால் சிலருக்கு அவங்க பேரை அவங்களே மறக்குற அளவு சுருக்கி கேட்டு பழகியிருக்கும்.

பள்ளிக்காலங்களில் ஆசிரியர்களை பெயரோட சேர்த்து சுலோச்சனா டீச்சர், சாந்தி டீச்சர், பேச்சி டீச்சர் , மாரியம்மாள் டீச்சர் னுதான் சொல்வோம். 11, 12- ஆம் வகுப்பு காலங்களில் MATHS டீச்சர், ZOOLOGY டீச்சர், தமிழ் ஐயா என கூப்பிட்டோம்.

ஆனா ஒரே பேரு மட்டும் பயங்கரம். இனிஷியல் சொல்லி கூப்பிட்டதுனா அது RP  சார் கெமிஸ்ட்ரி வாத்தியார். ஆள் பார்க்கவே பயங்கரமா இருப்பார். ஆஜானுபாகுவான உடம்பு, கருவிழி பிதுங்கி எப்போது விழுமோ என்று நினைக்க வைக்கும் கண்கள். பார்த்தாலே சிலருக்கு ஒன்றுக்கு வந்து விடும்.

அவர் பெயர் ராஜபாண்டியன். RP வகுப்பு மயான அமைதியாகவே இருக்கும். பயத்திலே படித்தோம். பெயில் ஆனா கழுத்தை பிடிச்சு தூக்கி டேபிளில் நிக்க வைப்பார். கன்னம், முதுகில் இடி மாதிரி அடி விழும். நான் அடிவாங்கியதில்லை. எல்லோருமே +2 பொதுத்தேர்வில் பெயிலாகி இந்த ஆளுக்கு ஆப்பு வைக்கணுமுனு பேசிக்குவோம். ஆனா பயபுள்ளைங்க எல்லாருமே பாஸ். பள்ளி வாழ்க்கையில் மிக மிக கறாரான  பிடிக்காத வாத்தியாரு RP தான்.

கல்லூரி வந்ததும் டைம் டேபிள்-இல் பேராசிரியர்களின் இன்சியல் மற்றும் சுருக்கெழுத்துக்கள் தான் இருந்தன. ஆனால் நானெல்லாம் இனிஷியல் சொல்வதில்லை. சுதானந்தா ஐயா, பிரபா ஐயா, மனோகரன் ஐயா என்பேன். வாத்தியார்களை தவிர சுருக்கெழுத்துக்களில் அழைத்தால் எப்போதும் நினைவில் நிற்கும் பெயர் JP.

சுவாரசியமான ஆளுமைமிக்க கவர்ச்சியான சுருக்கெழுத்து JP என்று தோன்றும். மதுரைகாரர்களுக்கு ஒரு JP ஐ தெரிந்து இருக்கும். காந்திய பேராசிரியர்  செய ப்ரகாசம் . உங்களுக்கு தெரியவில்லை என்றால் பரவாயில்லை உலகம் முழுக்க அமைதி மற்றும் அகிம்சைக்காக பணிசெய்யும்  போராளிகளுக்கு  இவர் முக்கியமானவர். கண்கள் மூடிகொண்டு  கருத்துரைக்கும் பாங்கு ஒரு யோக நிலைக்கு நிகரானது அது போல

எனக்கு இன்னும் சில JP -க்களை தெரியும்.

IMG-20150120-WA0011ஒரு JP காலேஜ் ஜூனியர். கெமிஸ்ட்ரி ஜெயபிரகாஷ். இப்போ அமெரிக்கா நாட்டுல ஆராய்ச்சித்துறையில் விஞ்ஞானியாக பணி செய்து வருகிறார்

பிசிக்ஸ் ஸ்ரீராம் தெலுங்கு அய்யங்கார். ஜெய்ப்ரகாஷ் ரெட்டினு நினைக்கிறேன். இருவரின்

தெலுங்கு வாடையடிக்கும் தமிழ் பேச்சு பழகவும் பேசவும் அத்தனை இஷ்டம்.

சீடு துவக்க காலங்களில் ஆடம்ஸ்க்கும் எனக்கும் இடையே JP (physical education), ஸ்ரீராம் (National Service Scheme). இருவரும் Translation க்கு பெரும் உதவியாக இருந்தாங்க.

JP- உம் ஸ்ரீராம்-உம் ரொம்ப Hygienic. ஸ்ரீராம் -க்கு வீசிங் பிராப்ளம். எங்க ஏரியா இப்ப இருக்குறத விட அப்ப ரொம்பவே அழுக்கு தான். ஏரியா களப்பணிக்கு  வந்தவங்க எந்த சங்கோஜமும் படலை.  ரொம்ப சின்சியராக அவங்க செய்த உதவி இன்று ஆல் போல் தழைத்து நிற்கிறது

ஸ்ரீராம் வீட்டு விஷேசங்களுக்கு எல்லாம் போனாலும் கூட, அவன் தொடர்பிலிருந்து மறைஞ்சுட்டான். ஆனா JP திரும்ப சந்திரமோகன் மூலமா திரும்ப தொடர்புல வந்தான். ரொம்ப பிரியமானவன். இரண்டு பி.எட் மாணவர்கள் பயில உதவி செஞ்சான்.

1999-இல் அமெரிக்கன் காலேஜ் JP(ஜெயபிரகாஷ்)-னா. 2007-இல் ஒன்னாம் வகுப்பு பயில ஒரு ஜெயபாண்டி வந்தான்..  அமெரிக்கன் காலெஜ் JP,ஞாபகமாக ஜெயபாண்டியை JP அழைக்க போயி சீடு மையத்தில JP-னே பேமஸ் ஆயிட்டான்.  அப்ப இருந்த காலேஜ் பசங்க JP  பத்தாப்பு முடிக்குறப்ப  நாங்கலெல்லாம் படிப்ப முடிச்சு செட்டில் ஆகி இருப்போம்  அப்ப Jp செட்  பசங்களுக்கு போட்டி போட்டுக்கொண்டு உதவுவோம் என்பார்கள்..

IMG_1145முன்னர் சீடு-இல் 5-ஆம் வகுப்பிலிருந்து தான் குழந்தைகள் அனுமதிக்கப்படுவார்கள். 2007-இல் தான் முதல் வகுப்பிலிருந்து குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். இப்போது JP பத்தாம் வகுப்பு முடித்துள்ளான் அந்த வகையில் JP-யும், அவன் X Classmates-உம் முக்கியமானவர்கள்.

JP-ஐ  வகுப்பறைகளில் உட்கார வைக்க முடியலை. அவன் படிக்க ஆர்வமும் படலை. ஐந்தாம் வகுப்பு வரை ரெகுலராக வந்தவன். பின்னாடி தொடர்ந்து மையத்திற்கு வரவில்லை. 6, 7, 8 படிக்கும் வரையும் ரெகுலர் வருகையும் இல்லை. 9 –ஆம் வகுப்பு வந்தான். 5.30 மணிக்கு மையம் திறக்குதுன்னா, 5.00 மணிக்கே வருவான். வகுப்பறையை சுத்தமாக வைக்குறது, குடிநீர் ஏற்பாடு, மையத்தை திறப்பது என ரொம்ப சின்சியரா இருந்தான். ஆனாஆசிரியத்தொண்டர்களிடமிருந்து புகார் JP-க்கு தமிழ், இங்கிலீஷ் படிக்க வரல, எழுத வரல. கணக்கு ரொம்ப கஷ்டப்படுறானு.

நன்றாக படிக்கும் மாணவர்களை விட, இம்மாணவர்களுக்குதாம்பா அதிகம் உதவணும்  என்றேன்

X வந்தது. JP-ஐ Private படிக்க சொல்லி பள்ளி நிர்வாகம் மிரட்டி பார்த்தது. வகுப்பாசிரியர்களிடமும் டியூசன் போனான். சீடுக்கும் வந்தான். நின்றான். வேறு எங்கோ பயிற்சி நிலையத்தில் சேர்ந்தான். திரும்ப 10 நாள் கழித்து சீடு-க்கு வந்தான். அவன் குடும்பம் கரும்பாலையிலிருந்து புதூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தது. JP –யிடம் பேசினேன்.

நீ ரெகுலராக வா. உன் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு நாங்க உதவுகிறோம் என்றேன்

புதூரிலிருந்து கரும்பாலைக்கு நடந்து வருவான். சைக்கிளில் வருவான். வருகை வழக்கமான ஈடுபாடுகள் எதுவுமே குறைவில்லை. JP பத்தாம் வகுப்பு தேர்ச்சி. எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

சுறுசுறுப்பு, உடல் உழைப்பு என்றால் JP யோட அடையாளம்

JP பத்தாம் வகுப்பு பரீட்சை முடித்து கே.கே.நகர் ஸ்டேஷனரி கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். நான் ஜூன் வாக்கில் JP-ஐ ஸ்டேஷனரி கடையில் கடைசியாக பார்த்தேன். பையன் வாடிக்கையாளரை கவனிக்கும் விதம். பொருட்களின் விலையை கூட்டி மொத்தம் எவ்வளவு என முதலாளிக்கு கொடுக்குற சத்தம், பேக்கிங் பொருட்கள் சுற்றி எடுத்து தரும் விதம் என செம சுட்டி.

”என்னடா JP உன்னை தேடிட்டு இருந்தேன்…?

அண்ணே கரும்பாலைக்கு வர முடியாது. இங்க லீவுக்கு தான் ஸ்டேஷனரி கடையில வேலை செய்யுறேன். பாலிடெக்னிக் சேரப் போறேன்.”

மனதார வாழ்த்தி விட்டு வந்தேன்.

இன்று JP –ஐ மீண்டும் பார்த்தேன்.

JP உன் தேன்கூடு சேமிப்பு காசையும், உன் தங்கச்சி காசும் இருக்கு. வாங்கிக்கடா.

சரி அண்ணே. இப்ப வேலை பார்க்கல. சும்மா கடைக்கு வந்து கடைக்காரருக்கு Help பண்ணுறேன்.

பாலிடெக்னிக் ECE பிரிவில் சேர்ந்துட்டேன்.

நல்லது JP. நேரம் கிடைக்கும் போது மையத்துக்கு வா என்றேன்.

பாலிடெக்னிக் படிப்ப முடிக்கனும் , முடிப்பானா  JP வாழ்க்கையில நல்லா வரணுமே கவ்லைகள் தின்னும் நினைவுகள்  கொண்டு  (நினைக்க மட்டும்தான் முடியும். நினைத்துக்கொண்டே )அவ்விடம் விட்டு நகர்ந்தேன்.

ஒரு JP (ஜெயபிரகாஷ்) எதையும் எதிர்பாராமல் உதவிகள் செய்து. சீடு பணிகளை துவக்கி வைத்து உற்சாகமூட்டியவன். இன்னொரு JP  (ஜெயபாண்டி)செய்யும் பணிகளுக்கு சாட்சியமாய் நின்று அனாசியமாக என்னை கடந்து போகிறான்

எங்கிருந்தாலும் வாழ்க JP-க்களே.

என் பிரியமான முத்தங்களும்…

அன்பு நிறைந்த வாழ்த்துக்களும்…

கற்றுக் கொள்ளத்தகும் பாடமாக

ஆசிரியை வெ.மாரியம்மாள் அவர்களின் பணிநிறைவைவொட்டி 25.02.2006-இல் வெளியிடப்பட்ட பாராட்டு மலருக்காக எழுதியது இக்கட்டுரை.

கட்டுரை துவக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி காலங்களில் இருந்து 2006 ஆம் ஆண்டு வரை உள்ள நினைவு அடுக்குகளில் இருந்து எழுதியவை. சற்றே தத்துபித்து என்று இருக்கலாம். ஆனால், கட்டுரையின் வழி ஆசிரியரை கொண்டாடும் மாணவனின் உணர்வுகளில் இருந்து வாசித்தால் ஒரு உன்னதமான உரையாடலும், உறவாடலும் பிணைந்திருப்பதை நீங்கள் காணலாம். கற்றுக்கொள்ளத் தகும் பாடமாக என்ற தலைப்பை பேராசிரியர். சுவாமிநாதன் அவர்களிடம் இருந்து எடுத்திருந்தேன். பேராசிரியர்களின் பேராசிரியர், எனது ஆங்கிலப் பேராசிரியர். Dr. சாமுவேல் லாரன்ஸ் பற்றி அணுஅணுவாக இரசித்து பேரா. சுவாமிநாதன் எழுதியிருந்தார். அதை நான் படித்தது கல்லூரி இளங்கலை இரண்டாமாண்டு ( 1998 – 1999). இத்தலைப்பு மிக சரியாக 2006 ஆம் ஆண்டு நினைவு வந்தது. பொதுவாகவே நான் ஆசிரியர்களை மிகவும் கொண்டாடுபவன். என் திருமணத்திற்கு இறந்து போன இரண்டு ஆசிரியர்களைத் தவிர ஒன்று முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை கற்பித்த ஆசிரியப் பெருமக்கள் அனைவருமே (பெண்கள்) வந்திருந்து ஆசி வழங்கினர். கல்லூரியை பொறுத்த வரை பெண் பேராசிரியர்கள், ஒரு சில ஆண் பேராசிரியர்களை தவிர பெரும்பாலானோர் கற்றுக்கொள்ளத் தகும் பாடங்களாகவே இருந்திருக்கிறார்கள். துவக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி காலங்களில் ஆசிரியர்களின் ஆசிரியராகவும் எல்லோருக்கும் பிடித்தமானவராகவும் இருந்த ஆசிரியர் வெ.மாரியம்மாள் பற்றியது இக்கட்டுரை.

கற்றுக் கொள்ளத் தகும் பாடமாக

எனது தலைமையாசிரியர்வெ.மாரியம்மாள்

DSC_0061

மதிய வேளை, அலுமினியத் தட்டில் கீரை குழம்பும், பெரிய அரிசிப் பருக்கைகளையும் உற்சாகமாக தின்று விட்டு எதையாவது, யாரையாவது வேடிக்கை பார்க்கும் பச்சை ட்ரவுசர், வெள்ளை சட்டை போட்ட பையன் நான், “ஐஹிரி நந்தினி” பாடல் சத்தம் காற்றில் கரைய, துள்ளிஓடி வேடிக்கை பார்க்கிறேன். நீண்ட ஓலை கூரை ஷெட்டு உள்ளே வெள்ளை சட்டை, புளூ பாவாடை போட்ட அழகான அக்காக்கள் நின்று கொண்டு பாட, மதிய உணவுத் தட்டின் முன் அமர்ந்தவர்கள் பின் தொடர்ந்து பாடிவிட்டுச் சாப்பிடுகிறார்கள். இதை மூங்கில் சட்ட ஜன்னல்களில் கன்னங்கள் தேய வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

இப்போது நான் சைக்கிள் ஸ்டாண்டு வராண்டா முன் நிற்கிறேன். நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வரிசையாய் செல்ல, பெரிய பொட்டும், நீண்ட கரிய தலைமுடியுடன், சிவப்பாய் இருந்த டீச்சரும், ஒய்யாரமான நடையுடன் மிடுக்காய் ஒரு டீச்சரும் (மாரி) வெளுப்பான எளிமையான ஒரு டீச்சரும் பின்னே போய்க்கொண்டிருந்தனர். நான் கத்துகிறேன். “எட்டாப்பு போகுது, எட்டாப்பு போகுது, எட்டாப்பு போகுது”. ஒய்யாரமான நடை, மிடுக்கு கலையாமல். ஆனால்; வேகமாக வந்த டீச்சர் என் கன்னத்தில் ஓர் செல்ல அறையுடன் வயிற்றில் ஒரு கிள்ளு வலிக்காமல் கிள்ளி, ஏண்டா கத்துற என்று கேட்டார். ஆம்! இப்படித் தான் அறிமுகம் மாரி டீச்சர்.

ஆரம்பப்பள்ளி வாழ்வில் திருமதி. சுலோச்சனா  (முன்னாள் H.M) அவர்களோடு மாரி டீச்சர் இணைந்து தரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கில செய்முறைப் பயிற்சிகள் என் நினைவில் வந்து போகின்றன. ஐந்தாம் வகுப்பு முடித்ததும், ஆறாம் வகுப்பிற்கு புறாமாடி செல்ல வேண்டும். மாணவர்களை வரிசையாய் வழிநடத்திச் செல்லும் பொறுப்பு எனக்கு தரப்பட்டிருந்தது.

கார்த்திக், நீ மாரி டீச்சரைப் பார்க்கணும். எத்தனை பசங்க வந்துருக்காங்க, யார் யாரெல்லாம் நல்லா படிப்பாங்க என்ற விவரங்களை மாரி டீச்சரிடம் சொல்ல வேண்டும் என்று சொல்லி சுலோச்சனா டீச்சர் அனுப்பினாங்க. மேற்படி விவரத்தை பயம் கலந்த தைரியத்தோடு (முன்னர் அடிவாங்கிய கன்னங்களை அப்ப தடவிக் கொண்டே) சொன்னேன். பேரும் வகுப்பும் என்ன என்பதை ஆங்கிலத்தில் கேட்ட மாரி டீச்சர் என்ன ரொம்ப நல்லா படிப்பியாமே என்று கேட்டதுக்கு ஆமா என்று, சந்தோசமாய் தலையாட்டினேன். (மனதுக்குள் நல்லா படிக்கிறவன் என்று சொன்னதுக்காக சுலோச்சனா டீச்சருக்கு நன்றி சொன்னேன். வேறு பள்ளிக்கு மாறின சத்துணவு டீச்சர் அமுதா மகள் காயத்ரிக்கும், இன்னொரு சுலோச்சனா டீச்சர் மகன் சரவணனுக்கும் நன்றி சொன்னேன்.) இப்ப செங்குந்தர் பள்ளியில் நான் தான் ராஜா, நான் தான் First Rank என்று சொல்லிக் கொண்டேன். (இடியாய் பிறகு அருண்குமாரும், ராஜேஸ்வரியும், காமாட்சியும் வந்து சேர்ந்தனர்) ஆறாம் வகுப்பு சந்தோச கணங்களாய் சென்றது. இங்கிலீஸ்க்கு HM மாரி டீச்சர், Science-க்கு நாகராஜம் டீச்சர், Maths-க்கு லூயிஸ் டீச்சரும், தமிழ்-க்கு சாந்தி டீச்சரும், Social Science-க்கு வகுப்பாசிரியரும் Resource Room டீச்சரும், GAMES மற்றும் கைவேலை பாடங்களுக்கு ராஜாத்தி சுந்தர வசந்தா டீச்சரும் பாடம் நடத்தினார்கள். புது இடம், புது பள்ளி என்பது கனவாக இருந்து நிஜமாய் மாறி புறாமாடியிலிருந்த வகுப்புகள் இன்று மீண்டும் ஏனோ பழைய பட்டுப்பூச்சி பள்ளிக்கே வந்துவிட்டன. அவ்வாண்டு IX வேறு புதிதாய் ஆரம்பித்து இருந்தார்கள். இவ்வாண்டில் ஆசிரியர்களை நான் கவனிப்பதில் வெகு ஜோர். நான் தான் வகுப்புத் தலைவன், பாடம் நடத்துவது. Test Note திருத்துவது, Mark Statement எழுதுறது என ரொம்ப பிஸி நான். எனக்கு விளையாட்டில் ஆர்வம் இல்லை. (அப்போது கண்ணாடி போட தொடங்கியிருந்த காலம்) எனவே, என்னை அறிவு ஜீவியாக காட்டிக் கொள்ள பல வசீகர வேலைகளைச் செய்ய ஆரம்பித்து இருந்தேன். அப்ப Social Science Test Note, English Test நோட் திருத்த குரூப் லீடர்கள் சுற்றி வட்டமாக உட்கார்ந்து மாரி டீச்சர் விடைகளை சொல்லச் சொல்ல நாங்கள் திருத்தினோம். மாரி டீச்சர் நாங்கள் திருத்தி மார்க் போடுவதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் ஒருவனுக்கு 18/50 என்று போட்டவுடன் “டே 8 இப்படியா எழுதுவாங்க, யாருகிட்ட முதல் வகுப்பு படிச்ச, என்று கேட்டவுடன் நான் பேச்சி டீச்சருன்னு சொன்னேன். பேச்சி டீச்சர் மாதிரியே முடியை கொத்தா பிடிச்சு 8 இப்படி போடணும் என்று சொல்லிக் கொடுத்தாங்க. இப்ப எங்கெல்லாம் 8 போடுறோமோ அங்கெல்லாம் பேச்சியம்மா டீச்சரும், மாரியம்மா டீச்சரும் ஞாபகம் வர்றாங்க. அப்ப முடியை ஒட்ட வெட்ட ஆரம்பிச்சவன் இன்னவரைக்கும் முடியை ஜாஸ்தியா வளர்க்க ஆசைப்படலை. 89-ல் நடந்த சம்பவம். 2003 டூ வீலர் லைசென்ஸ் எட்டு போடுறப்பவும் ஞாபகம் வந்துச்சுன்னா பார்த்துக்கங்களேன்.

மாரி டீச்சர் 7, 8 ஆம் வகுப்புகளுக்கு பாடம் நடத்தவரவில்லை. மீண்டும் 9, 10 ஆம் வகுப்புக்கு ஆங்கிலம் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் ஆக வந்தார்.

கோ-கோ விளையாட்டு அடடா! இந்த டீச்சர்ஸ் மாணவர்களாகிய எங்களோடு ஓடியாடி விளையாண்டதெல்லாம் நினைக்கவும், யோசிக்கவும் எவ்வளவு ஆனந்தமா இருக்கு. பள்ளியை ஒரே குடும்பமா மாரி டீச்சர் வச்சிருந்தாங்கன்னு சொல்லணும், சில ஆசிரியர்கள் மதிய உணவோடு எங்களுடன் இருப்பார்கள். சில ஆசிரியர்கள் சேர்ந்து சத்துணவு சாப்பிடுவார்கள். காரணம் மாரி டீச்சர். அங்கு உணவுப் பரிமாறுதல், உணவின் சுவை, அன்பு பரிமாறுதல் ஒரு செயல்பாடாக இருக்கும்.

Hand Writting Practice Students-க்கு மட்டுமா, டீச்சர்களுக்கும் தான். அழகா எழுதணும். அத்தனையும் சுத்தமா இருக்கணும். Lunch-ல பொது ஒழுங்குடன் கூடிய கூப்பாடும் கூச்சலும் ஆரவாரம் இருக்குமே தவிர மாணவர்களிடையே வெட்டி பஞ்சாயத்துகள் அரிதினும் அரிதாகவே வரும். குப்பையை பள்ளியில் எங்கும் பார்க்க முடியாது. எதற்கெடுத்தாலும் அழகு, கலையுணர்ச்சி, ஒழுங்கு என்று சொல்லிக்கொண்டே இருப்பார். மாரி டீச்சருக்கு யார் அழுதாலும் பிடிக்காது. அழுதா டம்ளரில் பிடிப்பேன் என்பார்.

மற்ற டீச்சர்களை ஏன் உங்களால சரியா ரைட்டு கூட போட முடியாதா? என சின்ன விஷயத்துக்காக கண்டிப்பார். H.M.Room-லிருந்து இரண்டு, மூணு டீச்சர் அழுதுட்டு வர்றதை, பலரும் பார்த்து கிசுகிசுனு பேசுறப்ப நான் யோசிப்பேன் நம்பளை கிள்ளி, அறையறதைப் போல டீச்சரையும் அப்படி செய்யுவாங்களோன்னு (ஜாலியா) நினைப்பேன்.அதே மதிய சாப்பாட்டு வேளையில் டீச்சர்ஸ் சிரிப்பு சத்தம் காதைப் பிளக்கும். ஆச்சரியமா இருக்கும். பள்ளி விடும் போது மாணவர்கள் அனைவரையுமே அனுப்பி விட்டு ஒன்றாக தான் வீடு கிளம்புவார்கள்.

கறார் பேர்வழியாக, நெஞ்சம் முழுக்க இருந்த பாசத்தையும், இரக்கத்தையும் அள்ளி அள்ளி வழங்கியவர் மாரி டீச்சர். துணிவு, கண்டிப்பு, மரியாதை, மிடுக்கு, நேர்மை எல்லாம் கலந்த கலவை அவர். பின்னாட்களில் அமைதி, ஆன்மீகம், விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்களின் இமயமாய் மாறி தலைவியாகவும் இருக்க முடியும், தொண்டு செய்யும் சேவகியாகவும் இருக்க முடியும் என பல பரிமாணங்களில் பன்முகம் காட்டினார்.

மேலும் பின்னாட்களில் மாரி டீச்சர் மாரி டீச்சர் என்ற அழைப்புப்பெயர் மறைந்து நிஜமாகவே மாரி அம்மாள் டீச்சராக மாறிப்போனதை உணர்ந்தேன். தான் ஆசிரியர் பணியில் வெள்ளி விழா கண்டதை பார்வையற்ற மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி அர்த்தமுடன் கொண்டாடிய போது நானும் உடனிருந்தேன். பார்வையற்ற மாணவர்களின் பால் அதீத அன்பு கொண்டவர்.   செய்யத் தோன்றியவுடன் செய்து விட வேண்டும் என்ற மாரி டீச்சர் எண்ணம் உடனிருப்போரையும் புதுவேகம் காணச் செய்யும். செங்குந்தர் கல்வி மன்றத்தின் வெள்ளிவிழா (அப்போது நான் X மாணவன்) உயர்நிலைப்பள்ளிக்குரிய ஆண்டறிக்கையை மாரி டீச்சர் வாசிக்கும் போது பட்டுப்பூச்சி, செங்குந்தர் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி என பள்ளியின் வரலாறு என்னோடு பின்னியல்லவா கிடக்கிறது என்று கூறும் விதமாக மிடுக்கையும், கர்வத்தையும், பெருமையும் கொண்ட டீச்சராக மேடையில் கண்டேன். அந்த அறிக்கை முன் தயாரிப்பிற்கு அவர் ஆசிரியர் சாந்தியோடு எடுத்துக் கொண்ட நாட்களும், பயிற்சியும் கூட நான் மாணவனாய் இருந்து கண்டவை. இதைக் கண்ட எனக்கு என் கல்லூரி மற்றும் சீடு கல்விப் பணி வாழ்வுக்கும் உறுதுணையாய் இருந்திருக்கிறது என்பதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன். மனித வாழ்வு அவ்வளவு எளிதா என்ன? அதற்கு எவ்வளவு பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. அவரின் ஆசிரியர் பணி வரலாறு கடினமான ஒன்றாகவே இருந்து வருகிறது. ஆசிரியர் சாந்தி சொல்கிறார். “மாற்றுக் கருத்து இருப்பின் உடனே உடன்பட மாட்டார், யாருக்கும் பயப்படமாட்டார்” என்றும் மாரியம்மாள் ஒரு கட்டி முடிக்கப்பட்ட கோபுரம், அந்தக் கோபுரம் என்றும் மற்றவர் தொழத்தக்கதாய் மாறி நிற்கிறது ஆம் ஆசிரியர் சாந்தி கூறியது முற்றிலும் உண்மை.

காண்பவரெல்லாம் தொழும் கோபுரம் என்ற வரிகளைக் கேட்டவுடன் எனக்கு சிலிர்ப்பாய் இருந்தது. நண்பர் முகம்மதுகாசிம் சொன்னார் “என் வாழ்வில் செய்யுற உருப்படியான காரியம் என் மாரி டீச்சரை புகழறது தான் என்கிறார். ஒரு மாணவி என்னிடம் படிக்கிறார். மாரி டீச்சரிடம் படிக்கவில்லை. ஆனால் அவளின் தாயார் இவ்விழாவிற்கு தன் பங்களிப்பை செய்வாராம். ஏனென்றால் சரியான ஆசிரியரிடம் கார்த்திக் படித்ததினால் தான் தன் மகளுக்கு கார்த்திக் ஆசிரியராக கிடைத்திருக்கிறார் என்றவுடன் நான் ஆசிரியரின் பாராட்டு விழா ஏற்பாடுகளில் இன்னும் மும்முரமாகினேன். உண்மையில் சிலிர்ப்பான அனுபவம் எனக்கு கிட்டியது.

ஆசிரியர் மாரியம்மாள் சாக்பீஸை பிடிக்கும் அழகே அழகு, கையை எடுக்காம இங்கிலீஸ சாயிச்சு எழுது, தமிழை நிமிர்த்தி எழுது என சொல்லிக்கிட்டே எழுதுற அழகு. சேலை முந்தானையை தனக்கே உரிய ஸ்டைலில் பிடிச்சுகிட்டு நடக்குற அழகு அட அத்தனையும் சேர்ந்து ஆசிரியர் என்ற பிம்பம் நம்மை விட்டு எப்பவும் அகலுமா என்ன.

யார் கிட்டயும் எதையும் கருத்துங்குற பேரில் திணிக்காதே, யார் மனசும் நோகுற படி செய்யாதே என்பதை தற்போது இந்த விழாக்காலங்களை ஒட்டி மாரி டீச்சரிடம் கற்றுக் கொண்டேன்.

பின் வந்த நாட்களில் பள்ளி மார்க் சிஸ்டம், இன்ன பிற தவறுகள் குறித்து சண்டைகள் புரிகிற போது, நிதானமாக தனக்கே உரிய நிர்வாக ராஜ தந்திரங்களை என்னிடம் பிரயோகித்த போது அவரிடம் சிக்கி திணறினேன். ஏனெனில் தனிமனித நடப்பு வாழ்வியல் விஷயங்களில் மாமனிதர்களாக சிலர் காட்சியளிப்பதும் சமரசமாகி ஒத்துப்போவதும் வாழ்விற்கு அர்த்தம் தருவது தான். அந்த வகையில் நான் பலமுறை அவரிடம் சமரசமாகிப் போகியிருக்கின்றேன். இவ்வாறே பல ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது.

பத்தாம் வகுப்பு முடித்து சரியாக 5 வருடம் கழித்து என் அம்மா இறந்து போன செய்தி கேட்டு, நான் வீட்டில் இல்லாத நேரத்தில் மாரி டீச்சர், செல்வி டீச்சர், சாந்தி டீச்சர் வந்து போனது எனக்கு மாறாத அன்பை தோற்றுவித்திருந்தது. வீட்டுல எல்லோரும் சுகமா! உன் தம்பி, தங்கை சுகமா! என்ற கேள்விகள் சாதாரணமானவை தான். ஆனால் சந்திப்புக்களின் போதெல்லாம் அக்கேள்விகள் எப்போதும் என்னை அசர வைப்பவை. என்னிடம் சீடு மைய நிர்வாகி என்ற மிதப்பை கரைத்தும், அவர் ஆசிரியர் என்ற எல்லை தாண்டிய உரையாடல்களும் அவரிடம் மாறா அன்பை கொள்ளச் செய்தன.

பாடங்கள் பள்ளி வகுப்பறைகளில் மட்டுமல்ல. அவை சமூக வெளியோடு கலந்திருக்க வேண்டியுள்ளதல்லவா?

உண்மையைச் சொன்னால் எனக்கு ஆசிரியர் மாரியம்மாளிடம் படிப்பு, பாடங்கள் சார்ந்த கற்றல் அனுபவங்கள் நிறைய இல்லை. அவர் சொல்லித் தந்த ஆங்கிலமும், சமூக அறிவியலும் நினைவு இல்லை. நான் படிப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை ஆசிரியர்கள் பார்வையாலும் என் வேறு ஆர்வ விஷயங்களாலும் தொலைத்திருந்தேன். காரணம் நான் பாடம் தவிர்த்து வாசிக்க பழக்கப்பட்டிருந்தேன். புத்தக விமர்சனங்கள், நாளிதழ்கள், புத்தகங்களென என் தளம் ஆசிரியர்களால் மறைமுகமாக  புதுப்பிக்கப்பட்டிருந்ததால் நான் பேச்சு, கட்டுரை இவற்றில் அதிக ஆர்வப்பட்டிருந்தேன். 6 – 10ஆம் வகுப்பு வரை பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டிகளுக்கு ஒவ்வொரு முறையும் நானே மாறி மாறி பெயர் கொடுத்து கலந்து கொள்வேன். (நிறைய தோத்து லூயிஸ் டீச்சரோடு ஜாலி அரட்டையடிச்சு பெருமையோடு ஊர் திரும்புறது அக்கால வழக்கம்) இதில் ஒவ்வொரு முறையும் பள்ளி மாணவன் என்ற உறுதி சான்றிதழை நானே தயாரித்து, மாரி டீச்சரிடம் பாராட்டு வாங்கி அவங்க கையெழுத்தும் வாங்கிக்குவேன். ஏழாம் வகுப்பின் போது கைவேலை ஆசிரியர் இராஜாத்தி அவர்கள் வழங்கிய மாணவ ஆசிரியர் பணி பிற்காலத்தில் பெரிதும் உதவியது. HM மாரி டீச்சர் காலத்தில் குரூப் லீடர் Study ரொம்ப Famous, தலைவனாக மிளிர பல பகீரதப் பிரயத்தனங்களை செய்திருப்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கும் பொழுது சிரிப்பும், சற்று அவமானமாக கூட இருக்கிறது.

கேம்ஸ் டீச்சர் பார்வதி அவர்கள் HM மாரி அவர்களோடு இணைந்து வழங்கிய ஸ்போர்ட்ஸ் மீட் நிகழ்வுகள் கூட என் கண்களையும் நினைவுகளையும் விட்டு அகலாதவை. சின்ன பள்ளி என்பதும் ஆண் ஆசிரியர்கள் இல்லாத பள்ளி என்பதும் மாணவர்களை சார்ந்த ஆசிரியர்களாக இருக்க வேண்டிய சூழல் அன்று ஆளுமை உள்ள மாணவர்களை உருவாக்க உதவி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

எனக்கு சிறுவயதிலே விநாயகர்பால் அதிக ஈடுபாடு உண்டு விநாயகர் வழிபாட்டு விஷயங்களை ஒவ்வொரு முறையும் முன்னின்று செய்யும் போது மாரி டீச்சர் மனமுவந்து பாராட்டியவை பசும்நினைவுகள். செங்குந்தர் பள்ளி ஒரு வளரும் பள்ளி. ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டு கூட்டம் ஒரு அழகான வகுப்பறை வெளிநிகழ்வாக அமையும். உறவுகளும் பாசங்களும் நட்புகளும் பக்குவமாக பரிமாறப்படும் நேரங்கள் அவை. அதற்குக் காரணம் மாரியம்மாள் அவர்களின் ஆன்மீக வழி. பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்ற பாரதியின் வரியை வசமாக நமக்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ள வேண்டியது தான் (பாண்டிச்சேரி நிறைய கிராமப்புற கோயில் சுற்றுப்பிரகாரங்களில் மாலை நேர வகுப்புகளை நேரில் பார்த்திருக்கிறேன்) பின்னாளில் மேற்கண்ட விஷயங்களாலே பாரதி பிடித்தவனாகிப் போனான். (ஜெயலெட்சுமி டீச்சர் எனக்கு மூன்றாம் வகுப்பில் பாரதி வேடமிட்டு அழகு பார்த்தவர்)

90-களில் அறிவொளி இயக்கம் தீவிரம் பெற்ற போது (நான் ஒன்பதாம் வகுப்பு மாணவன்) நானும் அறிவொளித் தொண்டனாக இணைத்துக்கொண்டேன். மாரி டீச்சர் அடிக்கடி கற்பித்தல் பணியை விலாவாரியாக என்னிடம் விசாரிப்பார். தேவை ஏற்படும் போதெல்லாம் என்னை மேற்கோள் காட்டி  வழிபாட்டுக்கூட்டங்களில் அதிகமாகவே பாராட்டுவார்.

அதே தலைமை ஆசிரியர் மாரியம்மாள் என்னை பள்ளித்தலைவராக இருக்குமாறு கேட்டுக் கொண்ட பொழுது, அட்டேன்சன், ஸ்டாண்டடிஸ் என்று ஓங்கி உச்சரிக்கும் ஆங்கில நடுக்கத்தின் காரணமாகவும், இந்தியர் யாவரும் என் உடன் பிறந்தவர்கள் என்ற தேசிய உறுதிமொழியில் உடன்பாடு இல்லாத காரணத்தாலும், உறுதிமொழியை மனப்பாடமாக சொல்லத் தெரியாத காரணத்தால மாணவர் தலைவராக இருக்க ( எல்லாத்துக்கும் அப்துல்லா தான் காரணம். எங்கள் பள்ளி CO-ED மனதுக்குள் நினைத்துக் கொண்டே) மறுத்தேன். உன்னையெல்லாம் ஒன்பதாம் வகுப்பு பாசாக்கியிருக்கக் கூடாதுடா என்று மாரி டீச்சரின் வெறுப்பு பரிசாகக் கிடைத்தது.

நான் ஆறு, ஏழாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் மாணவத் தலைவன் பதவிக்கான தேர்தல் மிக ஆரவாரமாக நடக்கும். அதை கற்று நான் 89இல் கற்ற மாணவர் தேர்தல்களைப் போல 2000 முதல் 2006 வரை சீடு மைய குழந்தைகளுக்கு மன்ற தேர்தல்களை நடத்தி, குழந்தைகளை தலைவர்களாக்கி இன்று வரை மகிழ்ந்து கொண்டிருக்கிறேன்.

சில ஸ்கூல்களில் நடக்கும் போட்டிகளுக்காக நானே பலரை பொறுப்பா கூட்டிட்டு போயி மாரியம்மாள் டீச்சரிடம் பாராட்டு வாங்கியிருக்கேன்.

ஜெயிச்சு, தோத்த கதைகளை கேட்பதை விட திரும்பி, திரும்பி எனக்கு வாய்ப்பு தந்த விஷயங்களே என் வாழ்க்கையில் சில படிக்கட்டுகளைத் தொட, காரணமாயிருக்கு.

Hiogh School Life-ல 5 சுதந்திர தின விழாக்கள், 5 குடியரசு தின விழாக்களில் பேசியிருக்கேன். ஒரு முறை கூட யாரும் பேசுவதற்கு தயார் செஞ்சு தந்ததில்லை ஒரு முறை கூட யாரும் ஸ்கிரீன் செய்யலை. எல்லாமே திறந்த மனத்தோட HM மாரியம்மாள் தந்த வாய்ப்புகள்.

நான் X-த்து இங்கிலீஸ்ல 48 மார்க். நான் ஒண்ணும் Very Good Student கிடையாது. வகுப்பறையில் நான் பெரிசா எதையும் கத்துக்கல்ல. சத்தியமா எனக்கு தனி எழுத்துகளா அ, ஆ சொல்லிக் கொடுத்த பேச்சியம்மா டீச்சரையும், எழுத்துக்களை சேர்த்து வாசிக்க கற்றுக் கொடுத்த புஷ்பம் டீச்சரையும், ABCD சொல்லிக் கொடுத்த ஜெயலெட்சுமி டீச்சரையும் தவிர வேறு யாரையும் பெரிய டீச்சரா நினைக்கலை. (மாரி டீச்சருக்கு மூவரையும் பிடிக்கும் என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சி) அதை தாண்டி வேற எதையோ மாரி டீச்சர்கிட்ட இருந்து அவங்களுக்கு தெரியாமல் ஏன், எனக்கே தெரியாமல் நிறைய கத்துக்கிட்டிருந்தேன்.

(இந்த இடத்தில் மேலும் இரண்டு பேருக்கு நன்றி சொல்லலாம்) எனக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி கொடுத்தவங்கன்னா அவங்க செல்வி டீச்சர் தான். நான் பத்தாம் வகுப்பு முடிச்சதுக்கு செல்வி டீச்சருக்கும், பழனியாண்டி சாருக்கும் மட்டும் தான் நன்றி சொல்வேன். நான் X-துல நல்லா கவனிக்கப்பட்டு இருந்தா 400க்கு மேல மார்க் வாங்கியிருப்பேன். அதில எனக்கு மாரி டீச்சர் மேல இன்னும் சற்றே கோபம் உண்டு. இருப்பினும் சில நிகழ்வுகள் நம்மை ஒழுங்கா கற்றுக்கொள்ள வைக்கும். பிறகு மாரி டீச்சர் மேல அபிமான விஷயங்களை எங்கே கற்றுக்கொண்டேன் என்று நினைக்கும் போது அமுதசுரபியாய், நல் ஆசிரியர், நம் ஆசிரியர் என நினைவுகளை தோண்டி அள்ளும் போது நல் தரிசனம் தந்தவராய் மாறிப் போனார். நான் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களால் அரவணைக்கப்பட்டு வளர்க்கப்பட்டவனல்ல. அதற்காகவே நான் அவர்களுக்கு நன்றி சொல்லணும். ஆம் இன்று நான் எதற்கும் போராட தயங்கியதில்லை. என் முரண்பட்ட கருத்தை படிக்கும் போதே பதிவு செய்திருக்கிறேன். ஆசிரியர்களால் புறம் பேசி பயந்து அவர்களால் வளர்க்கப்பட்டவன். அச்சூழலே என்னை புற உலகை காணச் செய்தது. இருப்பினும் அனைத்து ஆசிரியர்களுமே என்னிடம் அன்பு கொண்டிருந்தார்கள். இதை நான் நம்பாமலும் இருந்திருகிறேன்.

என் அம்மா படிக்காதவர். HM-ஆக இருந்த மாரியம்மாள் டீச்சரிடம் மணிக்கணக்கில் அம்மா பேசுவதை நேரில் கண்டிருக்கிறேன். என் வீட்டுச் சூழல் காரணமாக தங்கையை விடுதியில் சேர்க்கவும், பராமரிக்கவும், ஆலோசனைகளையும், உதவிகளையும் மாரி டீச்சர் தர முன் வந்ததை என் தங்கை நினைவு கூறுகிறாள். மாரி டீச்சரை பெற்றோர்களும் நேசித்து வந்தனர் என்பதை காங்கிரஸ் பிரமுகர் வேல்முருகனின் மரியாதை காட்டுகிறது.

என்னையும் அறியாமல் ஆசிரியரிடம் கற்றுக் கொண்டவை, நிர்வாகத் திறன், மாணவர் அரவணைப்பு, பெற்றோருக்குரிய மரியாதை. காலதாமதமின்றி நிறைவேற்றும் அலுவலக விஷயங்கள், கண்டிப்பு, கடமை, நிர்வாக மேலாண்மை இவை அத்தனையையும் மீறி உதவும் உள்ளம். ஏழைகளின் பால் தரிசனம், அனுபவ பகிர்வு போன்றவைகள்.

பத்தாம் வகுப்பு ஃபார்வெல் – அத முழுமனதோடு நடத்த அனுமதிச்சாங்க விழாவ டிசைன் பண்ணுற விஷயங்களில் H.M மாரி டீச்சர் தலையிடலை. எனக்கு இதைச் செய் பள்ளிக்கு இதைச் செய். என்ன நிகழ்ச்சி நிரல் எனக் கேட்டு கஷ்டம் தரலை. ஆனால் மாணவனுக்கு அளவோட தர்ற சுதந்திரம் நற்காரியங்களையே தரும் என்பதை பின்னாளில் நான் உணர்ந்து கொண்டேன்.

ரொம்ப ரொம்ப வருசத்துக்கு பின்னாடி ஸ்கூல் சமூக அறிவியல் கண்காட்சிக்கு அவங்க சேகரிப்பு, உழைப்பு என்னை ரொம்ப பிரமிக்க வைச்சது. இன்னும் இந்த வயசான அம்மா ஒழுங்கு, நேர்த்தினு கூக்குரலிடும் போது இது வித்தியாசமான ஜென்மம்டா, இதைப் போல வேற எங்கையும் பார்க்க முடியாதுன்னு அசந்துபோனேன். தியான வகுப்புகள், சர்வமதத் தலைவர்கள் வருகை என இவர் பள்ளியினை ஆன்மீகத் தலமாக்கும் முயற்சிகளை வேள்வி போலவே H.M காலத்தில் செய்திருக்கிறார்.

பாண்டிச்சேரி, அரவிந்தர் – அன்னையின் அருளினால் தியாக உள்ளம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, தோல்விகளை சந்திக்கும் துணிவு, வெற்றிகளைக் கண்டு அசராமை மாரி டீச்சரின் அணிகலன்களாகத் திகழ்கின்றன.

மாரியம்மாள் டீச்சருக்கு விழா எடுக்கத் தேவை என்ன? என்ற வினா எழும் போது அவரிடம் மறைமுகமாகக் கற்ற நிர்வாக மேலாண்மை ஒன்றே என்னை சிறப்புப் பெற செய்திருக்கிறது. அதுவே என்னை விழா எடுக்க தூண்டியிருக்கிறது.

நன்றிகள், விசுவாசங்கள், ஆசிரியர் மாணவர் உறவு போன்றவற்றில் சமூக மதிப்பீடுகள் நலிவடையும் காலத்தில் அவருக்கு மாணவர்களால் பாராட்டு விழா எடுக்கப் பட வேண்டும்; புதிய தளத்தில் புதிய கோணத்தில் அமைய வேண்டும் என்ற கனவும் நினைவு ஆகிறது.

மனிதர்களை படித்துப் பழகிய ஆசிரியர் மாரியம்மாளிடம், பேசியும் கற்றுக்கொண்டும் உள்ள விஷயங்களை நான் மீண்டும் திருப்புதல் செய்கின்ற போது அவர் இன்னும் ஒரு பாடமாகக் காட்சியளிக்கிறார். ஆம் மனிதர்களும் புத்தகங்களாக அதன் பாடப் பக்கங்களாகவும் அமைகிறார்கள். ஆசிரியை. வெ.மாரியம்மாள் கற்றுக் கொள்ளத் தகும் ஒரு பாடமே.

பணி ஓய்வு என்பது சிலருக்குத் தான் முற்றுப்புள்ளி. இயங்கும் தளம் கொண்ட சமூக வெளியோடு தொடர்பு கொண்ட ஆசிரியர் வெ.மாரியம்மாள் அரசுப் பணி ஓய்விற்கு பின் இன்னுமொரு அர்த்தமுள்ள வாழ்வியல் பணிகளை கண்டிப்பாக ஒரு தொடக்கமாக கொள்வார்.

நன்றி…

                                 அ.ச.கார்த்திக்பாரதி, 16.02.2006                                       

செங்குந்தர் பள்ளி 1989 – 1994 ஆம் ஆண்டுகளின் மாணவன் (குறிப்பு: H.M செல்லம் சாரும் உணவு தந்த சத்துணவு ஜெயா, அமுதா ஆசிரியர்களும் எல்லா சத்துணவு பணியாளர்களும் பள்ளிக் காவலர்களும் என் சிறந்த பள்ளிச் செயலரான அருணாச்சலம் சாரும் என் நினைவில் நிற்கின்றனர்.)

DSC_0268

ஆசிரியருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

2005 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஒருநாளில் சீடு மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்தும் பணிகளின் ஊடாக ஒரு சந்திப்பின் போது தான்  ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறேன்டா, என்று ஆசிரியை மாரியம்மாள் சொன்னார், ஒரு சில மாதங்கள் அதுகுறித்து யோசித்து கொண்டிருந்தேன், என்ன செய்யலாம், ஒரு சால்வையோடு காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டு எல்லோரையும் போல  இருக்கலாமா? ஏதேனும் புதுமையாக செய்யலாமா?

சில மாதங்கள் ஆசிரியருக்காக வேலை செய்ய போகிறேன் என ஆடம்ஸ் அவர்களிடம் சொல்லிவிட்டு ஒரு பெரிய விழாவாக எடுக்கலாம் என்ற திட்டமிட்டேன். அதை முதலில் சீடு இளைஞர்களிடம் விவரித்தேன், எல்லோருக்கும் உற்சாகம். ஆசிரியை மாரியம்மாளின் பழைய மாணவர்களிடமும் பேசியதும், நடத்தலாமே என ஊக்கமூட்டினர். விழா ஏற்பாடுகள் நடக்க நடக்க சக ஆசிரியர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகத்தினர் இணைய ஆரம்பித்தனர்.

அழைப்பிதழ் சரி பார்க்க தமிழாசிரியர் சாந்தியிடம் தர  அவர் வாசித்துவிட்டு  வாசிக்கும் போதே  உணர்ச்சிகள் பெருகுதப்பா என்றார், இரண்டு விதமான அழைப்பிதழ்கள் தயார் செய்யப்பட்டன . முதன்மை கல்வி அலுவலர் தலைமை விருந்தினர் அழைப்பிதழை பார்த்தவுடன்  வெகுவாக பாராட்டி உடனே ஒரு பாராட்டு மடல் எழுதி தந்தார். 4 இடங்களில் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டன,  துண்டு பிரசுரங்கள், வால்போஸ்டர்கள் அடிக்கப்பட்டன. இரண்டு பேனர்கள் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டன, ,ஆசிரியத்தொண்டர் ராஜசேகர் உதவியால் ஆசிரியரை பற்றி இரு காணொளிகள் தயாரிக்கப்பட்டன,   ஆசிரியரின் பணி நிறைவு  பாராட்டு மலர்  தயாரிக்கும் பணி. தீன்ப்ரிண்டர்ஸ் முகமது காசிம்  உதவியால் அச்சு இதழாக முடிந்தது., இது தவிர இரண்டு மூன்று கல்வியாண்டைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்களால் தனித்தனியே வாழ்த்து சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.

1

25.2.2006 இரண்டு மேடைகள், எங்கும் தோரணங்கள்ஆசிரியர்க்கு  நன்றி தெரிவிக்கும் பேரணி ,மாணவர்களுக்கு பரிசு, ஆசிரியரை பற்றிய புகைப்பட கண்காட்சி, பழைய மாணவர் சந்திப்பு, ஆசிரியருடனான கற்றல் அனுபவ உரைகள், ஆசிரியர்க்கு பரிசுகள் , ஆசிரியர் பற்றிய காணொளிகள்,ஆசிரியரை பற்றி மாணவர்கள் தயாரித்த பாடல்கள்,  கண்கவர் கலைநிகழ்ச்சிகள் , பாராட்டு மலர் வெளியீடு ,சுவைமிகு சிற்றுண்டி, ஆசிரியரை  அவர் வீடு வரை கொண்டு விடுதல் என பிரமாண்ட தொரு விழாவாக,  1000 பேர் பங்கு கொண்ட யாவரும் மறக்க முடியாத விழாவாக நடந்து  முடிந்தது.

தமிழ்நாட்டில் எவருக்கும் இது போல் விழா நடந்தது இல்லை என்ற முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் சபாபதி , ஆசிரியை மாரியம்மாளை ஆசிரியராக பெற்ற மாணவர்களையும், சிறப்புமிக்க மாணவர்களை பெற்ற ஆசிரியர் மாரியம்மாள் அவர்களையும் மனதார பாராட்டினார்.

2

விழாவுக்கு வந்திருந்த சில ஆசிரியர்களின் பெண்பிள்ளைகள், இப்படியெல்லாம் ஒரு டீச்சருக்கு பங்ஷன் நடக்குமா என ஆச்சரியமும் , பிரம்மிப்பும் அடைந்தனர்.

ஆசிரியப்பணியில் அற உணர்வுடனும், மனநிறைவுடனும் , நிறை வாழ்வு வாழ்ந்து தற்போது மதுரை சீடு மூலமாக பல நூறு பிள்ளைகள் பயனடையவும் வாழ்ந்து வருகிறார்.

தன் அன்பினால் ஆயிரமாயிரம் பேரை உறவுகளாய் பெற்றிருக்கும் ஆசிரியர் மதுரை சீடு அறங்காவலர் வெ.மாரியம்மாள் வரும் ஜூலை 6 ஆம் தேதி 70 ஆம் ஆண்டு பிறந்தநாள் காணுகிறார் . அன்னாருக்கு எமது வாழ்த்துக்களும் வணக்கமும் அன்பும் உரித்தாகுக.

ஓர் அரங்கத்தின் கதை 32

19 ஆம் ஆண்டு

2017-2018 (ஏப்ரல், மே, ஜூன் 2017)

இவ்வாண்டின் தொடக்கத்தில் கௌசல்யா, விந்தியா, ஜினியா, விஜயலெட்சுமி, சதீஷ் பாபு என 5 பேர் புதிய தொண்டர்களாக இணைந்துள்ளனர்.

இரண்டாமாண்டில் வாசிம்கான், அழகர், பிரேம், நாத், சுதா, அந்தோணி கிப்ட்சன் என 6 பேர்

மூன்றாமாண்டில் விக்கி, ஆனந்த், ஜேம்ஸ் என 3 பேரும்

நான்காம் ஆண்டில் முத்துகணேஷ்

முதுகலை முதலாமாண்டில் முத்தையா, மதன் என இருவரும்

பட்டப்படிப்பு முடித்து தொண்டர் பணியை தொடரும் ஜென்ஸி, சர்மிளா என இருவரும்

மொத்தம் 20 பேர் கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்,

19 ஆம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே, ஜூன்-இல் நடைபெற்ற சில நிகழ்வுகளையும், அவற்றில் இளைஞர்களின் பங்களிப்பையும் காணலாம்

இந்த வருடமும் இளைஞர்கள் சித்திரை திருவிழாவில் தண்ணீர் பந்தலில் சேவையாற்றினர். தல்லாகுளம் மற்றும் பால்பண்ணை பகுதிகளில் பொதுமக்களுக்கு இரண்டுநாட்கள் மோர், மற்றும் குடிதண்ணீர் வழங்கினர்.

செசி இளைஞர்கள் நடத்திய கிராமப்புற குழந்தைகளுக்கான முகாமில் மதுரை சீடு இளைஞர்களும் தங்கள் பங்களிப்பை செய்தனர். 3 நாட்கள் 6 வெவ்வேறு கிராமங்களிலும் கடைசி நாள் செசியிலும் நடைபெற்ற முகாமில் பல்வேறு வேலைகளை மதுரை சீடு இளைஞர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை கிராமத்திற்கு அழைத்து செல்வது. திட்டமிடுதல், பொருட்கள் பராமரிப்பு, மேடை அலங்காரம், புகைப்படம் எடுத்தல், ஆவணப்படுத்துதல். முதலிய பணிகளை திறம்பட செய்தனர். மதுரை சீடு இளைஞர்களின் பணிகள் செசி பணியாளர்கள், இளைஞர்கள், திரு.பி.வி.இராஜகோபால், தன்ராஜ் அண்ணா ஆகியோரால் வெகுவாக பாராட்டப்பட்டது.

பொருளாதார நெருக்கடி, மற்றும் தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த வருட வசந்தமுகாம் கரும்பாலையிலேயே 4 நாட்கள் நடத்தப்பட்டது. அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வுக்கான சிறப்பு உரைகள், விளையாட்டுகள், பாட்டு, சமையல். குறும்படம் எடுத்தல் என பல நிகழ்வுகளை இம்முகாம் உள்ளடக்கியிருந்தது. சிறப்பு விருந்தினர்களான காந்தி மியூசிய அலுவலர் நடராஜன், திருமிகு. எவிடன்ஸ் கதிர், திருமிகு. வெண்ணிலா, திருமிகு. நன்மாறன், Ex.MLA ஆகியோர் காந்தி, அம்பேத்கர், பெரியார். கார்ல்மார்க்ஸ் பற்றி பேசினார்கள். இளைஞர்கள் செய்து வரும் கல்விப்பணியை பாராட்டினார்கள்.

இளைஞர்கள் குழந்தைகளுடன் சேர்ந்து எடுத்த குறும்படங்கள் ஒரு சிறப்பான முயற்சி. விக்கி, சூர்யா, மற்றும் ஆனந்த் எடுத்த குறும்படத்தை இந்த இணைப்பில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=Jt7ebNYTau4

செசி மையமும், மதுரை சீடு அமைப்பும் இணைந்து இளைஞர்களுக்காக புத்தாக்க மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகளுக்கான பயிற்சி முகாமை 29.04.2017, 30.04.2017, 01.05.2017 ஆகிய மூன்று தினங்கள் கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் யதுகபாடி கிராமத்தில் உள்ள தடியண்டமோல் என்ற இடத்தில் நடத்தின.செசி அருகாமையில் உள்ள 10 கிராமங்களைச் சேர்ந்த 21 கல்லூரி இளைஞர்கள், மதுரை சீடு நிறுவனத்தைச் சேர்ந்த கரும்பாலைப் பகுதி கல்லூரி இளைஞர்கள் 17 பேர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 2 கல்லூரி இளைஞர்கள் என மொத்தம் 40 பேர் இம்முகாமில் பங்கேற்றனர்.

இம்முகாமின் கருத்தாளர்களாக  மலைக்குடியா சமூக செயல்பாட்டாளர். குடியார முத்தப்பா அவர்கள், பழங்குடி மக்களின் வாழ்வும், பண்பாடும் என்ற பொருளிலும், தடியண்டமோல் மலை இளைஞர். பரத் சந்திர தேவய்யா, தடியண்டமோல் இடத்தின் தாவரங்கள், பறவைகள், விலங்குகள், நீர் ஆதாரங்கள் என்ற பொருளிலும்,  குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர். செல்லப்பாண்டி, தலைமைத்துவ பண்புகள், கிராம மேம்பாட்டு பணிகளில் இளைஞர்களின் பங்கு, பாரம்பரிய விளையாட்டுக்களை குழந்தைகளிடம் கற்பிப்பது என்ற பொருளிலும், நாடக செயல்பாட்டாளர். பக்ருதீன், பழங்குடியினரின் கலை, கலாச்சாரம், பாரம்பரிய கலைகளை மீட்டுருவாக்கம் செய்தல் என்ற பொருளிலும், தமிழ்நாடு ஏக்தா பரிஷத் மாநில ஒருங்கிணைப்பாளர். தன்ராஜ், பழங்குடியினரின் இயற்கையோடு இணைந்த வாழ்வு, பாரம்பரிய உணவுகள், கிராம மேம்பாட்டு பணிகளில் இளைஞர்களின் பங்கு, உள்ளூர் நீர் ஆதாரங்களை பாதுகாப்பதும், பராமரிப்பதும் என்ற பொருளிலும், மதுரை சீடு நிர்வாக அறங்காவலர். அ.ச.கார்த்திபாரதி, குழந்தைகளுக்கான மேம்பாட்டு பணிகளை திட்டமிடுவது, தன்னார்வலர்களை திரட்டுவது, உள்ளூர் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்கான உள்ளூர் இளைஞர்களை திரட்டுவது, குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு முகாம்களை வடிவமைப்பது என்ற பொருளிலும்,  செசி மைய கிராமப் பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர். செல்லாத்தாள், தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்க தேவையான அடிப்படை தரவுகள் என்ற பொருளிலும், கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

பங்கேற்பு என்ற அடிப்படையில் பயிற்சிகளின் வழியே இளைஞர்களிடையே வெளிப்பட்ட கருத்துக்களைக் கொண்டு முகாமில் இருந்து இளைஞர்கள் குழந்தைகளுக்கான முகாம் ஒன்றை நடத்துவதையும், தொடர் செயல்பாடுகளாக உள்ளூர் நீர் வள ஆதாரங்களுக்கான வரைபடங்களை தயார் செய்வதையும், உள்ளூர் நீர் ஆதாரங்களை மீட்டெடுக்கும் பணிகளை செய்தலையும், உள்ளூர் நீர் ஆதாரங்களை தூர்வார்தல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளையும் திட்டமிட்டுள்ளனர்.

வைகை மைய மண்டபத்தில் நடைபெற்ற  , தண்ணீர் மனிதன் திரு. இராஜேந்தர் சிங் பங்கு பெற்ற வைகை நதி வள மீட்பு கூட்டத்தில் இளைஞர்கள் பங்கேற்றனர். எதிர்காலத்தில் நதி தூய்மை, தூர்வாருதல், வறட்சி நிவாரண பணிகள் உள்ளிடவற்றில் தங்களை இணைத்துக் கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

மதுரை மாநகராட்சி பாரதியார் பூங்காவை மறுசீரமைத்து பொதுமக்கள் பயன்படுத்தும்படியாக வண்ணமயமாகவும், பசுமையாகவும் மாற்றிய ஆர்க்கிடெக்ட் ஷாமினி அவர்களுடன் குழந்தைகளும் இளைஞர்களும் கலந்துரையாடினர்.

இவையெல்லாம் 2017-18 துவக்கத்தில் காலாண்டில் நடைபெற்ற நிகழ்வுகள் மட்டுமே, இந்த வருடம் முழுவதும் பல்வேறு புதுமையான நிகழ்வுகளும், கண்டடைதல்களும் காத்திருக்கின்றன.

தேடல்கள் அரங்கம் இனி

1531772_1057748084246585_5540599456004580997_n

19 ஆம் ஆண்டில் தேடல்கள் அரங்கம். பேராசிரியர். பிரபாகர் அவர்களின் வழிகாட்டுதலில் மாற்றுக்கல்வி, கலைக்காக இயங்கும் கலைடாஸ்கோப்-உடன் இணைந்து பயணிக்க உள்ளது.

மதுரை சீடு-இன் ஆதார சுருதிகளில் ஒருவராக உள்ள பேரா.பிரபாகர் மதுரை சீடு தேடல்கள் இளைஞர்களுக்காகவும், மதுரை நகர் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள இளைஞர்களுக்கு மாற்று கல்வி, மாற்று சிந்தனை, கலை மற்றும் ஊடகம் சார்ந்த அறிவை எடுத்துச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளார்.

பல வகையாக ஆளுமைகளும், சிந்தனைகளும், கற்றலும், செயல்படுதலும் சங்கமிக்கும் இடமாக திட்டமிடப்பட்டு நாகனாகுளம். மனோரஞ்சிதம் வீதியில் கலைடாஸ்கோப் அலுவலக மாடியில் தேடல்கள் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

பேரா.பிரபாகர் அவர்களுடன் இணைந்து பணி செய்வது செய்வது அலாதியான ஒன்று.

தேடல்கள் அரங்கத்தை வடிவமைக்கும் பணிகளில் தங்களால் இயன்ற உடல் உழைப்பை மதுரை சீடு இளைஞர்கள் தந்தனர்.

கற்பவரின் மனநிலையை கருத்தில் கொண்டு கற்றல் சூழலை உருவாக்குவது ஒரு ஆசிரியரின் தலையாய கடமை.

சுமார் 50 பேர் அமரக்கூடிய அளவில், காற்றோட்டமான கூட்ட அரங்கு, வண்ண திரைச்சீலைகள், மூங்கில்கள், கண்ணை உறுத்தாத மின் விளக்குகள், வசதியாக உட்கார குஷன் என கடந்த 6 மாதங்களாக தானே முன்னின்று இரசித்து, இரசித்து, பொறுமையாக ஒரு கூட்ட அரங்கை இளைஞர்களுக்காக பேரா.பிரபாகர் வடிவமைத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=RYF4YBI4OVU

வரும் காலங்களில் இன்னும் நூறு நூறு இளைஞர்களுக்கு தலைமைப்பண்பு, மாற்றுச்சிந்தனை, கலை, கல்வி, சிறந்த சினிமாக்கள், சிறந்த ஆளுமைகளின் அனுபவங்கள் ஆகியவற்றை கொண்டு செல்லும் பணியில் இயன்ற வரை பேரா.பிரபாகர் அவர்களுடன் இணைந்து செல்ல மதுரை சீடு தயாராகி வருகிறது.

18238811_1729004937397509_7177741012874324079_o

DSC_0049

ஓர் அரங்கத்தின் கதை 31

2016-2017 “18ஆம் ஆண்டு”

இந்த 31ஆவது பகுதியை எழுதிக்கொண்டிருக்கும் போது மதுரை சீடு அரங்கங்களின் கதை என்று பெயரிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. குறிப்பாக தேடல்கள் அரங்கத்தின் கதையாக, தேடல் இளைஞர்களின் கதையாக, ஒவ்வொரு ஆசிரியத்தொண்டரை பற்றியும் தான் எழுத திட்டமிட்டேன். எழுதும் போது அது ஒரு இலக்கியமாக, சுவாரசியமான நடையில் இருக்கனும் என்ற பேராசை இருந்தது. ஆனால் அது கைவரவில்லை.

எல்லாமே அறிக்கையாக, செய்தியாக, என ஏதோ நன்றாகத்தான் இருக்கிறது. முத்தையா, அருண்குமார், விக்கி உதவியால் தான் ஆன மட்டும் 31ஆவது பதிவில் வந்து நிற்கிறது.

நண்பர்களே

தொடர்ந்து சலிப்பின்றி இயங்குவது என்பது கடினமான ஒன்று. கடும் நெருக்கடிகளுக்கிடையிலும், போராட்டங்களுக்கிடையிலும், உள்ளூர் புகைச்சல்களுக்கிடையும் தான் நாங்கள் வளர்ந்தோம். பணமில்லாமலும், பணத்தோடும் மாறி மாறி இயங்க பழகி இருந்தோம். அரங்க கட்டிடங்கள் இடம் மாறிக்கொண்டே இருந்தன. இதன் ஊடே மதுரை சீடு உடனான பிணைப்பை குழந்தைகள், இளைஞர்களிடையே இழை இழையாக பின்னினோம். இதோ இப்போது 18ஆம் ஆண்டு நிகழ்வுகளை பகிர்கிறேன்.

18 ஆம் ஆண்டு அரங்கங்களின் கதையை எழுதும் முன் +2 படித்து தற்போது கல்லூரி முதலாமாண்டு முடித்துள்ள ஸ்ரீநாத்-ஐயும், மதுரை சீடு நிறுவனமான பிறகு முதல் வகுப்பில் 2007ல் இணைந்து 2017ல் 10-ஆம் வகுப்பு முடித்த ஜெயப்பாண்டியையும் நினைத்துக் கொள்கிறேன். ஜெயப்பாண்டிக்கு படிப்பில் ஆர்வமில்லை, எழுதவும் படிக்கவும் 10 வருடங்கள் போராடினான். ஒரு ஸ்டேஷனரி கடையில் இப்போது வேலை செய்கிறான். பாலிடெக்னிக் படிக்க போவதாகவும், மதுரை சீடுக்கு வர இயலாத நிலையையும் தெரிவித்தான். சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் வேலை செய்கிறான். சரி, நல்லா முயற்சி செய்து படி, அண்ணனை அப்பப்ப வந்து பாரு என்றேன். ஜெயப்பாண்டி சுதந்திரமாக பொதுவெளியில், இன்னும் கற்றுக்கொண்டு வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைப்பதும், இயற்கையை வேண்டிக் கொள்வதுமே என்னால் முடியும். அவனது குடும்ப நிலை, கல்வி நிலை அப்படி.

ஸ்ரீநாத் கைக்குழந்தையாக இருக்கும் போது சீடு பணிகள் துவங்கின. வாழ்க்கை ஓர் சுழற்சி. ஸ்ரீநாத் வாண்டுகள், வேர்கள், கனவுகள், என்று இப்போது தேடல்கள் அரங்க உறுப்பினராகி உள்ளான்.

17ஆம் ஆண்டில் 30 பேர் மதுரை சீடு வழியே +2 முடித்தனர். 18 ஆம் ஆண்டு துவங்கியது. 100% கல்லூரியில் இணைந்தனர். 18 ஆம் ஆண்டு கல்விப்பணியில் முதலாமாண்டு இளைஞர்கள் 8 பேரும், இரண்டாமாண்டு இளைஞர்கள் 10 பேர், மூன்றாமாண்டு இளைஞர்கள் 6 பேர், நான்காமாண்டு இளைஞர் ஒருவர், கல்லூரி படிப்பை முடித்த 5 பேர், என மொத்தம் 30 பேர் ஈடுபட்டனர். 15 பேர் முதல் தலைமுறையினர். மதுரை சீடு-இல் 18-ஆவது பேட்ச் +2 முடித்தவுடன் ஒரு தரவை திரட்டினோம்.

சீடு துவங்கப்பட்ட 1999 – 2000ஆம் கல்வி ஆண்டில் கரும்பாலை பகுதியில் பிறந்தவர்கள் தற்போது என்ன படிக்கிறார்கள் ? என்ன செய்கிறார்கள் ?

1999 – 2000ஆம் ஆண்டில் கரும்பாலை பகுதியில் பிறந்தவர்கள் 90 பேர் மதுரை சீடு கல்வி மையங்களுக்கு வெவ்வேறு காலங்களில் வந்துள்ளனர். 26 பேர் முழுமையாக 12 ஆண்டுகள் பயன்படுத்தியுள்ளனர்.

தற்போது கல்லூரி படிப்பில் இணைந்தவர், ஆ் + பெ = மொ
4 பேர் ITI, பாலிடெக்னிக் படிப்பவர்கள் 29 + 22 = 51

இடைவிலகலாகி மீண்டும் பள்ளியில்
சேர்ந்து படித்துகொண்டிருப்பவர்கள் 02 + 01 = 03

பள்ளி இடைவிலகல் 24 + 11 = 35

இறந்து போனவர் 01 + 00 = 01

56 + 34 = 90

கல்லூரிக் கல்விச்சேர்க்கை : 57 %

பள்ளி இடைவிலகல் + கல்லூரியில் சேராதவர் : 39 %

இடைவிலகலுக்கு பிறகு படிப்பவர் : 03 %

இறந்து போனவர் : 01 %

இத்தரவு நாங்கள் செய்ய வேண்டிய பணியை மீள் ஆய்வு செய்ய உதவியது.

கல்லூரி மூன்றாமாண்டை கார்த்திக் (Maths), ஜென்ஸி (Commerce     ), ஷர்மிளா (English), சூர்யா (Economics), நாகார்ஜூன் (Commerce), சதீஷ் (Commerce) என மொத்தம் 6 பேர் முடித்துள்ளனர். கார்த்திக், சதீஷ் மற்றும் நாகார்ஜூன் மூவரும் தனியார் நிறுவன பணியில் இணைந்துள்ளனர்,

இவ்வாண்டு வாசிம்கான் தலைமையில் இளைஞர்களின் சேவாலயம் விடுதி கல்விப்பணி தொடர்ந்தது.

கம்பம் செயின்ட் மேரீஸ் பள்ளியில் வசந்தமுகாம் ஐந்து நாட்கள் நடத்தப்பட்டது. மலையேற்றம், முல்லைப்பெரியாறில் ஆட்டம், வார்லி பெயிண்டிங், கைவினைப்பொருட்கள், பொம்மலாட்டம், சுருளி அருவி, காகிதப்பொருட்கள், Lantern செய்தல் தினசரி விருந்தினர்களுடன் கலந்துரையாடல், விதவிதமான விளையாட்டுகள், என சிறப்பான முகாமாக அமைய இயக்குநர் இளவரசியுடன் இளைஞர்கள் உதவினர், புகைப்படத்தொகுப்பை இங்கே பார்வையிடலாம்.

https://goo.gl/photos/KFZSqKxhfiDGvQsH7

https://www.youtube.com/watch?v=bhl9ugNjaOk

ஜூனியர் விகடன் நடத்திய அரசியல் விவாத அரங்கில் பங்கு கொண்ட இளைஞர்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

https://youtu.be/U3LQAI1kfIM?list=PLuUWy6NQLoCUh7fvRnGNHxSqg4TE_2ZSw

வாக்களிக்கும் கடமையை வலியுறுத்தும் விதமாக 13.04.2016ல் தெருநாடகம் ஒன்று கரும்பாலை தெருக்களில் நிகழ்த்தப்பட்டது.

தமிழ்ப்புத்தாண்டு அன்று விவாத அரங்கம் நடத்தப்பட்டது.

கலைடாஸ்கோப் நடத்திய மலையாள சினிமா தமிழ் சினிமா போக்குகள், மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் உழைப்பின் பாத்திரம், ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதை புத்தக விவாதம் போன்ற அமர்வுகளில் பங்கு கொண்டனர்.

காந்தி மியூசியத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற உதவினர்.

நான் முன்னர் எழுதியவற்றில் விடுபட்டவைகளில் ஒன்று குழந்தைகள் பேரவை தேர்தல். வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை, தேர்தல் பிரச்சாரம், வாக்களிப்பு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு, என ஆண்டுதோறும் கலகலக்கும் குழந்தைகள் மாமன்ற தேர்தல் 18 ஆவது முறையாக நடைபெற்றது. இவற்றை நடத்துவதில் இளைஞர்கள் பங்கு முக்கியமானது.

தேன்கூடு குழந்தைகள் வங்கி பலரால் பாராட்டப்படும் திட்டமாகும். குழந்தைகளின் விருப்ப சேமிப்பு கடந்த பத்தாண்டுகளாக உரிய வட்டியுடன் குழந்தைகளிடம் திருப்பி தரப்படுகிறது. தேன்கூடு சேமிப்பு வசூலிப்பது, பதிவு செய்வது போன்றவை கற்பித்தல் பணியோடு, இளைஞர்கள் அன்றாடம் செய்யும் பணியாகும். 14.06.2016 அன்று சேமிப்பு ஒப்படைக்கும் விழா பெற்றோர்கள் பங்களிப்போடு சிறப்பாக நடந்தது.

ஆண்டுதோறும் கல்வி ஆண்டின் துவக்க நாளில் கரும்பாலை நுழைவு வாயில்களில் முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி இளைஞர்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர்.

7.7.2016 அன்று ரமலான் அன்று மருதாணி இடுதல், கண்ணுக்கு மை தீட்டுதல், பிரியாணி சமையல், சூபி இசை என கொண்டாடி மகிழ்ந்தனர்.

மதுரை சீடு-இல் குழந்தைகள் நாடகங்களே பிரசித்தம். ஆனால்  இவ்வாண்டு தேடல் இளைஞர்கள் முழுமையாக பங்கேற்ற மேக்பத் நாடகத்தை ஷேக்ஸ்பியர் 400 ஆவது ஆண்டையொட்டி இயக்குநர். இளவரசி, நாடகமாணவர் வடிவேலுவுடன் சேர்ந்து வடிவமைத்து செசி மையத்தில் அரங்கேற்றினர். கௌசல்யா, விஜயலெட்சுமி மட்டுமே +2 மாணவர்கள். மற்றவர்கள் அனைவருமே கல்லூரி இளைஞர்கள். ஒரு முழுநீள நாடகம் ஒன்றில் இளைஞர்களாக பங்கேற்றது சீடு வரலாற்றில் முதல் முறை. அதை இளவரசி அவர்கள் சாத்தியப்படுத்தினார். அடுத்ததாக காந்தி மியூசியத்தில் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.

பேரா. பிரபாகர், சமூகசெயல்பாட்டாளர் தன்ராஜ், தமிழ் இலக்கிய மாணவர்கள், நாடக ஆர்வலர்கள், ஆசிரியர்கள், மெல்லி அக்கா, மதுரை சீடு ஆதரவாளர்கள் போன்றோர் இளவரசியின் முயற்சியையும், இளைஞர்களின் நடிப்பையும் வெகுவாக பாராட்டினர்.

மதுரை செசி கலை பண்பாட்டு மையத்தில் சீட் அமைப்பினர் நிகழ்த்திய சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகம் ஆனது உலகின் பல நாடகக்குழுவினர் இப்பிரதியை நிகழ்த்துக்கலையாக நிகழ்த்திய நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்டுகாணப்பட்டது எனலாம். குறிப்பாக நாடகத்திற்காக வரையறுக்கப்பட்ட மொழியியலைக் கடந்து மதுரைக்கே உரிய மொழி நடையில் பேசியது, அரசவையினர் இப்படியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கருத்தியலை மாற்றி சாமானிய மனிதனாக உலவவிட்டது, நிகழ்காலத்தைய தீவிரவாதத்தை போகிறபோக்கில் காட்சிப்படுத்தியது என பல கூறுகளை உள்ளடக்கிய இந்நாடக அரங்கேற்றம் செழுமைப்படுத்தப்படவேண்டிய ஒரு கன்னிப்படைப்பு 

(ராஜன் – அமெரிக்கன் கல்லூரி ஆராய்ச்சி மாணவர்)

குற்ற உணர்ச்சியும், பயமும் தரும் வாதைகள், 

மதிப்பீடுகளை பலி கொடுத்து முன்னேற துடிக்கும் லட்சியம், 

அதிகாரத்திற்கான வேட்கை- 

மேக்பத் 21 ஆம் நூற்றாண்டிற்கும் பொருத்தமான கதைக்களம். 

மதுரை சீடு இளைஞர்கள் நடிப்பில் அருமையான நாடக அனுபவம் கிடைத்தது

காட்சிகளை பிரித்த விதம்
,
வசனங்களில் பழமையும், புதுமையும் கலந்த தன்மை,

பதைபதைக்க வைக்கும் சண்டைக்காட்சிகள், 

ஒற்றை வசனமில்லாமல் நகர்ந்த நாடகத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், 

ராணி மேக்பத்தின் அகிலும் சந்தனமும் வசனம், 

இசை, சமகால இணைப்புகள் என சுவாரசியங்கள் ஏராளம்.

வாழ்க்கை எந்த நிமிடமும் எதிர்பாராத திருப்பங்களையும், ஏணியையும், பாம்பையும் எதிர்கொள்ள வைக்கலாம் என்பதையே அரங்கத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் வெவ்வேறு விதமாக சதுரஙகம் போல மாறிய பெட்டிகள் உணர்த்தியதாக எடுத்துக்கொண்டேன். 

பாராட்டுகளும், வாழ்த்துக்களும், நன்றிகளும் (ச.அருண்குமார், விழுதுகள்)

In the category of art they recently put together a production of Shakespeare’s Macbeth in Tamil. It is a completely home grown production, starting with the translation of an abridged version of the play into Tamil, selecting pieces of music for the production, designing costumes, designing the scenes, and finally selecting actors, directing the play, and bringing it to life. There was something to do for everyone. And there was room for creativity, learning how to organize, and learning how to plan. They very proudly performed their production for me. (Melli Annamalai)

சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த ஆண்ட்ரியா வில்சன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு இருவாரங்கள் ஆங்கில வகுப்புகள் நடத்தினார் மற்றும் நாடக ஆக்கங்களில் ஊக்கப்படுத்தினார்.

அமெரிக்க ஆசிரியர்கள் குழு ஒன்று மதுரை சீடு அரங்கங்களை பார்வையிட்டு இளைஞர்களின் செயல்பாடுகளை பாராட்டி சென்றது.

சுதந்திரதினவிழா அன்று “இளையதலைமுறையின் சுதந்திர சிந்தனைகள்” தலைப்பில் மெல்லி அவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் நீதி தேடும் பாலஸ்தீனரும், போப் பிரான்சிஸ்-இன் அக்கறையும் என்ற தலைப்பில் நடைபெற்ற புத்தக அறிமுக கூட்டத்தில் இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது என்ற பொருளில் நடைபெற்ற கூட்டத்தை நடத்துவதில் இளைஞர்கள் உதவினர். மொழியியலாளர் இ.அண்ணாமலை, சமூகசெயல்பாட்டாளர்கள் அரிஅரவேலன், பர்வதவர்த்தினி, தன்ராஜ், கலகலவகுப்பறை சிவா, ஆசிரியர். தென்னவன், ஆசிரியர்.பிரௌனி, விஜயலெட்சுமி,  அரசுப்பள்ளி ஆசிரியர்கள், கலந்து கொண்டனர்.

போலந்து நாட்டு நண்பர் ஜேக்கப் இரு மாதங்கள் தங்கியிருந்து இளைஞர்களுக்கு ரஷ்ய மொழி அடிப்படை பயிற்சி வழங்கினார்.

வருடந்தோறும் நடைபெறும் சுதந்திரதின விழா மற்றும் குடியரசு தினவிழா என்பவை எப்போதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கானவை. சுதந்திரதினவிழா அன்று குழந்தைகள் பேரவை தலைவரும், (+1 அல்லது +2 மாணவர்) குடியரசு தினவிழா அன்று இளைஞர் பேரவை தலைவரும் (கல்லூரி மூன்றாமாண்டு மாணவர்) கொடியேற்றுவர். தலைவர்களை ஏகபோக மரியாதையோடு தெருக்களில் அழைத்து வரும் நிகழ்வும் நடப்பதுண்டு.

விஜய் டிவி புகழ் மேஜிக் கலைஞர் ஷியாம் நடத்திய ஷோவை குழந்தைகள், இளைஞர்கள் ஆரவாரமாக ரசித்தனர்.

வாசிம்கான் மற்றும் ஸ்ரீநாத் சென்னையில் பிரதம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் கற்பித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கு கொண்டு திரும்பினர்.

14 வகையான உணவுப்பொருட்கள் வரிசைகட்டிய உணவுத்திருவிழாவில் குழந்தைகள் சமைக்க இளைஞர்கள் உதவினர். இளைஞர்களின் ஸ்டாலிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆசிரியர்கள் மாரியம்மாள், சிவா, சரவணன், மற்றும் மத்திய அரசு பணியாளரும் மூத்த தொண்டருமான சுரேஷ் குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதுயுகம் 25ஆவது இதழ் பெண் குழந்தைகள் சிறப்பிதழாக வெளியிடப்பட்டது. பாத்திமா கல்லூரி பேராசிரியர்கள் சுமேதா, பொன்மலர், பத்திரிக்கையாளர் இந்து லோகநாதன், விஜி முருகேஷ் தம்பதிகள், டாக்டர்.உஷா, ஆசிரியை மாரியம்மாள், இயக்குநர் இளவரசி போன்றோர் கலந்து கொண்ட நிகழ்வில் நிகழ்ச்சி ஏற்பாட்டு வேலைகள், கண்காட்சி போன்றவை இளைஞர்களால் சிறப்பாக செய்யப்பட்டன.

https://www.youtube.com/watch?v=cAN7mTEtNBY&t=10s

The special girls’ issue of Puduyugam magazine brings out the struggles and challenges in the girls’ own voice. It also shows the immense talent of the girls, and their confidence and creativity in questioning the world around them. They question many accepted practices. That is very impressive.

The deep desire for freedom to study and work is very visible. They yearn to break free of the constraints and barriers. They want to study, have careers. I really like the way this comes through in their voices. They are constantly told they have to be at home, but they want to break away from that. It is exhilarating to see them boldly say all of this.

MY FAVORITE LINES:
“Saraswati is the Goddess of Knowledge, and you pray to a woman for knowledge. Why do you deny knowledge to women?”

“Women symbolically light the lamps in the house, isn’t knowledge a lamp in a house?”

“Don’t you remember the influence of women teachers in your lives?”

“Identifying some great educationists as women (for example, Maria Montessori).”

MY MOST FAVORITE SECTIONS:
The 11th standard boys writing about how they will treat the women in their lives. 

The two sections on advice to my brother, about how they say they should be treated the same as their brothers.

The drama created by Elavarasi is very creative!

The magazine is a great effort. (Melli Annamalai)

நாடக இயக்குநர், பேராசிரியர், காந்தியவாதி திரு.பிரசன்னா அவர்கள் குழந்தைகள் இளைஞர்களிடையே உரையாடினார். மதுரை சீடு நாடக முயற்சிகளைப் பற்றி இளைஞர்கள் தயார் செய்து வைத்திருந்த காணொளியை கண்டு பாராட்டினார்.

செசி மையத்தில் நடைபெற்ற மாயா விருது நிகழ்விற்காக குழந்தைகளை நடனம் மற்றும் நாடக நிகழ்ச்சிக்கு தயார்படுத்தினர், வீதி நாடகம் மற்றும் இரண்டு நடனங்கள் அரங்கேற்றப்பட்டன.

தமிழ் இலக்கியத்தின் சிறந்த 20 நவீன சிறுகதைகளை வாசிப்பு இரவாக வாசித்தும், கதை சொல்லியும், விவாதித்தும் கொண்டாடினர்.

செசி மையத்தில் நடனம் மற்றும் பாடல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இயக்குநர் இளவரசியுடன் இணைந்து இளைஞர்கள் குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கினர்.

ஏக்தா பரிஷத், வீட்டுவேலை தொழிலாளர் சங்கம், மதுரை சீடு இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் விழாவில் இளைஞர்கள் வரவேற்பு மற்றும் ஏற்பாட்டு வேலைகளை சிறப்பாக செய்தனர். கரும்பாலையிலும் மகளிர் தினத்தை மதுரை சீடு பெண் தொண்டர்கள் நடத்தினார்கள்.

மார்கழியின் மழை தூறிய ஒரு அதிகாலை வேளையில் கரும்பாலை தெருவில் சீடு அலுவலகத்துக்கு முன்பு இளைஞர்களும் குழந்தைகளும் உற்சாகமாக நடனம் ஆடினர்.

மார்கழி உற்சவம் கலை நிகழ்வு கரும்பாலை பனைமரங்களின் அடியில் நடைபெற்றது. பொதுமக்களுக்கான இந்நிகழ்வில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் திறமையை அனைவரும் பாராட்டினர்.

கொடைக்கானல் மலை, பூங்கா, ஏரி, உயிரியல் மியூசியத்தை இருநாட்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இளைஞர்களும் இரசித்தனர்.

புத்தாண்டுக்கு முந்தைய இரவில் குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது வழக்கம். இளைஞர்கள் மொத்தம் 13 ஜாலியான போட்டிகளை நடத்தினர்.

புத்தாண்டு அன்று பேரா.தர்மராஜன் அவர்கள் இளைஞர்கள், குழந்தைகளிடையே உரையாற்றினர்.

தேசிய இளைஞர் தினத்தில் கணிணி வரைபட வல்லுநர். பத்திரிக்கையாளர் இரவிக்குமார் இளைஞர்களிடையே அரசியல் விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு குறித்து தெளிவான சிந்தைனையின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

இளைஞர்கள் பிளாக் தண்டர் பொழுதுபோக்கு பூங்காவிற்கு சென்று வந்தனர்.

சுவிட்சர்லாந்து நண்பர் ஆண்ட்ரியாஸ் கற்பித்தல் குறித்த பயிற்சியினை இளைஞர்களுக்கு வழங்கினார்.

விஜி-முருகேஸ் தம்பதிகள் ஜப்பான் குறித்து பேசினர். புகைப்படங்களை திரையிட்டனர்.

ஜெர்மன் பல்கலைக்கழக மாணவர்கள் மதுரை சீடு அரங்கங்களை பார்வையிட்டு, இளைஞர்களிடம் பேசினர்.

மதுரை சீடு இளைஞர்கள் 24.02.2017 அன்று தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் தென்னிந்திய மக்கள் நாடக கலை விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்று 5 நாடகங்களை கண்டு களித்தனர்.

ஸ்ரீரசா இயக்கிய மதுரை கூடல் அரங்கின், “ஆதலினால்” நடப்பு அரசியலை நையாண்டி செய்யும் விதமாகவும், உள்ளீடற்ற அரசியல் பம்மாத்துகளை கேள்வி கேட்பதாயும் அமைந்து இருந்தது. 

நெல்லை சரோஜ் கலைக்குழுவின், “மனுஷி” பெண் அடிமைப்பட்டதையும், வரலாறு தோறும் பெண்களுக்கு நடந்த அநீதிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை மௌனமாய் கடந்து போகும் சாமானியனை உலுக்குவதாக இருந்தது . 

வ.கீதா இயக்கிய மரப்பாச்சி குழுவின், காவல் துறை எதேச்சதிகாரம், விசாரணை மரணத்திற்கு எதிராக கலகக்குரல் எழுப்பிய சுடலையம்மா என்பவர் சாட்சி கூறுவதாக இருந்த “சுடலையம்மா” ஒரு நபர் நாடகம் 

தேனி செவக்காட்டு கலைக்குழுவின் , விவசாயிக்கு நாட்டில் கோவணம் கூட மிச்சம் இல்லை என்றும், விவசாயியை மரணகுழியில் தள்ளும் வணிக தந்திரங்கள், அரசின் பாரபட்சம், சமூகத்தின் மௌடீகத்தை முகத்தில் அறைவது போல பதிய வைத்த “நெல்லு விளையட்டும்” நாடகம் 

கலைஞர்களின் உடல் மொழி, வசனம் , ஒலி ஒளி அமைப்பு, உடை , ஒப்பனை என்று வித்தியாசமான நாடக அனுபவத்தை அளித்த கிரேக்க வரலாற்று நாடகமான “அஃமேனோன்”. 

மேலும் தஞ்சாவூர் பெரிய கோவில், அரண்மனை, கல்வெட்டுகள், வெண்கல சிற்பங்கள், கல் சிற்பங்கள், இரவு பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்ற “பிரகன் நாட்டியாஞ்சலி” உள்ளிட்டவற்றை ரசித்தனர். (அருண்குமார்)

பாண்டிச்சேரி கட்டுமரான் மையத்தில் நடைபெற்ற நீதி மற்றும் அமைதிக்கான இளைஞர்கள் பயிற்சி முகாமில் முத்துப்பாண்டி, அருண்குமார், முத்தையா, சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு சமூக ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு பெற்றனர்.

சுவிட்சர்லாந்து நண்பர், ஓவியர் நேசா அவர்களின் வாழும் துணிகள் தையல் வகுப்பில் இளைஞர்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

தேசிய அறிவியல் தினத்தில் இளவரசியின் உதவியோடும், தொண்டர்களின் வழிகாட்டுதலோடும் குழந்தைகள் அறிவியல் உண்மைகளை நாடகவடிவில் வழங்கினர்.

இராஜபாளையத்தில் உள்ள சாரோன் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியை கார்த்திக்பாரதி அவர்களுடன் சேர்ந்து அருண்குமார், சூர்யா பார்வையிட்டனர்.

மு.ராமசாமி இயக்கிய நாடகத்தில் நமது இளைஞர் வாசிம்கான் நடித்தார்.

உலக கதை சொல்லல் தினத்தில் இளைஞர்கள் நாட்டுப்புறகதைகள், நவீன சிறுகதைகள், மேலைநாட்டு கதைகள், சிறார் கதைகள்  என கலந்து கட்டி பல கதைகளை குழந்தைகளுக்கு கூறினர்

உலக கவிதைகள் தினத்தில் சங்க காலம் முதல் நவீனகாலம் வரை தமிழில் முக்கியமான கவிஞர்களின் முக்கியமான கவிதைகளை குழந்தைகளுக்கு இளைஞர்கள் வாசித்தனர்.

உலகநாடக தினத்தில் தெனாலிராமன், பீர்பால் தொடங்கி, அசோகமித்திரன் கதைகள், நடப்பு நிகழ்வுகள், அரசியல் நையாண்டி, சமூகவிழிப்புணர்வு தொடர்பான விஷயங்களை ஒருநபர் நாடகமாக இளைஞர்கள் குழந்தைகளுக்கு நிகழ்த்தி காட்டினர்.

https://www.youtube.com/watch?v=LigXq9nJQB0&t=27s

குழந்தைகளை திருமலைநாயக்கர் மஹால், ஆவின் பால்பண்ணை, தெப்பக்குளம், சங்கத்தமிழ் காட்சி கூடம், இராஜாஜி பூங்கா, உலகத்தமிழ்ச்சங்கம் போன்ற இடங்களுக்கு இளைஞர்கள் அழைத்துச்சென்றனர்.

இரண்டாவது ஆண்டாக குக்கூ நடத்திய கலைப்பொருட்கள், பொம்மைகள் செய்யும் பயிற்சியில் குழந்தைகளும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

மதுரை சீடு ஆதரவாளர்கள் லாரா மற்றும் ஜான் ஆங்கிலம் உச்சரிப்பு மற்றும் வாசிப்பை குழந்தைகளுக்கு எவ்வாறு கற்றுத்தருவது என்று இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பொங்கல்  தினத்தன்று மதுரை சீடு 18ஆம் ஆண்டு கொண்டாட்டங்களை சிறப்பிக்கும் விதமாக 18 பானைகளில் பொங்கல் வைத்து இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் சிறப்பித்தனர்.

https://www.youtube.com/watch?v=FvHZfCmq8OQ&t=46s

கிறிஸ்துமஸ் அன்று தொண்டர் சுதா கிறிஸ்துமஸ் பாட்டி வேடமிட்டு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் வீடுகளுக்கு சென்று இனிப்புகள், பரிசுகள் வழங்கி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

வருடாந்திர கோலப்போட்டி கரும்பாலை பொதுமக்களுக்கு நடத்தப்பட்டது. நிறைய பெற்றோர்களும், பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இளைஞர்கள் நடுவர்களாக இருந்து சிறந்த கோலங்களை தேர்வு செய்தனர். கோலப்போட்டி பரிசளிப்பு விழாவை ஒரு உற்சவம் போல் நடத்தினர். கரும்பாலை முழுக்க ஊர்வலமாக சென்று அனைவருக்கும் பரிசுகள் வழங்கினர்.

மதுரை சீடு முன்னாள் மாணவர்களின் விழுதுகள் தீபாவளி கொண்டாட்டம் காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. முன்னாள் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை இந்நாள் இளைஞர்கள் ஒருங்கிணைத்தனர்.

இனிய நினைவுகளும், நெகிழ்ச்சி தருணங்களும், அன்பு பெறுதலும் கொடுத்தலும், நட்பு பரிமாறுதலும், கொண்டாட்ட நிகழ்வுகளும் சங்கமித்த நிறைவான நாள். வருடாவருடம் விழுதுகள் அமைப்பு மெருகேறியும், வலுவாகவும் பரிணமிக்கிறது. இந்த வருட சந்திப்பில் P.மணிகண்டன், கணேஷ்பாபு, கற்பகஜோதி ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டது பூரிப்பு. குழந்தைகளாக சீடுக்கு வந்தவர்கள் தற்போது அவரவர் குழந்தைகளுடன் வருவதை பார்ப்பது அலாதியானது. மேலும் முனியசாமி, அருண்குமார், முத்துப்பாண்டி, மகுடபதி, ராம்கி, பாலமுருகன், சுரேஷ் கண்ணன், கற்பக செல்வி, பார்வதி, பிரியா ஆகியோர் சந்திப்பில் கலந்து கொண்டனர். பலர் இந்த வருட சந்திப்பில் கலந்து கொள்ள முடியாத காரணத்தை பகிரந்துள்ளனர். பலர் சந்தாவும், நன்கொடையும் அளித்துள்ளனர். தீபாவளியன்று அருண்குமார்,ஒ.மணிகண்டன் கணேஸ்குமார்,முத்துபாண்டி முனிய்சாமி,ராம்கி போன்றோர் அலுவலகம் வந்து பேசி மகிழ்ந்து சென்றனர்

விளையாட்டு நாள் விழாக்கள், வசந்தமுகாம், New Year Eve போன்றவை இளைஞர்களின் தலைமைத்துவ பண்புகளை அடையாளம் காட்டும் நிகழ்வுகளாகும்.

நாகார்ஜூன் – எலக்ட்ரீசியன் பணிகள்

முத்தையா – தமிழ் தட்டச்சு, பெயிண்டிங், எலெக்ட்ரிக் பணிகள்

சூர்யா – நடிப்பு, நாடக இயக்கம்

ஆனந்த் – புகைப்படம், படதொகுப்பு

விக்கி – புகைப்படம், படத்தொகுப்பு, குறும்பட இயக்கம்

கார்த்திக் – ஆவணப்படுத்துதல்

சர்மிளா – கவிதை, ஆங்கில மொழிபெயர்ப்பு

முத்துகணேஷ் – புகைப்படம், நாடக இயக்கம்

வாசிம்கான் – நடிப்பு

போன்றோரோடு அனைத்து தேடல் இளைஞர்களுமே அடிப்படை கணிணி அறிவு, நடனம், நாடகம், கதை சொல்லுதல், கைவினைப்பொருட்கள் செய்தல், நடிப்பு என திறமைசாலிகளாக விளங்குகினர். முக்கியமாக உடல் உழைப்பு சார்ந்த பணிகளை எவ்வித கூச்சமும் இன்றி வழங்குவதில் மதுரை சீடு இளைஞர்கள் சளைக்காதவர்கள்.

DSC_0126

 DSC_0081DSC_0348

DSC_0016DSC_0089

DSC_0141DSC_0307

ஓர் அரங்கத்தின் கதை – 30

2015 – 2016 ஆம் ஆண்டு

பதினேழாம் ஆண்டு

2015 – 2016 உற்சாகமான ஆண்டாக துவங்கியது.

DSC_0154.JPG

செசி மைய கிராமப்புற குழந்தைகளுக்கும், மதுரை சீடு நிறுவன குழந்தைகளுக்கும் சேர்த்து 22.05.2015, 23.05.2015, 24.05.2016 ஆகிய தேதிகளில் கோடை கால முகாம் நடந்தது. தேடல் இளைஞர்கள் கருத்தாளர்களாகவும், பயிற்சியாளர்களாகவும் பங்கு கொண்ட நிகழ்வாக அது அமைந்தது.

கரும்பாலையில் (3 நாட்கள்), சிறுமலை கடமான்குளத்தில் (4 நாட்கள் உண்டு உறைவிட முகாம்) என வசந்த முகாம் 7 நாட்கள் நடத்தப்பெற்றது. மலை சார்ந்த விளையாட்டுக்கள், கலைகள், கலைப்பொருட்கள் என செம ஜாலியான இம்முகாமில் குழந்தைகள், இளைஞர்கள் ஓர் குடும்பமாய் அனுபவங்களை பெற்றனர்.

இளநிலை பட்டப்படிப்புகளில் முதலாமாண்டு படிப்போர் – 9 பேர், இரண்டாமாண்டு படிப்போர் – 10 பேர், மூன்றாமாண்டு படிப்போர் – 3 பேர், நான்காமாண்டு படிப்போர் – 4 பேர், பட்டப்படிப்பு முடித்தோர் – 4 பேர் என 30 பேர் கொண்டவர்களாக தேடல்கள் அரங்கம் விளங்கியது. இதில் 21 பேர் முதல் தலைமுறை கல்லூரி செல்பவர்கள். 26 பேர் மதுரை சீடு மைய தினசரி நடவடிக்கைகளில் பங்கு கொண்டவர்கள்.

திலகவதி, மாணிக்கராஜா, ராம்கி போன்றோர் இன்ஜினியர் படிப்பையும், மதன், முத்தையா இளங்கலை படிப்பையும், முடித்தனர். சுரேஷ்கண்ணன் பாலிடெக்னிக் படிப்பையும் முடித்தனர்.

ஒரு சிலரைத் தவிர அனைவருமே மதுரை சீடு-இல் குழந்தைகளாக இருந்து இளைஞர்களாகி தொண்டர் பணியை செய்பவர்கள்.

சேவாலய விடுதி வரலாற்றில் இரண்டாமாண்டாக பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி 100% வெற்றியை ராம்கி தலைமையிலான தொண்டர்கள் ஈட்டி தந்தனர்.

சுவிஸ் Intern Volunteer Mirjam ஜூலை 2015 முதல் ஆகஸ்ட் 2015 வரையும், பெல்ஜியம் Volunteer Pascal 18.02.2016 முதல் 06.03.2016 வரையும், சுவிஸ் ஆதரவாளர் Keith Rossborugh 15.02.2016 முதல் 28.02.2016 வரையும், இளவரசி ஆண்டு முழுமைக்கும் தேடல்கள் இளைஞர்களின் ஆளுமை மேம்பாட்டுக்கு பல்வேறு வகையான பணிகளை ஈடுபாட்டுடன் செய்தனர்.

Strategic Planning Workshop -ஐ 05.09.2015-இல் இளைஞர்களுக்காக இளவரசி ஆகாஷ் ஹோட்டலில் நடத்தியது இவ்வாண்டின் முக்கிய நிகழ்வு.

30.01.2016, 31.01.2016 இல் Learning Difficulties Workshop -ஐ Mr.Andreas உடன் இணைந்து இளவரசி நடத்தினார்.

இவ்வாண்டின் Survey on Basic Reading and Arithmetic- ஐ இளைஞர்கள் கரும்பாலை, SM நகர், இந்திரா நகர், செனாய் நகர் பகுதிகளில் என்னுடன் இணைந்து இளைஞர்கள் செய்தனர்.

புதுயுகம் இதழ்களை காட்சிப்படுத்திய ஓர் கண்காட்சியிலும், புதுயுகம் 25வது வெளியீட்டு விழாவிலும், 10 Creative Writting Session-களிலும் குழந்தைகள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

01.01.2016 பேரா.பிரபாகர் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டு LIFE LONG LEARNING என்ற தலைப்பில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களின் கதைகளை கொண்டு புத்தாண்டு செய்திகளை வழங்கினார்.

02.01.2016 அன்று பேரா. எவாஞ்சலின் மனோகரன் அவர்களின் நற்சிந்தனை, நற்செயல்பாடுகள், நற்மதிப்புகளின் வழியே மனநிறைவான வாழ்க்கை என்ற பொருளில் குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் ஓர் அமர்வை வழங்கினார்.

04.01.2016 இல் PECHA KUCHA 20X20 என்ற தலைப்பில் இயக்குநர் இளவரசியின் கருத்தாக்கத்தில் ஒரு முழுநிலவு மாலை பொழுதில் தொடங்கி 20 இளைஞர்கள் இருபது இருபது நிமிடங்களாக வழங்கிய PPT Presentation பின்னிரவு வரை தொடர்ந்தது. இந்நிகழ்வு இளைஞர்களின் பெரும் ஆக்கச் சக்தியை பெற்றோர்கள் உணரும் வகையில் செய்தது.

25.01.2016, 26.01.2016 இரண்டு நாட்கள் Creative Self Expression Workshop –ஐ பேராசிரியர் பிரபாகரை கொண்டு செசியில் நடத்தினோம். 20 இளைஞர்களுக்கு LIFE MASK MAKING, STORY READING, MUSIC LISTENING, POETRY READING என வாழ்வில் இரசனைகள் குறித்த பல்வேறு புரிதல்கள் ஏற்படுத்தப்பட்டன.

Women Empowerment, Hand Crafts making, Drawing, Cooking, Theatre, Story telling என ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல்வேறு நிகழ்வுகளை இயக்குநர் இளவரசியுடன் இணைந்து குழந்தைகளுக்கும், இளைஞர்கள் நடத்தினர்.

உலக நாடக நாள் விழாவில் பேராசிரியர் இளங்கோ பங்கு கொண்டார்.

நெல்சோறு – விக்னேஷ்

திருப்பிக்கொடு – சர்மிளா

பெண்ணுரிமை – இளவரசி

பள்ளி திறக்கும் நாள் – மதன்

விடிஞ்சாப் பொங்கல் – சூர்யா

போன்றோர் நாடகங்களை இயக்கி வழங்கினர்.

இளவரசியின் பெண்கள் குறித்த வீதி நாடகம் பேரா.இளங்கோவை பெரிதும் ஈர்த்தது. அமெரிக்கன் கல்லூரி, செசி, உள்பட 10 இடங்களில் அவ்வீதிநாடகம் நிகழ்த்தப்பட்டு பலரின்  பாராட்டையும், கவனத்தையும் பெற்றது. இதில் பங்கு கொண்டவர்கள் அனைவரும் 11ஆம் வகுப்பு குழந்தைகளாவர்.

20.03.2016 உலக கதை சொல்லல் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல இளைஞர்களை கதைசொல்லிகளாக இந்நிகழ்வு மாற்றியது.

இவ்வாண்டு முழுமையும் பசுமை நடையின் மூலமாக கீழக்குயில்க்குடி, கீழடி (3 சுற்றுகள்), வரிச்சியூர், சமணர் மலை, முத்துப்பட்டி பெருமாள் மலை, மாடக்குளம், விக்கிரமங்கலம் போன்ற இடங்களுக்கு சென்று வந்து வரலாற்று அறிவை பெருக்கிக் கொண்டனர். குழந்தைகளை பொறுப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பை தேடல் இளைஞர்கள் நாகார்ஜூன், விக்கி, மதன், முத்தையா, ஆனந்த், கார்த்திக் போன்றோர் சிறப்பாக செய்தனர்.

இவ்வாண்டில் கடவூர் மலையேற்றம், கடவூர் வரை சைக்கிள் பயணம், சத்திரப்பட்டி கால்வாய்கள், இராமேஸ்வரம், தஞ்சாவூர், கும்பக்கரை, புதுச்சேரி என பல இடங்களுக்கும் இளைஞர்கள் பயணித்திருக்கிறார்கள்.

காக்கா முட்டை, குற்றம் கடிதல், பசங்க – 2 திரைப்படங்களை குழந்தைகள், இளைஞர்கள், பெற்றோர்களுடன் சேர்ந்து திரையரங்குகளில் பார்த்த நிகழ்வுகள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.

Hariharan mani Skype வழி Science Class, Experimental Science Activities, Basic Science Experiments, Science of Sounds, அமெரிக்கன் கல்லூரி தொலை நுண்ணோக்கியில் முழு நிலவை இரசித்தல், தேசிய அறிவியல் நாள் விழா என இளவரசி அவர்களின் நிகழ்வுகள் குழந்தைகள், இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தை தொடர்ந்து குன்ற விடாமல் செய்தன.

ஆகாய கங்கை சமூக அறிவியல் மன்றம், வான்முகில் கலை மன்றம், அன்னை மருத்துவ மன்றம், சுவடுகள் விளையாட்டு மன்றம், முக்கிய தினங்கள், மத கொண்டாட்டங்கள் என ஒவ்வொரு விசயமும் ஒவ்வொருவரையும் செதுக்குவதாக இருந்தன.

விழுதுகள் ஓ.மணிகண்டன், C.அருண்குமார், FMS INDIA ஆதரவாளர் வினோத் முயற்சியுடனும், உதவியுடனும் சென்னை நிவாரணத்திற்கு தங்களால் முடிந்த பணிகளை இளைஞர்கள் செய்தனர்.

29.12.2015 இல் நடைபெற்ற பெரும் கலை சங்கமமாக மார்கழி உற்சவம் நடந்தேறியது. மதுரை சீடு குழந்தைகளின் கண்கவர் 5 நாடகங்கள். செசி மைய குழந்தைகளின் கோட்டரசு நாடகம், தங்கப்பாண்டி குழுவினரின் ஒயிலாட்ட நிகழ்வு போன்றவை மறக்க இயலாத நிகழ்வாக குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் மாற்றியது.

மெல்லியல் அக்கா இம்முறை தேடல் இளைஞர்களின் பெரும் ஈடுபாட்டை உணர்ந்து இளைஞர்களிடையே பெரும்பாலான நேரங்களை செலவழித்தது பெரும் உற்சாகமாகவும், கொண்டாட்டமாகவும் இருந்தது.

விழுதுகள் அரங்க உறுப்பினர்கள் தீபாவளி சந்திப்பில் பேசும்போது, மதுரை சீடு குழந்தைகள், இளைஞர்களின் கலைத்திறமைகள் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன. இந்நாளை நாங்கள் வருடந்தோறும் எதிர்பார்க்கிறோம். உறுப்பினர்கள் வருடந்தோறும் தங்கள் குடும்பத்துடன் கண்டிப்பாக கலந்து கொள்வோம். நல்லா படியுங்க. திறமைகளை மென்மேலும் வளர்த்துக்குங்க. பெரிய பெரிய படிப்புகளில் சேருங்க.. அப்பா, அம்மாவ நல்லா கவனிச்சுக்குங்க. எங்கள மாதிரி விழுதுகள் உறுப்பினர்களாகி இன்னும் நிறைய குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுங்க. என்று மனதார வாழ்த்தினர்.

தொடரும்…